நம்பிக்கை வாக்கெடுப்பு - சட்டியிலிருந்து தப்பி அடுப்பிற்குள்...
உலக நாடுகள் பலவும் மிக உன்னிப்பாக இந்திய அரசியல் அரங்கை கவனித்துக், கொண்டிருக்கின்றன. பல்வேறு தலைகீழ் அரசியல் மாற்றங்களுக்கான முன்னறிவிப்பு இந்திய அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காண்டு காலம் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி நின்ற பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசானது, தனது ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக நிற்கிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு:
வருகின்ற ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதன் முடிவு இந்தியாவின் தலைவிதியையே தீர்மானிக்கும் அளவில் உள்ளதால்தான் இத்தனை பரபரப்பு! நான்காண்டு காலம் நல்லாட்சி செய்து வந்த மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை ஏன் வந்தது? காரணம், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் என பரவலாக அறியப்படுகிற அமெரிக்க ஹைட் சட்டத்தின் கீழான 123 ஒப்பந்தம்தான்.
அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தேவையா, இல்லையா என்ற விவாதம்தான் இன்று மத்திய அரசை கவிழ்ப்பதற்கான ஆயுதமாக மாறியுள்ளது. ஒரு நாட்டின் அரசையே கவிழ்க்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய அளவிலே அப்படி என்னதான் அந்த ஒப்பந்தத்தில் உள்ளது?
குருடர்கள் யானையைப் பார்த்து விவரித்த கதையாக இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தேவைக்கும் அறிவுக்கும் ஏற்ப வியாக்கியானமும், விமர்சனமும் செய்யப்படுகிறது. இதில் யானை முறம் போல் உள்ளது என அதன் காதை தடவிப் பார்த்து சொன்ன குருடனைப் போல மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.பாண்டே என்பவர், இந்த அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், இதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்றும் தன் அரிய கண்டுபிடிப்பை, இந்த ஒப்பந்தத்திற்கு மதச்சாயம் ப+சி பிரகடணம் செய்தார்.
இவரைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச முதல்வர் செல்வி. மாயாவதியும் தன் பங்குக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறார். தங்களின் அரசியல் லாபங்களுக்காகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காகவும், இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரான ஒப்பந்தம் என சில அரசியல் கட்சிகளால் திட்டமிட்டே திரிக்கப்படுகிறது.
அணு மின்சாரம்:
இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காரணமாக பிரதமர் முன் நிறுத்துவது, இந்தியாவிற்கான மின்சார உற்பத்தியைத்தான்! அமெரிக்கா சப்ளை செய்யும் அணு உலைக்கான எரிபொருளை வைத்து அணு மின் உற்பத்தியைப் பெருக்கப் போவதாகவும், இந்தியாவின் எதிர்கால மின்சார தேவையே இதில்தான் அடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்றைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் வெறும் மூன்று சதவீதம் மட்டும்தான். அணுமின் நிலையங்களை உருவாக்குவது எளிது. ஆனால் அணு உலைகளின் கழிவைப் பாதுகாப்பது மிக மிக கடினமானது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல அணுஉலைக் கழிவுகள் சரியாக பாதுகாக்கப் படாமல் போனால் அணுகுண்டுகள் வீசாமலே நாட்டில் பல லட்சம் மக்கள் செத்து மடிவார்கள்.
அதனால்தான் உலகம் முழுவதுமே, அனைத்து நாடுகளிலும் அணு உலைகள் அமைப்பதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் உள்ளன. அப்படி அமைக்கப்படும் உலைகள் கூட பல்வேறு பாதுகாப்பு வளையங்களோடு இருப்பதை உறுதி செய்ய விதிகளும், சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றையும் மீறி ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதும் இன்றும் கூட அதன் பாதிப்புகள் தொடர்வதும் உலகமே அறியும்.
அணு உலைகள் எதற்காக?
இவ்வளவு ஆபத்துகளுக்கிடையிலும் அணு உலைகள் ஏன் நிறுவப்படுகின்றன? காரணம் அமெரிக்காவின் ஆயுதப் போட்டிதான். அணு உலைகளில் மின்சார உற்பத்தி என்பது ஒரு உப தயாரிப்புதான். அதன் முதன்மையான தயாரிப்பு அணு ஆயுத தயாரிப்புக்கு மூலமான புளோட்டோனியம்தான். அணு உலைகளில் யுரேனியத்தை எரி பொருளாக பயன்படுத்தி செறிவ+ட்டும்போது புளோட்டோனியம் கிடைக்கிறது. அப்போது வெளிப்படும் வெப்பத்தை உபயோகப்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படும்.
எனவே மின்சாரம் என்பது பிரதான தயாரிப்பு அல்ல. புளோட்டோனியம்தான் பிரதானம். சர்க்கரை ஆலையில் மொலாசஸ் என்ற கழிவுப் பாகு கிடைப்பது போலத்தான் நமக்கு அணு உலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கிறது.
ஆயுத உற்பத்தி:
இன்றைக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய அய்ந்து நாடுகளும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. இந்த ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, வளர்ந்துவரும் மற்றும் ஏழை நாடுகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொருளாதார ரீதியாக அவற்றை சுரண்டிக் கொழுக்கின்றன.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இந்த அய்ந்து நாடுகளுக்கும் போட்டியாக தாங்களும் நவீன ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. தங்களை மீறி வேறு எந்த நாடும் தலைதூக்கி விடக்கூடாது என்ற எண்ணத்திலேதான் 1968ஆம் ஆண்டு அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் என ஒன்றை உருவாக்கி அனைத்து நாடுகளையும் அதில் அமெரிக்கா கையெழுத்திடச் செய்தது.
ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் அதில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் என ஒன்று இருந்தபோதிலும் இந்த வளர்ந்த நாடுகள் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயார் செய்து தங்கள் நட்பு நாடுகளிலே கொண்டுபோய் குவித்து வருகின்றன.
எனவே இராணுவ ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கும் இந்தியாவும் அணு ஆயுதத்தை உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்தும் விட்டது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதை பறை சாற்றிவிட்டது.
இந்தியா மேலும் நவீன அணு ஆயுதங்களை உருவாக்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. எனவேதான் இந்த 123 ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் அணு ஆயுத தயாரிப்புக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறது என்றும் இந்த ஒப்பந்தத்திலே இந்தியாவுக்கும், அதன் இராணுவ பொருளாதார பாதுகாப்பு நலன்களுக்கும் எதிரான ஷரத்துகள் நிறைய உள்ளன என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒப்பந்தத்தின் பாதக அம்சங்கள்:
அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடுகிற ஒரு ஷரத்து என்னவெனில், இந்தியாவின் அணு உலைகளுக்கு அவ்வப்போது தேவைப்படுகிற அளவு என அமெரிக்கா நிர்ணயிக்கிற அளவு மட்டுமே யுரேனியத்தை சப்ளை செய்யும். நாம் நமக்கு தேவையான அளவு என அதிகமாக கேட்டுப் பெற முடியாது. எதிர்காலத்தில் அமெரிக்கா தன் சப்ளையை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தி கொள்ள வேண்டி வரும்போது நம்முடைய அணு உலைகள் தொடர்ந்து இயங்க முடியாமல் இழுத்து மூடவேண்டி வரும். இதன் மூலம் இந்திய அணு உலைகளின் இயக்க சாவி அமெரிக்காவின் கையில் இருக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
மேலும் நம் அணு உலைகளில் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான புளோட்டோனியம் தயாரிப்பதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிறுத்திவிட வேண்டுமென்கிறது இந்த ஒப்பந்தம். இதன் மூலம் இந்தியாவின் அணு ஆயுத தயாரிப்புக்கு மூடு விழா நடத்த முயற்சிக்கும் என்பதும் விமர்சகர்களின் கருத்தாகும்.
அணு உலை எரிபொருள் சப்ளையர்கள் குரூப் (என்.எஸ்.ஜி) விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இந்தியாவை கட்டுப்படுத்தும்.
அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளை இந்தியாவும் பின்பற்ற வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு, ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் பட்சத்தில் இந்தியாவும் ஈரானுடனான தன் நீண்டகால உறவை துண்டித்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்திய-ஈரான் குழாய் எரிவாயு திட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டியிருக்கும் என்பதெல்லாம் இவ்வொப்பந்தத்தை குறித்த ஐயப்பாடுகளாகும்.
இந்திய அணு உலைகளில் யுரேனியம் செறிவ+ட்டல், கனநீர் உற்பத்தி ஆகிய இரு நிலைகளில் மட்டுமல்லாமல் மூன்றாவது நிலையான ரீ-ப்ராசசிங்-கிலும் கூட நாம் நம் நாட்டு தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கிறோம். அமெரிக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்தப் போவதில்லை.
எனவே இந்த ரீ-ப்ராசசிங் ய+னிட்கள் அமைக்க இந்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். இந்த ய+னிட்டுகளின் கட்டுமான வரைபடங்கள், தொழில் நுட்பங்கள், புள்ளி விவரங்கள் போன்ற அனைத்தையும் அமெரிக்காவிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
பல ஆண்டு காலம் உழைத்து, பாடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி செய்து நம் விஞ்ஞானிகள் உருவாக்கிய தொழில் நுட்பங்களையும், புள்ளி விவரங்களையும் அமெரிக்காவிடம் அடகு வைக்கிறோம். இது இந்தியாவின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ஒன்றாகும். எனவே இது இந்தியாவின் இறையாண்மைக்கே சவாலாகும். இந்தியா தன் அணு உலைகளை இயக்குவதற்கான விதிமுறைகளை அமெரிக்கா வகுக்கும். அது என்னவென்று தெரியுமுன்பே அதை ஏற்றுக் கொள்ளவதாக இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஐயங்கள் எழுப்பப்படுகின்றன.
இந்தியா-அமெரிக்கா இடையிலான இந்த ஒப்பந்தம் குறித்து ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்றே ஒப்பந்தம் கூறுகிறது. சாதாரண தனிநபர் வியாபார ஒப்பந்தங்களில் கூட இரு நபர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டால் அதை நடுவரிடம் முறையிட்டு தீர்த்துக் கொள்வது பற்றி ஷரத்து இருக்கும். ஆனால் இரு நாடுகளுக்கிடையிலான இம்மாபெரும் ஒப்பந்தத்தில் அப்படி ஏதும் இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது என கூறப்படுகிறது.
ஒப்பந்த காலமான 40 வருடம் முடியுமுன்னே இடையில் ரத்து செய்து கொள்வது பற்றிய ஷரத்தில், அதுபற்றி கலந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என ஒப்பந்தம் கூறுகிறது. அமெரிக்கா ஒப்பந்தத்தை விலக்க ஒத்துக்கொள்ளவில்லையெனில் 40 வருட காலமும் அமெரிக்காவின் ஆதிக்கத்திலும், தயவிலுமே இந்தியா வாழவேண்டி இருக்கும் என்ற ஐயப்பாடும், ஆக்கமும் அர்த்தமும் உள்ளதாகவே உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விசேஷ சூழ்நிலைகளில் கூட இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த முடியாது. ஏனெனில் அது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். ஆனால் அமெரிக்கா ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கலாம். அப்படி நிறுத்தி வைத்தால் இவ்வொப்பந்தத்தை நம்பி பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்த இந்தியா உருவாக்கிய உலைகள் உபயோகமற்று போய்விடும். அதற்கான நஷ்ட ஈடுபற்றி ஒப்பந்தத்தில் ஒரு வரி, கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவிற்கு பாதகமாகவும், அமெரிக்காவிற்கு சாதகமாகவும் இவ்வொப்பந்தத்தில் உள்ளது என்றும்@ ஒரு தலைச்சார்பான இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீர வேண்டுமா என்றும், இப்படிப்பட்ட பாதகமான அம்சங்களை முதலில் நீக்கிவிட்டு அதன் பின்னரே ஒப்பந்தம் குறித்து பேசவேண்டும் என்பதும் விமர்சகர்களின் கருத்தாகும்.
முஸ்லிம்களுக்கு எதிரானதா?
இவ்வாறாக பல்வேறு விமர்சனங்கள், உள்ள இந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்களுக்கு எதிரான ஒப்பந்தம் என மதச்சாயம் ப+சும் அரசியல் மேதாவிகள் இந்நாட்டு முஸ்லிம்களை தனிமைப்படுத்தவே முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.
இது குறித்து ஜம்மிஅத்-உல்-உலமா-யே-இந்த் என்ற அமைப்பின் சார்பாக மவுலானா அப்துல் அமீது நுமானி தன் கண்டனத்தையும், ஆட்சேபனையையும் பதிவு செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. திரு.எம்.கே.பாண்டே அவர்களின் கீழ்த்தரமான முயற்சியான அணு ஒப்பந்தத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் முடிச்சு போடும் செயலை வன்மையாக கண்டித்துள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி-யின் சார்பிலே எஸ்.க்ய+.ஆர். இல்யாசியும் இச்செயலை மதச்சாயம் ப+சும் செயல் என கண்டித்துள்ளார். எனவே அணு ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற விஷமப் பிரச்சாரத்திற்கு நாம் பலியாகிவிடக் கூடாது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகும் இவ்வொப்பந்தத்தில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து தன் கவலைகளையும், ஆட்சேபனைகளையும் பிரதமரிடம் முறையாக பதிவு செய்துள்ளது. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா அவர்கள் தன் உயிர் பிரிவதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியிலே கூட அணு ஒப்பந்தத்தின் பாதகமான தன்மைகள் குறித்த தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் லீக் இவ்வொப்பந்தத்தின் சில அம்சங்களை எதிர்க்கின்ற அதே வேளையில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி, அரசை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தையும் தன் தோள்களிலே சுமந்து கொண்டுள்ளது.
சிறுபான்மையினரின் நலன்காக்கும் அரசு:
டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான இந்த அரசு கடந்த நான்காண்டுகளாக சிறுபான்மையினருக்கு செய்து வரும்பணிகள் ஏராளமானவை. கடந்த ஆட்சியில் ஒரு மதவாத கும்பலின் பிடியில் இந்த நாடு இருந்தபோது இந்திய நாட்டை இந்து நாடாக்க பரிவாரங்கள் படை நடத்திக் கொண்டிருந்தன. பொது சிவில் சட்டம் - என்ற ஆயுதம் கூர்தீட்டப்பட்டது.
அது சிறுபான்மையினரை பதம் பார்க்கும் முன்னரே இந்நாட்டு மக்கள் அந்த கும்பலைத் தூக்கி எறிந்து விட்டு அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசை மத்தியில் அமர்த்தியுள்ளனர். இந்த அரசு வந்த பின்னர்தான் இந்நாட்டு முஸ்லிம்களின் அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சச்சார் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் மேல் உடனடி நடவடிக்கை தொடங்கப்பட்டது.
சுமார் 75 சதவீதம் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுவிட்டன. அத்துடன் திரு.ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான குழு அமைக்கப்பட்டு சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை பெறப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய அனைத்து நிலைகளிலும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டுமென்று பரிந்துரை கூறுகிறது. இதை அமல்படுத்தக் தேவையான இந்திய அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமன்றி இன்றைக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினரும் இந்நாட்டில் பாதுகாப்புடன் வாழ்வதற்கான வழிவகைகளை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. ஒரு மதவாத - பாசிச ஆட்சிலிருந்து விடுபட்ட இந்திய மக்கள் இந்த ஜனநாயக ரீதியிலான ஆட்சியின் கீழ் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அணு ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்க்கப்படுமானால், அது மீண்டும் ஒரு காட்டாட்சிக்கு நம் நாட்டை இழுத்துச் செல்லும்! சட்டியிலிருந்து தப்பி, எரியும் அடுப்பில் விழுந்தது போல மதவாதிகளின் கையிலே இந்நாட்டை ஆகுதி செய்ய வேண்டியதாகிவிடும்.
அமெரிக்க அடிவருடிகள்:
அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு, பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசு போடும் முதல் கையெழுத்தே அணு ஒப்பந்தமாகத்தான் இருக்கும். ஏனெனில் பாரதீய ஜனதா மற்றும் சங்பரிவாரங்கள் அமெரிக்காவின் அடிவருடிகள் என்பதுதான் சரித்திர உண்மை. எனவே தலைவலி போய் திருகு வலி வந்தது போல அணு ஒப்பந்தம் இன்னும் அதிக கடுமையான அம்சங்களோடு நிறைவேற்றப்படும்.
செய்ய வேண்டியது என்ன?
இன்றைய நிலையில் அணு ஒப்பந்தத்தின் சில பாதகமான அம்சங்கள் குறித்து நம் கவலை களையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்வோம். அதே வேளையில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக விளங்கும் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசை தூக்கி நிறுத்துவோம்.
ஒப்பந்தத்தை காரணம் காட்டி இவ்வரசை கவிழ்ப்பதன் மூலம் மீண்டும் மதவாத கும்பலின் கையில் இந்நாடு சிக்கி சீரழியவே செய்யும் என்பதை அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எடுத்துரைப்போம். அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் இந்த அரசை கவிழ்த்துவிட்டால் அது நரிக்கு நாட்டாண்மை கொடுத்தது போலாகிவிடும். நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் அது கிடை-க்கு இரண்டு ஆடுகளைக் கேட்கும் என்பதை கவனத்தில் கொள்வோம்.
வெ.ஜீவகிரிநாதன்,
மாநில அமைப்பாளர்,
வழக்கறிஞர் பிரிவு,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
(கட்டுரையாளர் வெ.ஜீவகிரிதரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக 20 ஆண்டு காலமாகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளரான இவர், முற்போக்குச் சிந்தனைகளும் சீர்திருத்த எண்ணங்களும் நிறைந்தவர்.)
http://www.muslimleaguetn.com/news.asp?id=108
No comments:
Post a Comment