Monday, December 8, 2008

சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி

சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி


கோவை, டிச.7: சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் வாழும் சிறுபான்மையின ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்டத் தொழில் மையம் மூலம் தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து சொந்தமாக ஆட்டோ வாங்க கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம், கிறிஸ்தவ ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலமாக 6 சதவீத வட்டியில் ஆட்டோ மற்றும் சுமை தூக்கும் வாகனம் வாங்கலாம்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் ஓட்டுநர் உரிமம், வில்லை பெற்றிருக்க வேண்டும். கல்வி, வருமான வரம்பு கிடையாது. கடன் பெறுவோர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1,000 செலுத்தி உறுப்பினராக வேண்டும்.

பங்குத்தொகையாக ரூ.5,000, விளிம்புத்தொகையாக ஆட்டோ வாங்கும் தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். இரு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் பிணையம் அளிக்கலாம். மாதம் ரூ.200 வீதம் 4 ஆண்டுகளுக்கு தொடர் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். டாம்கோ அனுமதிக்கும் விலையைவிட ஆட்டோவின் விலை, சந்தையில் கூடுதலாக இருந்தால் வித்தியாசத் தொகையை விண்ணப்பதாரரே செலுத்த வேண்டும்.

இது குறித்து கூடுதல் விவரம் அறிய, மேலாளர், மாவட்ட தொழில்மையம், மணிக்கூண்டு, டவுன்ஹால் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.


குறிப்பு :

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டோ வாங்க கடனுதவி அளிக்கப்படுகிறது.
இதனை அந்தந்த மாவட்ட தொழில்மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

No comments: