சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளி ஆண்டு விழா
ராமநாதபுரம், ஆக. 28: சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் 103-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியன நடைபெற்றன.
காலையில் தொடங்கிய விளையாட்டு விழாவுக்கு முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் தலைவர் ஏ.எம்.தாவூது தலைமை வகித்தார்.
நிர்வாகக் குழுத் தலைவர் எஸ். தஸ்தகீர், முகம்மதியா பள்ளிகளின் துணைத் தலைவர் அல்தாப் ஹூசைன், செயலர் முகம்மது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிகளின் நிர்வாகக் குழு துணைச் செயலர் ஜமீருல் ஹசன் வரவேற்றார். தேசிய ஒருமைப்பாடுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசினார்.
விளையாட்டுப் போட்டிகளை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் செயலர் ஹெச். மஹ்சூல் கரீம் துவக்கி வைத்தார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியை சாஜிதா பானு நன்றி கூறினார்.
முன்னதாக தேசியக் கொடியை முஸ்லிம் சபையின் தலைவர் ஏ.எம். தாவூது, பள்ளிக்கொடியை நிர்வாகக்குழுத் தலைவர் எஸ்.தஸ்தகீரும் ஏற்றி வைத்தனர்.
வாலிப முஸ்லிம் தமிழ்க்கழகத் தலைவர் ஹபீபு ரகுமான் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தலைமை ஆசிரியர் எம். முகம்மது இபுராம்சா, தாளாளர் ஏ. அஹமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி. ராஜேந்திரன், பனைக்குளம் பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.ஏ. ஜவஹர்அலி, சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளிகளின் நிர்வாகக்குழுத் தலைவர் எஸ். தஸ்தகீர், புரவலர் எஸ்.எம். கமருல்ஜமான், ஊராட்சிமன்றத் தலைவர் முகம்மது அப்துல்கனி, பனைக்குளம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவினைத் தொடர்ந்து முகம்மதியா நர்சரிப் பள்ளியின் ஆண்டுவிழாவும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment