Wednesday, November 26, 2008

மதுரை தமுக்கம் மைதானத்தில் 150 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை கண்காட்சி

மதுரை தமுக்கம் மைதானத்தில் 150 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை கண்காட்சி
நாளை தொடக்கம்


மதுரை, நவ.26-

மதுரை தமுக்கம் மைதானத்தில் 150 அரங்குகளுடன் அமைக்கப்படும் புத்தக கண்காட்சியில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு இடம்பெறுகின்றன. இந்த கண்காட்சி நாளை தொடங்குகிறது.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்க செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புத்தக திருவிழா

மதுரையில் புத்தக விற்பனை கண்காட்சி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை(27-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி வரை நடைபெறும். இங்கு 150 அரங்குகள் ஒதுக்கப்பட்டு, 1 லட்சம் தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கான நூல்கள், கல்வி, தகவல் தொழில் நுட்பம், விளையாட்டு, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழ், ஆங்கில புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இந்த புத்தக திருவிழாவில் தினமும் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், குறும்படம், கவியரங்கம் உள்ளிட்டவை நடைபெறும். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, மனப்பாடம், ஓவிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகள் மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளிகூடத்தில் வருகிற 3-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். தினமும் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

நாளை தொடக்கம்

விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புத்தக கண்காட்சிக்கு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மதுரையில் புத்தக திருவிழாவிற்கு 3 லட்சம் பேர் வந்து சென்றனர். இந்த ஆண்டு 5 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சியின் தொடக்க விழா நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்கிறார். அமைச்சர் தமிழரசி உள்பட பலர் பேசுகிறார்கள். விழாவுக்கு மதுரை கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்குகிறார். கூடுதல் கலெக்டர் தாரேஷ் அகமது, மாநகராட்சி கமிஷனர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: