வக்ஃபு வாரிய ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்த கோரிக்கை
நெய்வேலி, பிப். 27: வக்ஃபு வாரியம் மூலம் தற்போது ரூ.750 ஓய்வூதியம் வழங்கப்படுவதை மாற்றி ரூ.1500 ஆக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் சங்க மண்டல சிறப்புக் கூட்டம் அதன் மாநில துணைத் தலைவர் ஷேக் முகமது காசிம் தலைமையில் நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் சட்ட ஆலோசகர் சி.சந்திரகுமார், சங்க மாநிலச் செயலர் ஷேக் அப்துல்காதர், நெய்வேலி ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
ஏஐடியுசி தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் நலச்சங்கம் துவக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே.உலகநாதன் சட்டமன்றத்தில் பள்ளிவாசல் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி பேசினார். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நலவாரியம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.
அதன்படி சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு அனைத்துப் பணியாளர்களையும் உள்ளடக்கிய உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் சங்கச் செயலர் ஷேக்அப்துல்காதர்.
அதைத் தொடர்ந்து ஏஐடியுசி பள்ளிவாசல் பணியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் பள்ளிவாசல்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கி சேமநல வாரிய பதிவு செய்ய வேண்டும். அதற்கான பதிவு நடைமுறைகளை அறிவித்து தமிழக அரசு உடனடியாக பணியைத் துவக்க வேண்டும் என்று சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment