Sunday, March 1, 2009

இதயப் பூட்டுகளைத் திறக்க வேண்டும் !

இதயப் பூட்டுகளைத் திறக்க வேண்டும் !

சிராஜுல் ஹஸன்
( பொறுப்பாசிரியர், சமரசம் மாதமிருமுறை இதழ்)





மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருந்தார்.

எப்பொழுதோ அருளப்பட்ட வேதத்தை வைத்துக் கொண்டு அதனைத்தான் பின்பற்றுவோம் என முஸ்லிம்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். பிற்போக்குத் தனத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் திணிக்கும் குர்ஆனை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் முன்னேற முடியும்.

இந்த வகையில் அவர் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசிக் கொண்டே போனார். அதற்கு இடையிடையே பலத்த கைத்தட்டலும் கிடைத்தது.
கூட்டம் முடிந்தபிறகு அந்த நண்பரைச் சந்தித்தேன். தங்கு தடையற்ற அவருடைய சொல்லாற்றலுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்து விட்டுக் கேட்டேன்.

சகோதரரே. நீங்கள் குர்ஆனைப் படித்தது உண்டா?

ஒரு நிமிடம் அவர் அதிர்ந்தார்.இப்படிப்பட்ட நேரடிக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை.

இல்லை… அது வந்து என்று இழுத்தவர் குர்ஆனில் அப்படித்தான் இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்களே என்றார்.

செவிவழிச் செய்திகளையும் ஊகக்கருத்துகளையும் கொண்டு ஒரு வேதத்தை நீங்கள் எடை போடலாமா? நீங்கள் குறிப்பிட்ட பிற்போக்குக்
கருத்துகளைத்தான் குர்ஆன் வலியுறுத்துகிறது எனில் அதற்குச் சான்றாக சில வசனங்களையாவது எடுத்துக்காட்டி யிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று கேட்டேன்.

நண்பருக்கு வியர்த்துவிட்டது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

அப்படியானால் குர்ஆனில் என்னதான் சொல்லியிருக்கு?

இப்பொழுது அவருடைய குரலில் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.

நண்பரே குர்ஆன் அறிவுப்பூர்வமான ஒரு வேதம் அதில் சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் கூறவில்லை. இறைவன் சொல்வதைப் பாருங்கள்.

பெரும் பாக்கியங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனை நாமே அருளினோம். மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும். அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினைப் பெற வேண்டும் என்பதற்காக (குர்ஆன் 38:29 )

நண்பரே வேத வசனங்களைக் குறித்துச் சிந்திக்கச் சொல்லும் குர்ஆன் அப்படிச் சிந்திக்காதவர்களைக் கண்டிக்கவும் செய்கிறது.
இவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா? ( குர்ஆன் 47:24 )

அன்பு நண்பரே உங்கள் இதயப் பூட்டுகளை நீங்கள் திறக்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.

நான் பேச்சை நிறுத்தினேன் உடனே அவர் கேட்டார். குர்ஆன் எனக்குக் கிடைக்குமா? குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியை எடுத்துக் கொடுத்தேன். நண்பரின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்.

இனிமேல் எதைப்பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அது குறித்து நன்கு தெரிந்த பிறகுதான் பேசுவேன். என்று உறுதியளித்துவிட்டு நண்பர் புறப்பட்டார். அவர் அளித்த உறுதியில் அழுத்தம் இருந்தது. கூடவே நிதானமும் இருந்தது.


சமரசம் பிப்ரவரி 16-29, 2009 இதழிலிருந்து

www.samarasam.net

சமரசம்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
செனை 600 012
தொலைபேசி : 2662 0091
தொலைநகல் : 2662 0682
samarasam12@gmail.com