Sunday, June 22, 2008

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
கலைஞர் அவர்களுடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மணிவிழா மாநாட்டில் தமிழர் தலைவர் உணர்ச்சிப் பேருரை

சென்னை, ஜூன் 22- கலைஞர் அவர்களை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்க வுரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-6-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை - தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

கலைஞர் ஆட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்புநம்முடைய தமிழகத்திலே கலைஞர் அவர்களுடைய பொற் கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய ஆட்சியைக் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் பேசும்பொழுது, எங்களுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் நீங்கள் என்று சொன்னார்.

திராவிட இயக்கம் என்றைக்கும் உங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும். இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த நேரத்தில், இந்தியாவில் அமைதிப் பூங்கவாகத் திகழ்ந்த மாநிலம் ஒன்று என்று சொன்னால் அது தமிழ்நாடுதான்.

திராவிட இயக்கம் அந்த அளவுக்கு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது.பெரியார் பிறந்த மண்ணான இந்த மண்ணில் என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பு உண்டு.

ஆனால், காந்தியார் பிறந்த மண்ணான குஜராத்தில் இன்றைக்கும் சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருக்கிறது.

மூன்றாவது தலைமுறையாக தொடரும் உறவு காயிதே மில்லத் அதற்கடுத்து சிராஜுல்மில்லத் அதற்கடுத்து இன்றைக்கு மூன்றாவது தலைமுறையாக இந்த உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மதத்தில் இஸ்லாமியர்களாக இருந்தாலும் நாம் திராவிடர்கள்.

நீங்கள் கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் அல்ல.

இந்த மண்ணுக்கு தலைமுறை தலைமுறையாக, சொந்தக்காரர்கள் நீங்கள்.

திராவிட இயக்கம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நமது கலைஞர் அவர்களுடைய பொற்கால ஆட்சியில் நீங்கள் கோரிக்கைகளை வைத்து, கேட்டுத்தான் பெறவேண்டும் என்பதில்லை.

கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே கேட்காமலேயே செய்யக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

1972-இல் சட்டமன்றத்திலே கலைஞர் சொன்னார்முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சொன்னார்கள். 1972 லே சட்டமன்றத்திலே கலைஞர் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார்கள். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தில் இடம் இருக்கிறதோ - இல்லையோ என்னுடைய இதயத்திலே இடமிருக்கிறது என்று சொன்னவர்தான் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

கலைஞர் ஆட்சியை இந்தியாவே பின்பற்ற வேண்டும்பனத்வாலா அவர்கள் பேசும்போது கலைஞர் அவர்களுடைய ஆட்சி எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு பாராட்டிச் சொன்னார்கள்.

இந்தியாவே கலைஞர் அவர்களுடைய ஆட்சித் திறனைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார். பனத்வாலா அவர்கள் சொன்னதிலே இட ஒதுக்கீடு அடங்கியிருக்கிறது. சமூகநீதி அடங்கியிருக்கிறது.

இனநலம் இருக்கிறது. சமூக பாதுகாப்பு இருக்கிறது. சமூக நல்லிணக்கம் அடங்கியிருக்கிறது என்று சொன்னார்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

எங்களைப் பார்த்து சிலர் கேட்பதுண்டு. நீங்கள் எப்படி முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்துகொள்ளலாம்? என்று.

முஸ்லிம் மதம் மட்டும்தான் இந்த நாட்டை ஆளவேண்டும், மற்ற மதத்தினர் ஆளக்கூடாது என்று சொல்பவர்கள் அல்ல அவர்கள்.

மற்ற மதத்துக்காரர்கள் மாள வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல. பெரும்பான்மையினர் ஆள வேண்டும்; சிறுபான்மையினர் வாழ வேண்டும் என்று கருதுபவர்கள் அவர்கள்.

எல்லோருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியை கலைஞர் அவர்கள் இங்கு நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

அவருடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிய மக்களான உங்களுக்குப் பாதுகாப்பு கலைஞர் அவர்கள்தான். கலைஞர் அவர்களுடைய ஆட்சியை காப்பது உங்களுடைய கடமை. அவருடைய ஆட்சிக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது உங்களுடைய கடமை.

நம்முடைய கடமை. இன மீட்புக்காக நடைபெறக்கூடிய கலைஞர் ஆட்சியை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை தலையாய கடமையாகும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்.

உரையாற்றியோர்இம்மாநாட்டில் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சையத் சத்தார், பாத்திமா (அப்துல் சமது மகள்), இசைமுரசு நாகூர் அனிஃபா, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்திய தலைவர் பனாத்வாலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி, பல பொறுப் பாளர்கள் உரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் எம். ஜெய்னுல் ஆபுதீன், நிர்வாகிகள் கமுதி பஷீர், நிஜாமுதீன் ஆகியோர் மாநாட்டிற்கான பணியை முன்னின்று நடத்தினர். பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு இஸ்லாமியர்களின் பேரணி தொடங்கி மாலை 6.15 மணிக்கு மாநாடு நடைபெற்ற தீவுத் திடலை வந்தடைந்தது.தீவுத் திடலில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இஸ்லாமிய மக்களின் கூட்டம் காணப்பட்டது.

http://viduthalai.com/20080622/news14.html

www.quaidemillathforumuae.blogspot.com

No comments: