Thursday, February 19, 2009

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை!

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை!

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை !

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இராணுவப் போரைச் சிங்கள அரசு முடுக்கி விட்டிருக்கிறது விடுதலைப்புலிகளை முற்றிலும் ஒழித்துவிட வேண்டுமென்ற வெறியில் முல்லைத் தீவை முற்றுகையிட்டிருக்கிறது இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலங்கையின் இனப்பிரச்சனை சிங்கள-தமிழ் தமிழ்-முஸ்லிம் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிரச்சனையாக முப்பரிமாணம் கொண்டதென்பதை ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள் இன்றைய சூழலில் அவர்களின் நிலைமையை அறிவதற்காக தமிழகம் வருகை தந்திருந்த இலங்கைக் கவிஞர்கள் அல் அஸுமத் தாஸிம் அஹமது, அஷ்ரஃப் சிஹாப்தீன், ஆகியோரை அணுகினோம் அவர்களிடம் தொடுக்கப்பட்ட வினாக்களும் அவர்கள் தந்த பதில்களும் இங்கே இருப்பும் பொறுப்புமாக வெளியிடப்படுகிறது.

இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன?

கவிஞர் அல் அஸுமத் : வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அதி உயர்நிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தாய் மண் வாழ்க்கை அற்றுப் போயிருக்கிறது இன்னுமே அவர்களுக்குரிய மாற்றீடு செம்மையாகச் செய்யப்படவில்லை.

கிழக்கு வாழ் முஸ்லிம்கள் இரு தசாப்தங்களுக்குப் பிறகு ஓரளவு ஆறுதலுடன் இன்று காணப்படுகிறார்கள்.இந்த ஆறுதல் நிலை வாழ்க்கை உறுதியானதை எதிர்காலம்தான் உறுதி செய்ய வேண்டியும் இருக்கிறது.

மூன்றாம் நிலைப்பட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இந்திய வம்சாவழித் தமிழர்களுடனும் என்றும் வழக்கம் போல் வாழ்கிறார்கள் வடக்கு, கிழக்கு அல்லாத ஏனைய பகுதிகளில் வாழ்பவர்கள் இவர்கள். வடக்கு, கிழக்கிலும் முன்னரெல்லாம் முஸ்லிம்கள் இவர்களைப் போன்றுதான் வாழ்ந்தார்கள்.

வடக்கு ,கிழக்குப் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் பிற இன-மத மொழி கலாச்சாரத்துப் பெரும்பான்மை மக்களுடன் உலகில் பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்குள்ள அதே வாழ்நிலைதான் எங்களுக்கும் உள்ளது.

அவ்வப்போது சிறு-பெரும் பிரச்சனைகள் எழத்தான் செய்கின்றன சில கலந்துரையாடல்கள் அல்லது சாத்வீகமான பலத்த எதிர்ப்புகள் அவற்றை மாற்றி விடுகின்றன அல்லது அமுக்கி விடுகின்றன.

இலங்கை முஸ்லிம்கள் என்றும் அமைதி விரும்பிகளே ஆயினும் இலங்கையைப் பொறுத்த மட்டில் எங்களுக்குள் நாங்கள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்வதுதான் பெரும்பாடாக இருக்கிறது.

இலங்கை இனவாதயுத்தம் நடந்து கொண்டிருக்கும் இந்நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுதான் என்ன?

கவிஞர் தாஸிம் அஹமது : இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் முஸ்லிம்களை மட்டும் பாதிப்புக் குள்ளாக்கவில்லை பொதுவாகப் பெரும்பானமை இனமான சிங்களவர்களும் வடக்கு கிழக்குக்கு அப்பால் வாழ்கின்ற தமிழர்களும், நாட்டில் எங்கும் பரவலாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களும் அரசியல் சமூக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. இதில் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபாடுகள் உண்டு. இதனை இந்த இட்த்தில் விரிவாக கூறமுடியாது.
முப்பது வருடங்களாக நடைபெற்று வரும் இந்த கோர யுத் த த்தினால் அகதி வாழ்க்கையின் துயரங்கள், அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் சொல்லி விளங்க முடியாதவை. குறிப்பாகத் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவரின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இரு தலை முறையினரின் சமூக – பொருளாதார நிலை மிகமிகப் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. வர்த்தக வாணிபம், தொழில் வாய்ப்புகள் அரசியல் பங்களிப்பு என்பன உள்நாட்டில் மிகவும் மோசமான நிலையில் இருந்து இரு சமூகங்களுக்கிடையேயும் காணப்படுகின்றன. இன்றைய இந்த நிலைக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் தேவை. அரசியல் தீர்வு பற்றிப் பேசிப் பேசியே இருபது ஆண்டுகள் கழிந்து விட்டன.

தமிழ் விடுதலைப் போராட்டம் தொய்வுறும் நிலையில் முஸ்லிம் சமூகம் பேரினவாத த் தால்தான் பாதிக்கப்படுவதற்கான நிலை தோன்றுமா ?
கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் :

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அங்கு இரண்டாவது சிறுபான்மையினர் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சமூகம் ஒரு பேரினவாத சக்தியேயாகும். விடுதலைப் போராட் ட்த்துக்கு முன்பும் சரி, பின்னும் சரி நம்பிக்கை தரக்கூடிய வகையில் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களோ விடுதலை இயக்கங்களோ நட்ந்து கொண்ட்து கிடயாது. முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களில் நம்பிக்கை வைத்து விடாமல் தடுக்கவும் முஸ்லிம்களை ஒரு அரசியல் சக்தியாக மாற்றவும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஓர் அரசியல் இயக்கத்தை நிறுவ வேண்டியிருந்தது.

எந்த ஒரு தேசத்திலும் சிறுபான்மையாக வாழ்வோர் சற்று அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் உண்டு. பேரினவாத் தின் கரங்களில் அவ்வப்போது சிக்காத சிறுபான்மை உலகத்தில் கிடையாது.

நாங்கள் இப்போது 1983 க்கு அதாவது தமிழ் விடுதலைப் போராட் ட த்துக்கு முந்திய காலப் பிரிவைக் கனவு காண்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, விடுதலைப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களவர்களும் அவ்வாறான ஒரு மனநிலையோடுதான் உள்ளார்.

என்றோ ஒரு நாள் சமாதானம் வந்துவிடக்கூடும். அல்லது இப்பிரச்சனை ஏதோ ஒரு வழியில் தீர்வுக்கு வரக்கூடும். ஆனாலும் சிறுபான்மையினரை அலட்சியத்துடனும் சந்தேகத்துடனும் பேரினவாதம் நோக்கும் நிலை உருவாகும். இவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும் தார்மீகப் பொறுப்பு ஆயுதமேந்திப் போராடிய விடுதலை இயக்கங்களையே சேரும்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எந்த பேரினவாதமும் எந்த சூழ்ச்சிக்கும் திட்டமிடலாம். செய்யலாம். ஆனால் சூழ்ச்சிக்கார ர் களுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் மட்டுமே !

எதிர்காலம் என்பது அல்லாஹ்விடம் உள்ளது. எல்லாவற்றுக்கும் அவனே போதுமானவன்.

மேற்காணும் பதில்கள் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களேயாகும்.

எந்த நாடாக இருந்தாலும் இலட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் சூறையாடப்படுவதை எவராலும் பொறுக்கவியலாது. சொந்த மண்ணில் சொத்தையிழந்து, சுகத்தை இழந்து, அகதிகளாக அல்லாடும் அனைத்து மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் அந்த நாட்டு அரசு பொறுப்பேற்க வேண்டும். போரின் மூலமாக எதையும் நிரந்தரமாகச் சாதித்துவிட முடியாது.

ஆயுதம் ஏந்திய வண்ணமாகவே இருந்து கொண்டு அமைதியை நிலைநாட்ட முடியாது.
அனைத்து தரப்பு மக்களும் சமாதானத்தோடு, சம உரிமையோடும் வாழ அந்நாட்டு அரசு முயலவேண்டும். பிற நாடுகளும் அதற்கு உடனடியாக உதவ வேண்டும். அமைதிப் பேச்சு தொடர்ந்திடவும், இராணுவ நடவடிக்கைகள் ஒழிந்திடவும் வேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே த த் தமக்குள் ஒற்றுமையும், பிறவகுப்பாரிடம் நல்லிணக்கமும் உண்டாகிட வேண்டும். ஒரு காலத்தில் இந்தியத் தீபகற்பத்தின் ஒரு பகுதியாக இலங்கிய இன்றைய இலங்கையில் புத்தரின் கருத்துக்கள் தழைத்த மண்ணில் ஞானிகள் உலா வந்த வளமான தேசத்தில் மத நல்லிணக்கமும், மனித நேய ஒருமைப்பாடும் மலர்ந்து அமைதி தவழ வேண்டும் என்பதே அனைவரது இறைஞ்சுதலாகும்.

( இனிய திசைகள் மாத இதழ் பிப்ரவரி 2009 லிருந்து )

தொடர்புக்கு : 9444 165153

No comments: