Saturday, October 2, 2010

பாபர் மசூதியும் பஞ்சாயத்துத் தீர்ப்பும்! ------------------ பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி

பாபர் மசூதியும் பஞ்சாயத்துத் தீர்ப்பும்!
------------------ பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி,
பொதுச் செயலாளர், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

பாபர் மசூதி இடப் பிரச்சனை குறித்து அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னெள கிளை
30-09-2010 அன்று வழங்கிய தீர்ப்பு பல்வேறு கருத்துகளை உருவாக்கியிருக்கிறது.நீதிபதிகள்
சிபகதுல்லாஹ் கான், சுதிர் குமார் அகர்வால், தர்ம் வீர் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்
அளித்துள்ள தீர்ப்பு இந்து மகா சபை, நிர்மோஹி அகாரா மற்றும் முஸ்லிம்களுக்கும்
ஆக மூன்று கூறுகளாக நிலத்தைப் பங்கு போட்டிருக்கிறது.
நீதிமன்றம் என்பது ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள், நிரூபிக்கப் பெற்ற
நடப்புகள் இவற்றைக் கொண்டு தெள்ளத் தெளிவான தீர்ப்பினை அளிக்கவேண்டுமென்பதே
நடைமுறைச் செயல்பாடாகும்.உதாரணமாக ஒரு குழந்தைக்கு உரிமையும் சொந்தமும்
கொண்டாடித் தான்தான் தாய் என இருவர் நீதிமன்றத்தை அணுகுவார்களேயானால்
உரிய வகையில் விசாரித்துப் பெற்றது, வளர்த்தது, பேணிப்பாதுகாப்பது, போஷிப்பது,
இருப்பது எனப் பல்வேறு கூறுகளைத் தகுந்த ஆவணம், சாட்சியம், பரிசோதனை
முதலிய தன்மைகளைக் கொண்டு ஆய்ந்து இன்னாருக்குரியது இக் குழந்தை என
நீதிமன்றம் தீர்ப்பளிப்பதே முறைமையுடையதாகக் கருதப்படக்கூடும். அதை விடுத்து
இருவருக்குமே இக் குழந்தை உரியதெனத் தீர்ப்பு அமைந்தால் குழப்பமே மிஞ்சும்.
அதேபோன்று ஒரு நிலம் யாருக்குச் சொந்தம் எனஇருவருக்கிடையே வழக்கு வரும்போது தீர விசாரித்து
இன்னாருக்குத்தான் இது உரியது எனத் தீர்ப்பளிப்பதே நீதிமன்றச் செயல்பாடாகக்
கருதப்படுகிறது. அவ்வாறின்றி இருவருக்கும் பங்கு போட்டுத் தருவது எங்களுக்குப் பங்கு
போட்டுத் தாருங்களெனெ வாதியும் பிரதிவாதியும் கேட்டுக் கொள்ளாத நிலையில் நீதி
மன்ற நடவடிக்கையாக அமையவியலாதெனச் சட்டவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
பிரச்சனைக்குரிய மொத்த வளாகமும் யாருக்குரியதென்பதே வழக்கின் அடிப்படையான
அம்சமாகும்.மூன்று தரப்பினர் தங்களுக்கே முழுமையாகச் சொந்தமென வழக்கு தொடுத்தனர்.
இன்று நேற்றல்ல 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்கு இது. மேலும் இது
சம்பந்தமாக ஒரு வழக்கல்ல இரு வழக்கல்ல ஏறக்குறைய 88 வழக்குகள் போடப்பட்டன.
இது உணர்வுப்பூர்வமானதும் மத சம்பந்தப்பட்டதுமானதெனக் கூறித் தங்கள் அரசியல்
வாழ்வுக்கும் மேன்மைக்கும் உரிய தீனியாக அரசியல்வாதிகள் இப் பிரச்சனையை உலகளவில்
பெரிதுபடுத்தி இந்திய அளவில் ஒன்றுபட்டிருந்த மக்கள் மனதில் விஷத்தை விதைத்தார்கள். பிரச்சனைக்குரிய
இடத்தில்கூட ஒருவருக்கொருவர் நேசத்துடனும் பாசத்துடனும் அதுவரை வாழ்ந்துவந்த இரு
சமுதாயத்தினரின் நிலையை மோசப்படுத்தினார்கள். இந்தியத் திருநாட்டில் கோலோச்சி இருந்த
சகோதரத்துவத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் சேதம் விளையச் செய்தார்கள்.
பிற நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துவத் தேவாலயங்கள் சில இப்போது
பள்ளிவாசல்களாக மாறியுள்ளன. உதாரணமாக, இலண்டனின் புறப்பகுதியில் க்ரே ஃபோர்ட் எனும் இடத்தில்
இப்போது பள்ளிவாசல் அமைந்துள்ள கட்டடம் கிறிஸ்தவ சர்ச் ஆக இருந்த இடமாகும். இந்த இடத்தைக்
கிறிஸ்தவர்களால் பராமரிக்கப்பட முடியாமல் போய்விட்டது. அவ்ர்களால் அந்த ஆலயத்தைத் தொடர்ந்து
நடத்தமுடியவில்லை. அந்த கட்டடத்தை முஸ்லிம்கள் வாங்கிப் பள்ளிவாசலாக்கியுள்ளனர். ஈத் பெருநாள்,
ஜூம் ஆ தொழுகைகள் உள்பட அனைத்துத் தொழுகைகளும், மாலை மதரஸாவும் நடைபெற்று வருகின்றன.
இதைப் போல பக்கிங் ஹாம் உள்ளிட்ட பல்வேறிடங்களிலும் சர்ச் இருந்த இடங்களில்
பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன. இதனால் அங்கு எந்தவொரு பிரச்சனையும்
எழவில்லை. அங்குள்ள அரசியல்வாதிகள் இதுவிஷயத்தில் தலையிடுவதுமில்லை. அதனால் அமைதி
குறைவதுமில்லை.
தொல்லியல் ஆய்வுத்துறையினரின் கூற்றுப்படி- அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி-
பல ஆண்டுகளாகக் கேட்பாரற்றுக்கிடந்த இடிந்துபோன கட்டடம் சிதைந்திருந்த இடத்தில் பாபரி மசூதி
கட்டப்பட்டதெனத் தெளிவாகிறது.கோயில் ஒன்று இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி கட்டப்படவில்லை, மாறாக
இடிபாடுகளாகக் கிடந்த ஓரிடத்தின்மீதுதான் மசூதி கட்டப்பட்டதென்பதை நீதிபதி சிபகதுல்லாஹ் கான்
தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதியாக விளங்கிய இடத்தில் 23-12-1949 அன்று வலுக்கட்டாயமாகச்
சிலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டுப் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன. பி.ஜே.பி. தனது அரசியல் இலாப
நோக்கில் இப் பிரச்சனையைக் கையில் எடுத்து அதன் விளைவாக 1992 டிசம்பர் 6 ல் மசூதி சூறையாடப்பட்டுத்
தரைமட்டமாக்கப்பட்டது.இது வரலாற்றுப்பூர்வமான ஆதாரமாகும்.இதனை அலகாபாத் உயர்நீதிமன்றத்
தீர்ப்பு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதி இருந்துவந்ததும் பல நூறாண்டுகள் தொழுகை நடந்து
வந்ததுமான வரலாற்றுப்பூர்வமான வலுமிக்க ஆதாரத்தைப் புறந்தள்ளிவிட்டுப் புராண நாயகரான
இராமர் அங்குதான் பிறந்தாரென்ற வரலாற்றுப்பூர்வமில்லாத ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் ஏற்று
வலுக்கட்டாயமாகச் சிலை வைக்கப்பட்ட இடத்தை இந்துத்துவ வாதிகளுக்கு ஒதுக்கியிருப்பது ஒரு நீதி
மன்றத்தின் தீர்ப்பாக இருக்கலாகுமோ எனச் சட்டவியல் அறிஞர்கள் தங்கள் புருவத்தை உயர்த்துகின்றனர்.
கிராமங்களில் உள்ளூர்ப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துச் சபை வைத்திருப்பார்கள்.
இருவருக்கிடையே பிரச்சனை என்றால் இருவருக்குமிடையே மத்தியஸ்தம் பேசி சமரசம் செய்வார்கள்.
நகர்ப் புறங்களில் கட்டைப் பஞ்சாயத்து செய்வதுமுண்டு.நிலப்பிரச்சனையில் ஆளுக்குக் கொஞ்சம் என்று
பங்கு போட்டுத் தருவது பஞ்சாயத்து வேலையே தவிர நீதி மன்றப் பணியாகாது. எனவேதான் ராஜீவ் தவான்,
பி.பி.ராவ் போன்ற சட்ட வல்லுநர்கள் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பினை “ஒரு கட்டைப் பஞ்சாயத்தின்
தீர்ப்பு இது” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.தினமணி நாளிதழும் இதுபோன்றே தலையங்கம் தீட்டியுள்ளது.
இது போன்ற பஞ்சாயத்திற்காக முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகவில்லை.
வரலாற்றுப் பொக்கிஷமாகப் பாதுக்காக்கப்படவேண்டிய, தங்களுக்கு மட்டுமே உரித்தான இடம் பிறரால்
பறிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டமைக்கு நீதி கேட்டும் மீண்டும் அந்த இடத்தை மீட்டுக் கேட்டும்தான்
முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். உச்சநீதிமன்றத்தை அணுகும் பணிகளைத்
தொடங்க அவர்கள் ஆயத்தம் செய்துவருகின்றனர்.இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 143(2) பிரிவின்படி
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படவேண்டும். உச்சநீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்றை
சாலையோரத்தில் முடிவெடுக்க எவரும் முயலுதல் ஆகாது. அரசியல்வாதிகளால் முடியுமென்றால் இப் பிரச்சனை
எப்போதோ முடிந்து போயிருக்கும்.நிச்சயமாக அவர்களால் முடியாது; முடிக்கவும் விரும்பமாட்டார்கள்.
இந்தியத் திருநாட்டின் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பது ஒன்றே இப்போது செய்யப்படவேண்டியதாகும்.
ஆனால் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டிவருமோ, அந்தத் தீர்ப்பும் எப்படி அமையுமோ
என்பதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே தெரிந்தவிஷயமாகும்.
ஒன்று மட்டும் உறுதியாக்கப்பட்டுள்ளது- இந்தியத் திருநாட்டில் இதுவரை நிகழ்ந்துவந்துள்ள மதக் கலவரங்களுக்கும்-
பல குண்டு வெடிப்புகளுக்கும்- முஸ்லிம்களுக்கும் எந்தவோர் அடிப்படை சம்பந்தமுமில்லை; அவர்கள்மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்ட
அல்லது திணிக்கப்பட்ட பழிச் செயல்கள் அவை என்பது நிரூபணமாகியுள்ளது. இவ்வளவு பாதகமான தீர்ப்பிற்குப் பிறகும்
முஸ்லிம்கள் பேணிவரும் பென்னம்பெரிய அமைதியும் பொறுமையுமே அதற்கு மிகப் பெரிய சான்றுகளாகும்.
“மேலும் எத்தனையோ நபிமார்கள்- அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் பெருமளவில் சேர்ந்து போர் செய்தனர்.
எனினும் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்) திற்காக அவர்கள் தைரியம் இழந்துவிடவில்லை;
பலவீனம் அடைந்துவிடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை;அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே
நேசிக்கிறான்” (இறைமறை- 3:146) என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளில் ஆழமான அழுத்தமான நம்பிக்கை உடையவர்கள்
அல்லவா நாம்!


From: cityads [mailto:cityadschennai@gmail.com]
Sent: Saturday, October 02, 2010 8:37 PM
Subject: RE: பேராசிரியர் சேமுமு அறிக்கை

பேராசிரியர் சே.மு.மு. அறிக்கையை வாசித்தோம்...
இன்றைய இந்தியா... அல்ல இனிவரும் நாட்களில் எல்லாம் இப்படிப்பட்ட தீர்ப்புகள் தான் இனி கிடைக்கும்..

2.5 ஏக்கர் நிலத்துக்காக (நமது உரிமையை விட்டுத்தரக்கூடாது என நினைத்தவர்களுக்கு) சுமார் 60 ஆண்டுகளாக போராடி கடைசியில் கிடைத்த்து
(கிடைக்க போவது) .75 ஏக்கர் இடம் தான். ஆனால் நாம் இத்தனை ஆண்டுகாலம் இழந்த்து எத்தனை உயிர்கள், எவ்வளவு உடமைகள்...
கணக்கிலடங்கா..

கிடைத்த்தை கொண்டு நிறைவு அடைவதே சிறப்பு... இல்லையென்றால் நமது இழப்புகள் தொடரும்..

இறைனிடம் பிரார்த்திப்போம்....

பழையது பேசி பேசி...நமது எதிர்காலத்தை இருட்டாக்க வேண்டாம்.


வலங்கைமான் நஸீர்

No comments: