Monday, May 19, 2008

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !


இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!




ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.

மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :


Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates

Tel: 3971222/3971333

Fax: 3970453

Email:cgidubai@emirates.net.ae





அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.

இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.

மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.


கன்சல் முபாரக்

இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.

பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.

இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )

No comments: