இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்:
ஷவ்வால்
ஈதுல் ஃபித்ரு பெருநாள்
ஈது பெருநாட்கள் கடமையாக்கப்பட்ட விபரம்:
இஸ்லாத்தில் ஈது பெருநாட்கள் கடமையாக்கப்பட்டதற்கு காரணம்; 1.அல்லாஹுத்தஆலா அடியானுக்கு இட்ட கட்டளையை ஏற்று, அவனுக்கு முற்றிலும் அடிபணிந்து அதை நிறைவேற்றிய மகிழ்ச்சியை அவனது தூதர் காட்டிய வழியில் வெளிப்படுத்துவது. 2. இரத்த பந்த உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உதவி செய்து அவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்வது.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹுடைய தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வந்த சமயம் மதீனாவாசிகள்(அன்சாரிகள்) இரண்டு நாட்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவ்விரு நாட்களில் ஏன் விளையாடுகிறீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, அறியாமைக்காலத்தில் இவ்விரு நாட்களில் விளையாடுவோம் என்று பதில் கூறினார்கள். அப்போது அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இவ்விரு நாட்களை விட சிறந்த நாட்களை உங்களுக்கு பகரமாக்கி இருக்கின்றான். அதுதான் ஈதுல் அழ்ஹா, ஈதுல் ஃபித்ரு (ஆகிய இரு பெருநாட்கள்) ஆகும். (அஹ்மத்நஸயீஇப்னு ஹிப்பான்)
இதன்படி, முதல் ஈதுல் ஃபித்ரு பெருநாள் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் கடமையாக்கப்பட்டது.
ஈதுல் ஃபித்ரு பெருநாள் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய செயல் பாடுகள்:
1. குளிப்பது
2. புதிய ஆடைகள் அணிந்து கொள்ளுதல், அல்லது தன்னிடம் இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தொழுகைக்கு புறப்படும் முன் உணவு உண்டுகொள்ளுதல். நபி(ஸல்) அவர்கள் ஈதுல் ஃபித்ரு பெருநாளன்று தொழுகைக்குச் செல்லும் முன் ஒற்றைப்படையாக பேரீத்தம் பழங்களை சாப்பிட்டார்கள் என்று அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4. ஜக்காத்துல் ஃபித்ரை தொழுகைக்கு முன்பே உறியவர்களுக்கு கொடுத்து விடுதல். இரண்டரை கிலோ கோதுமை அல்லது அரிசி போன்ற தானியமாகவோ, அல்லது அதன் கிரயத்தையோ ஃபித்ராவாக நிறைவேற்ற வேண்டும்.
5. இரத்த பந்த உறவினர்கள் ஏழைகளுக்கு உபகாரம் செய்தல்.
6. தொழுகைக்குச் செல்லும்போது ஒரு வழியாகவும், திரும்பும்போது மற்றொரு வழியாகவும் வருதல்.
7. பெருநாளன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டுக்களிலும் ஈடுபடலாம்.
இதனால் கடமையான தொழுகையைவிட்டு விடாமலும், முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும்.
முக்கிய நிகழ்வுகள்
உஹது யுத்தம்:
ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு, ஷவ்வால் மாதம் ஏழாம் நாள் சனிக்கிழமை நிகழ்ந்தது. இப்போர் முஸ்லிம்களுக்கு கடும் சோதனையாக அமைந்தது. இதில் நபி(ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் ஹம்ஜா(ரழி) அவர்கள் கொல்லப்பட்டு ஷஹீது (வீரமரணம்) அடைந்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்களின் முன் பல் உடைக்கப்பட்டு முகத்தில் காயம் ஏற்பட்டு, வழிந்த குருதியை துடைத்தவர்களாக...,
"அல்லாஹ்வின் தூதராகிய நான், மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க அவர்களோ என் முகத்தையும், முன் பல்லையும் உடைத்து விட எவ்வாறு அவர்கள் வெற்றிபெற முடியும்? என்று கூறினார்கள்".
இப்போரில் கதாதா(ரழி) அவர்களின் கண்ணில் காயம் ஏற்பட்டதால் விழி பிதுங்கி விட்டது. நபி(ஸல்) அவர்கள் அவரது கண்ணில் தனது கையை வைத்து துஆச் செய்தார்கள். மீண்டும் நல்ல கூர்மையான பார்வையை பெற்றுக் கொண்டார்.
அல்அஹ்ஜாப் யுத்தம்:
ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு, ஷவ்வால் பிறை 5ஆம் நாள் இந்த யுத்தம் நடைபெற்றது. இதை “கன்தக் யுத்தம்” என்றும் சொல்லப்படும். இதற்கு முன் நடைபெற்ற பத்ரு, உஹது யுத்தங்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும் மத்தியில் நடைபெற்று அவைகளில் முஸ்லிம்களே வெற்றி பெற்றனர். இவற்றை கவனித்துக்கொண்டிருந்த யூதர்கள், முஸ்லிம்களைத் தாக்குவதற்கு மக்கத்து குரைஷிகள் உட்பட அரபு நாட்டின் அனைத்து கூட்டத்தினரையும் ஒன்று திரட்டி ஒரு பெரும் படையை தயார் செய்து வந்தனர். இதற்கு காரணகர்த்தாவாக இருந்தது, யூதர்களில் பனூ நழீர் கூட்டத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் அவர்களில் ஒருவனான கஃப் இப்னு அஷ்ரஃப் இப்னு அக்தப் என்பவனும் ஆகும்.
இந்த விபரம் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியவரவே, சஹாபாக்களுடன் ஆலோசனை செய்தார்கள். சல்மான் ஃபார்ஸி(ரழி) என்ற தோழர், தங்களது பாரஸீக நாட்டில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அகழ் தோண்டி போரிடும் முறையை கூறினார்கள். அதனை ஏற்ற நபி(ஸல்) அவர்கள், மதீனாவைச் சுற்றி அகழ் தோண்ட கட்டளையிட்டு தாங்களும் அப்பணியில் ஈடுபட்டார்கள். இப்போர் முறையை புதிதாக பார்த்த யூதர்களையும், இணை வைப்போர்களையும்
அல்லாஹ் புறமுதுகிட்டு ஓடிடச் செய்தான். இப்போரைப்பற்றியே அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
“நிராகரித்தோரை அவர்களின் கோபத்துடனேயே அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் எந்த நன்மையையும் அடையவில்லை. நம்பிக்கையாளர்களுக்காகப் போரிட அல்லாஹ்வே போதுமானவன். அல்லாஹ் வலிமைமிக்கவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாக இருக்கிறான்”. குர்ஆன் (33;25)
ஆயிஷா(ரழி) அவர்கள்:
நபித்துவத்தின் 11ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களை மணமுடித்தார்கள். பெண்களில் அவர்களே அதிக மார்க்க ஞானமிக்கவர்களாக இருந்தார்கள்.
உம்மு ஸலமா(ரழி) அவர்கள்:
ஹிஜ்ரி 4ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதக்கடைசியில் நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரழி) அவர்களை மணமுடித்தார்கள்.
பனூ கைனூகா கிளையினருடன் போர்:
நபி(ஸல்) அவர்கள் யூதர்களில் பனூ கைனூகா கூட்டத்தினருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அவ்வொப்பந்தத்தை அவர்கள் முறித்து, முஸ்லிம்களுடன் வரம்பு மீறி நடந்து கொண்டதால் அவர்களுடன் போரிட நேர்ந்தது. இப்போர் ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை 15இல் தொடங்கி சுமார் 15 நாட்கள் நீடித்தது. இறுதியில் யூதர்கள் அனைவரும் சரணடைந்தனர்.
தாயிஃப் போர்:
ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் ஹுனைன் யுத்தம் முடிந்தவுடன் தாயிஃப் கோட்டை முற்றுகை தொடங்கியது. இங்குள்ள ஸகீஃப் கூட்டத்தினருக்கு எதிராக பிரார்த்தனை செய்யுமாறு நபி(ஸல்) அவர்களிடம் சிலர் வேண்ட, அவர்களின் நேர்வழிக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள்:
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ அய்யூப்(ரழி) அறிவிக்கிறார்கள்: யார் ரமழான் மாத்தில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்புகள் வைக்கிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போன்றாவார். (முஸ்லிம்)
தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய்.
(0559764994)
--
No comments:
Post a Comment