இனியதொரு கவிதையிது.. ஒரு தாய்மை அடைந்தவள் தன் மழலை நோக்கி காணும் கனவுகளும் .. அந்த உணர்வுகளை உள்ளடக்கிய கவிதையாக.. இதோ உங்களை நோக்கி,
எண்ணமலர் இதழ்விரித்து
ஏந்திழையாள் தாங்கிநின்ற
இன்பமலர் பூத்ததம்மா!
இதயமெங்கும் இன்பங்களே!!
தன்வயிற்றில் கருவாகி
தன்பெயரைச் சொல்வதற்கு
பிள்ளைவரப் போகிறான் என்பதிலே மகிழ்வுண்டு
பெண்ணெனவேப் பிறந்தாலும் போற்றும்நல் குணமுண்டு!
ஐயிரண்டு திங்களிலும்
அளவிலாக் கனவுகள்!
நாளைவரும் நாள்காண
நங்கையவள் ஏக்கங்கள்!
சிறுமழலை எழிலெண்ணி
சிந்தாத புன்னகைகள்!
குறுநகைக் கோலங்களில்
குலமகளின் வதனங்கள்!!
பிஞ்சுவிரல் நெஞ்சில்தவழ
காத்திருக்கும் தாயவளோ?
கொஞ்சிதினம் மகிழ்ந்திருக்க
பிள்ளைவரும் நாளெதுவோ?
அடிவயிற்றில் நடக்குமந்த
ஆனந்தப் பதிவுகளை
அத்தானிடம் பகிர்ந்தபடி
அனுதினமும் நகர்ந்ததடி!!
பூத்திருக்கும் தாமரைபோல்
பூங்காற்றில் தேன்சுரக்க..
பூமழலை முகம்காண
பூத்திட்டப் பூ இவளோ?
தத்திநடக்கும் முத்துச்செல்வம்
தரைமேல்நடக்கும் தங்கத் தளிரோ?
முத்தம்கொடுத்து மோகனம்பாடும்
பத்துத்திங்கள் பவளநிலாவோ?
எங்கள்வீட்டுச் செல்லக் கண்ணே!
உன்னைக் காண உள்ளம் துள்ளும்!
எந்தன் தோட்ட ரோஜாப் பூவே
நீதான்என்றும் வாழ்வின் சொந்தம்!!
அன்புடன்,
காவிரிமைந்தன்
ருவைஸ், அபுதாபி,12.09.2010
No comments:
Post a Comment