செயலற்ற நிலையில் அரசு ஆம்புலன்ஸ்...!
சென்னை, செப். 20: அரசு மருத்துவமனைகளில் "ஆம்புலன்ஸ்' சேவை மோசமான நிலையை எட்டி வருகிறது. ஆபத்தான நிலையிலும் கூட மருத்துவமனைகளில் அனுமதிக்க காசு கேட்பது போன்ற செயல்கள் தொடர்கதையாகி வருகின்றன.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் "ஆம்புலன்ஸ்' வாகனங்கள் உள்ளன. சாலை விபத்து போன்ற அவசர காலங்களில், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் எடுத்துச் செல்ல "ஆம்புலன்ஸ்' பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது, அவைகளில் பெரும்பாலானவை செயலற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமும் நடைபெறும் சம்பவங்கள்... திருவள்ளூர் அருகே ஞாயிற்றுக்கிழமை (செப்.14) நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்தோர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு, முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மருத்துவமனையில் இருந்து (டி.என்.01 - ஜி.1156) என்ற எண் கொண்ட, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உரிய ஆம்புலன்ஸில் சென்னைக்கு அனுப்பப்பட்டனர். ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ. 800-ம், கூடுதல் பணமாக ரூ. 200-ம் டிரைவர் கேட்டுள்ளார். வேறு வழியின்றி, அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
ஆனாலும், மருத்துவமனையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸில் டீசல் இல்லை; ஒலி எழுப்பான் இல்லை என்று புகார் தெரிவித்துள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர். அரை மணி நேரத்துக்கும் மேலாக, ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்கு போராடிய நிலையில் காயமடைந்தவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். வேறு ஆம்புலன்ஸ் வந்த பின்பே, சென்னை கொண்டு வரப்பட்டுள்ளனர்.
""இன்னும் 5 அல்லது 10 நிமிடங்கள் தாமதித்து இருந்தால், உயிருக்கு ஆபத்தாகி இருக்கும்'' என்று கதறினர் காயமடைந்தவர்கள்.
தலைக் காயத்துக்கும் காசு... சாலை விபத்துகளின் போது, தலைக் காயம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் சேவைக்கு பணம் வாங்கக் கூடாது. ஆனால், காயமடைந்தவர்களிடம் தலைக் காயம் முதல் எந்தக் காயம் ஆனாலும் காசு வசூலிக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தச் செயல்கள் மாவட்டத் தலைநகரங்கள், சிறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
என்ன காரணம்? ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க டிரைவர்கள் இல்லாதது, போதிய டீசல் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசின் "ஆம்புலன்ஸ்' சேவை கேள்விக் குறியாகி இருக்கிறது.
போதுமான அளவு டிரைவர்களையும், வண்டிகளுக்கு டீசலையும் அளித்தால், அரசின் ஆம்புலன்ஸ் சேவை உயிர் பெறும் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர் அரசு மருத்துவமனை டாக்டர்கள்.
No comments:
Post a Comment