குர்ஆன் விரிவுரை !
மெளலவி அப்துர் ரஹ்மான்
வலாயெஹ்ஸ பன்னல்ல ஸீன யப்கலூன பிமா.. ஆதாஹு முல்லாஹு மின் பள்லிஹு ஹுவகைரல் லஹும் பல்ஹுவஷர் ருல்ல ஹும். ஸயுதவ்வ கூனமா பகிலூ பிஹு யவ்மல் கியாமா. வலில்லாஹி மீராஸுஸ் ஸமாவாதிவல் அரள் வல்லாஹு பிமாதஃமலூனகபீர்.
அல்லாஹ் வழங்கிய அருட்கொடையிலிருந்து நீங்கள் கஞ்சத்தனம் செய்ய வேண்டாம். மனிதர்கள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கருதிக் கொள்ள வேண்டாம். கஞ்சத்தனம் செய்பவர்களுக்கு அவையே கழுத்தில் அணிவித்து பாம்பாக மாற்றப்படும்.
தமது மனைவி, மக்கள், குடும்பத்தார்க்கு செல்வத்தை சேமித்து வைக்கின்றனர். அவற்றிலிருந்து வழங்கினால் செல்வம் குறைந்து விடும் எனக் கருதுகின்றனர். இந்த நினைப்பு அவர்களுக்கு தீமையாக முடியும். எதைச் சேமித்து செலவு செய்ய மறுத்தார்களோ அதுவே அவர்கள் கழுத்தில் பாம்பாக மாற்றி அணிவிக்கப்படும் என ரசூல் (ஸல்) கூறி புஹாரி ஹதீஸில் பதிவாகியிருக்கிறது.
கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து அவற்றை விட்டுச் செல்லும் போது அதன் உரிமையாளன் அல்லாஹ் அதற்கு பொறுப்பாளன் நான் தான் எனக் கூறுகிறான். இதை உணராத மனிதர்கள் அந்த சொத்துக்களுக்கு தாங்கள்தான் நிலையான வாரிசு எனக் கூறுகின்றனர்.
அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து நம்மால் இயன்ற அளவு சிறு பேரித்தம் பழத்தின் துண்டைக் கொடுத்தாவது நம்மை நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். ‘சதக்கா’ பற்றிய சிறப்புகள் நிரம்ப உள்ளன. கொடுப்போருக்கு ஒரு போதும் குறைவதில்லை.பன்மடங்கு அல்லாஹ் வழங்குவான்.
ஹக்கீம் நிஜாம் (ரலி) என்ற ஸஹாபி ரசூல் (ஸல்) இடம் மூன்று முறை உதவி கேட்டார். கொடுத்தார்கள். நான்காவது முறை கேட்ட போது என்னிடம் இல்லை இருந்தால் தந்திருப்பேன். நீங்கள் அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். அதற்குப்பின் அந்த ஸஹாபி யாரிடமும் உதவி கேட்டதில்லை. அடுத்து ரசூல் (ஸல்) சந்தித்த போது யாரசூலுல்லாஹ் தங்களிடம் கேட்டதைத் தவிர வேறு எவரிடமும் உதவி கேட்டதில்லை. மரணிக்கும்வரை கேட்கக் கூடாது என்ற முடுவோடு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
பணத்தை செலவழித்தால் வறுமை வந்து விடும் எனச் ஷைத்தான் பயமுறுத்தலுக்கு பணிந்து ஸதக்கா, ஜகாத் கொடுக்க மறுத்து விடுகின்றனர். 2 பெண்கள் நபியைப் பார்க்க வந்த போது நங்கையரின் கைகளில் தங்கக்காப்பு இருப்பதைப் பார்த்து இதற்கு ஜகாத் கொடுத்தீர்களா என்று நபி கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர். நரக நெருப்பை உங்கள் கரங்களில் அணிய வேண்டாம் என்றால் உடனே ஜகாத் கொடுங்கள் என்று கூறினார்கள்.
இரண்டு தங்கக் காப்புகளுக்கே நரக நெருப்பு தீண்டும் என்றால் 100, 200 பவுன் என தமது மனைவிக்கு அணிவித்து அழகு பார்ப்போரும், கிலோ கணக்கில் வைத்திருப்போரும் ஜகாத் கொடுக்கவில்லையெனில் தமக்கு என்ன நிலை எனச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து ஜகாத் கொடுக்க வேண்டும். அபூ வஃபா (ரலி) தாமாக முன் வந்து ஜகாத் கொடுத்தார்கள் ரசூல் (ஸல்) அவருக்காக ‘துஆ’ச் செய்தார்கள்.
அன்று ஜகாத் (ஏழை வரி) வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. அதிகாரத்தோடு கேட்டுப் பெற்றனர். இன்று அது இல்லை. உபதேசம் மட்டுமே செய்யவியலும் அவரவரும் அல்லாஹ்வுக்கு பயந்து தாமாக முன்வந்து
தமது சொத்துக்கள், நகைகள், பணம் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்காதவர்களிடமிருந்து நோய், கலவரம், வழக்கு, விபத்து மூலமாக அல்லாஹ் தனது செல்வங்களைப் பறித்துக்கொள்கிறான். ஐந்து லட்சம் செலவு செய்து தமது உடலில் அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்திக் கொள்கின்றனர். அத்தகையோர் ஐந்தாயிரம் ரூபாய் ஸதக்கா வழங்கலாம். அல்லாஹ் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவான். 10 இலட்சம் நோய்க்குக் கொடுக்க தயாராக இருப்போர் 10 ஆயிரம் ஜகாத் கொடுக்க மாட்டேன் என்னும் நிலை அல்லாஹ்விடம் தண்டனையை பெற்றுத்தரும்.
அல்லாஹ் கூறுகிறான் உலகில் உனக்கு படிப்பினை இருக்கிறது என்று 10 வருடத்திற்கு முன்பு நம்முடன் இருந்தவர்கள் இப்போது இல்லை. அப்போதிருந்த உடல்நிலை இப்போது இல்லை. இந்த துன்யா நிரந்தரம் என்று கருதக்கூடாது. முட்டாள் ஆன்மா மட்டுமே அவ்வாறு கருதும். எல்லாவற்றுக்குமான கூலி இங்கேயே கிட்டாது. கியாமத் நாளில் தான் கிடைக்கும். பலனை உடனுக்குடன் எதிர்பார்க்கக்கூடாது.
துன்யாவிற்காக (இந்த உலகத்திற்காக) தமது வாழ்வை தியாகம் செய்து அல்லாஹ்வை மறந்து வாழ்கின்றனர். இது நிலைத்த வாழ்வு என எண்ணி ஏமாறுகின்றனர். நிலையான, நிரந்தரமான வாழ்வு ஆகரத்தில் தான் உள்ளது.
(மண்ணடி மாமூர் பள்ளிவாசலில் 13.06.10 அன்று மஹ்ரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்ற குர்ஆன் விரிவுரையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 50 நிமிட உரையில் 75 பேர் கலந்து கொண்டனர்)
முரசு நிருபர்
( முஸ்லிம் முரசு ஜுலை 2010 இதழிலிருந்து )
No comments:
Post a Comment