Wednesday, November 10, 2010

தொழுது இறை வேண்டுங்கள் !

தொழுது இறை வேண்டுங்கள் !
(பி. எம். கமால், கடையநல்லூர்)



நண்பனே வா !
குர்பானி கொடுத்து விட்டாயா ?
ஆட்டை மாட்டை
அதிசய ஒட்டகத்தை
எதைக் கொடுத்தாய் நீ ?

உன்
ஆன்மாவில் அலைகின்ற
மிருகத்தைக் குர்பானி
கொடுத்து விட்டாயா ?

ஆணவத்தை அளப்பரிய
ஆசைகளை கோபத்தை
குர்பானி கொடுத்து விட்டாயா ?

குர்பானி என்றாலே உனக்கு
பிரியாணி தானே
ஞாபகத்திற்கு வருகிறது ?

உன் முன்னோர்கள்
இஸ்லாத்திற்காக
கைப் பொருளை இழந்து
மெய்ப்பொருளைக் கண்டார்கள் !
நீயோ-
மெய்ப்பொருளைப் பேசி
கைப்பொருளை சேர்க்கின்றாய் !
இதுவா தியாகம் ?

உலக ஆதாயம் உனை வந்துசேர
தன்னையே குர்பானி
தாராளமாய் செய்கின்றாய் !

கொள்கையைக் குர்பானி
கொடுத்து விட்டு தெருவில்
கோஷம் போட்டு நீ
கொடிபிடிக் கின்றாய் !

தொப்பியை தொழுகையை
தூய நற் கலிமாவை
ஒற்றுமை வாழ்க்கையை
ஒட்டு மொத்தமாக
குர்பானி கொடுத்து விட்டு
கோஷம் ஏன் போடுகிறாய் ?

அல்லாஹ்வைத் தர்கித்து
அலைகின்ற பேர்களே !
பொல்லாத காலமிது
பொறுக்காது வானமிதை !

நில்லாத வாழ்க்கையினில்
செல்லாத காசாகும்
பொல்லாத மனிதர்களை
பொறுக்காது பூமியிது !

அய்ங்கடமை கடலதனில்
ஆன்மாவைக் கழுவி
உடலுக்கும் மனசுக்கும்
ஒளியேற்ற வாருங்கள் !

தியாகத்தின் பெருநாளில்
தேசமெல்லாம் முஸ்லிம்கள்
தோளோடு தோள் நிற்க
தொழுது இறை வேண்டுங்கள் !

No comments: