Tuesday, September 2, 2008

நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம்! தினமலர் விஷமத்தனத்தைக் கண்டித்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிக்கை!!

நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம்! தினமலர் விஷமத்தனத்தைக் கண்டித்து பேராசிரியர் அறிக்கை!!



தினமலர் வேலூர் பதிப்பில் இணைக்கப்பட்டிருந்த கம்ப்ய+ட்டர் மலரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி கார்ட்டூன் படம் வெளியிடப்பட்டது.

தினமலரின் இந்த விஷமத்தனதுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினமலர் நாளேட்டின் வேலூர் பதிப்பில் முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கார்ட்டூன் படத்தை வெளியிட்டு முஸ்லிம்களுடைய உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர் போன்ற பத்திரிகைகள் அவ்வப்போது இதுபோன்று உணர்வுகளை தூண்டும் செய்திகளையும், படங்களையும் வெளியிட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களுடைய புனித ரமளான் மாத நோன்பு காலத்தின் முதல் நாளில் இந்த விஷமத்தனத்தைச் செய்து பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்பு வேலூரில் உள்ள நாராயணி சக்தி அம்மா கோவில் சக்தி மருத்துவமனை திறப்பு விழாவில் நானும், முஸ்லிம் லீகினுடைய முன்னோடிகளும், சமுதாயப் பிரமுகர்களும் சென்று வாழ்த்து சொல்லிவிட்டு வந்தோம்.

காலை உணவு அமர்ந்து சாப்பிட்டுவிட்டு எழும்போது, கையை ஊன்றி எழுந்த காட்சியை படம் பிடித்து, காதர் மொய்தீன் சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் காட்சி என்று பிரசுரித்து பெரிய குழப்பத்தையும், பிரச்சினையையும் தினமலர் ஏற்படுத்தியது.

இது என் சொந்த விவகாரம் என்று அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் வழிகாட்டி... இறைவனின் திருத்தூதர். அவர்களைப் பற்றிய படங்களும், தவறான செய்திகளும் வெளிவருவதை இந்த சமுதாயம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதற்கு எதிர்ப்புக் குரல் எழுவதை யாராலும் தடுக்கவும் முடியாது.

வேலூரில் அனைத்து சமய மக்களிடையே சமய நல்லிணக்கம் நிலவி வருகிறது. இதனைக் கெடுப்பதற்கு தினமலர் காரணமாகிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மை முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் கிண்டி கிளறிக்கொண்டிருக்கும் போக்கு நல்லதல்ல என தெரிவிக்கிறேன்.

தினமலர் வேலூர் பதிப்பில் வருத்தம் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளதாக அறிகிறேன். இதுபோன்ற உணர்ச்சிகளை தூண்டும் செய்திகளை இனி வெளியிடமாட்டோம் என்ற உத்தரவாதத்தை தினமலர் வெளிப்படுத்த வேண்டும்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இதுபற்றி நானும் பேசி, முறையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.

-இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: