சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன
27 கல்லூரிகள் பங்குபெறும் உயர் கல்வி கண்காட்சி-2008, சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.
இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.
விளக்கக் கையேடுகள், அனைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு..மாவட்டங்களில்:பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த ஆண்டு அந்தந்த மாவட்டம் வாரியாக இந்த கண்காட்சி நடைபெறும்.
மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன என்றார்.
பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் குழும பொறுப்புத் தலைவர் வி.கே.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment