உடைந்த மரக்கலம்
( கவிஞர் : சீர்காழி இறையன்பனார் )
நதியின் அலைகள் கரையை மோதும்
நாவால் இறையின் நாமம் ஓதும்;
உதிரும் பூக்கள் உண்மையைக் கூறும்
உலக வாழ்க்கை எத்தனைக் காலம் ?
மழையின் துளிகள் முத்துக்களாகும்
மனித உள்ளம் சிப்பிகளாகும் ;
இழையும் வாய்மை இதயங்களாகும்
இரவும் பகலும் உதயங்களாகும் !
மூடிமறைக்கும் மெளனராகம்
முன்னுரையில்லா புத்தகமாகும் ;
மோதிமருட்டும் இடியின் முழக்கம்
முன்னவன் ஆற்றலின் முத்திரையாகும் !
விட்டிலின் தொட்டில் விடிவிளக்காகும்
விதியின் பட்டியில் விபத்துக்களாகும் ;
நட்டமும் லாபமும் நம்கணக்காகும்
நாணயமில்லா சில்லரையாகும் !
கற்பனை விற்பனை வாணிபம் யாவும்
கயிறாய் மணலைத் திரிப்பதாகும் ;
நற்பயனில்லா அமல்கள் யாவும்
நட்டாற்றில் உடைந்த மரக்கலமாகும் !
( நர்கிஸ் பெண்கள் மாத இதழ் - மே 2010 )
No comments:
Post a Comment