துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்ச்சி - விதைகள் கவிதைத் தொகுப்பு வெளியீடு
துபாயில் தமிழ்க் கவிஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் 12.12.2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகி காவிரி மைந்தன் தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில் 31வது மாதமாக இக்கவிதை நிகழ்வு துபாயில் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இத்தகைய நிகழ்விற்கு ஆதரவு நல்கி வரும் புரவலர் கோவிந்தராசு உள்ளிட்டோருக்கும், தமிழக ஊடகங்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார். எதிர்வ்ரும் ஏப்ரல் 2009 ல் நடைபெற இருக்கும் ஆண்டு விழாவில் ஒரே நேரத்தில் பதினொரு கவிஞர்களின் படைப்புகள் நூலாக வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்தார்.
வானலை வளர்தமிழ் அமைப்பின் ஊக்கத்தின் காரணமாக கவிஞர் பால்ராஜ் ஒரே வாரத்தில் 80க்கும் மேற்பட்ட கவிதைகளைப் படைத்துள்ளார். இதுபோல் அமீரகத்தில் உள்ள கவிஞர்கள் வானலை வளர்தமிழ் அமைப்பினை தளமாக பயன்படுத்தி தங்களது கவித்திறனை வெளிப்படுத்த கேட்டுக் கொண்டார்.
இம்மாத தலைப்பான விதைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதை நிகழ்விற்கு அதிரை இளைய சாகுல் மற்றும் ஜியாவுத்தீன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
விதைகள் எனும் தலைப்பில் கவிஞர்கள் திருச்சி சையது, காவிரிமைந்தன், கலையன்பன் கலாம், அபுமைமூனா, ஜெயராமன் ஆனந்தி, அத்தாவுல்லாஹ், சிம்மபாரதி, சந்திரசேகர், நாகராஜன், பால்ராஜ், நிலவன், சஞ்சீவி ரவி, முத்துப்பேட்டை சர்புதீன் உள்ளிட்ட கவிதைப் பட்டாளம் கவிதை வாசித்தனர்.
அதனைத்தொடர்ந்து விதைகள் கவிதைத் தொகுப்பு தமிழ்த்தேர் எனும் பெயரில் கவிஞர் இஸ்ஹாக் வெளியிட முதல் பிரதியை பாத்திமா ஹமீத் பெற்றுக்கொண்டார்.
தாயகம் செல்லும் கவிஞர் இஸ்ஹாக்கிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. துபாய் சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் ரஃபீக் கவிஞர்கள் கவிதையை சிறந்த கவித்திறனுடன் வெளிப்படுத்த கேட்டுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 18 கவிதை நூல்களைப் படைத்த இலங்கைக் கவிஞர் ஜின்னாஹ் ஷர்புத்தீன் தனது உரையில் அமீரக்த்தில் கவிஞர்களின் திறனை வெளிப்படுத்த செயல்பட்டு வரும் வானலை வளர்தமிழ் அமைப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். கால் நூற்றாண்டுக்காலம் இலங்கையில் இலக்கியக் கழக நிர்வாகியாக செயல்பட்டுவரும் தன்னால் சாதிக்க முடியாததை கடல்கடந்து அமீரக மண்ணில் சாதித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் தனித்தமிழில் அனைவரும் உரையாடி வருவது மிகவும் மகிழ்வை ஏற்படுத்தி வருகிறது. கவிதையினை இலக்கண நடையில் முறையாக அனைவரும் எழுத பழகிக் கொள்ள வேண்டும். அதற்காக தான் பாடம் நடத்தவும் தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பால்ராஜ் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். கவிஞர் சிம்மபாரதி நன்றியுரைத் தொடர்ந்து விருந்தளிக்கப்பட்டது. வானலை வளர்தமிழ் அமைப்புடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் அதன் செயலாளர் சந்திரசேகரை 050 874 3990 எனும் எண்ணில் தொடர்பு கொள்ள கொள்ளலாம்.
இ மெயில் : reachsimma@gmail.com
1 comment:
மிக்க நன்றி.
SimmaBharathi
Post a Comment