Tuesday, August 3, 2010

ரமழான் நோன்பு பற்றி நபியின் வார்த்தைகள்

ரமழான் நோன்பு பற்றி நபியின் வார்த்தைகள்



உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்." (ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொருத்த மற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளிலிருந்தும் தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேச வேண்டாம். கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் கூறட்டும். (ஸஹீஹூல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக் கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை." (ஸஹீஹூல் புகாரி)

தன்னை நிழலிட்டுள்ள இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்றதல்ல. இது நோன்பின் மாதம். நோன்பு அல்லாஹ்வுக்குரியது.. அவனே கூலி கொடுக்கிறான். எவ்வித தேவையுமற்ற உபகாரியமான அல்லாஹ்வின் கூலி மகத்தானது. பூரணமானது, விசாலமானது என்ற உறுதியான நம்பிக்கை நோன்பாளியின் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கம் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: "நோன்பைத் தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். அவன் மனோ இச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான்."

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; மறுமையில் தனது இறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசத்தைவிட மணமிக்கது" என நபி (ஸல் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹூல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால் மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்திய இம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும் இரவுகளில் தஹஜ்ஜத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபட வேண்டும்.

No comments: