உலகை உலாவர ஊக்குவிக்கும் இஸ்லாம்
( பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ. பி.டி. )
அவன் தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு )வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே அதன் பல கோணங்களிலும் சென்று அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொள்ளுங்கள்.
(அல்குர் ஆன் 67;15 )
பூமி ! ஆதம் பெறும் மக்கள் மீது மிக அன்பு கொண்டு அல்லாஹுத் தஆலா அளித்த அரிய பரிசு பூமி. விண்ணையும்,மண்ணையும் அழகுறப் படைத்து அனைத்து வசதிகளையும் அள்ளித் தெளித்து ஒழுங்குற மனிதன் வாழ அல் குர் ஆன் மூலம் நெறிப்படுத்தினான்.அறிவுப்பசிக்கு தீனியாக அமைவதே திருமறையின் வழிகாட்டுதல் என்பதை அல்முல்க் என்ற அத்தியாயத்தின் மேற்கண்ட வசனம் முன் மொழிகிறது.
வசதி என்பது மனிதனின் எண்ணத்தில் மட்டுமின்றி உலகின் வண்ணத்திலும் பொதிந்துள்ளது. ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட அனைத்து உயிரினங்களையும் படைத்து ஆறறிவு கொண்ட மனிதன் இறைவன் வகுத்த வரம்புக்குட்பட்டு இவற்றை அனுபவிக்க வேண்டுமெனப் பணித்தான். உலகின் பல்வேறு நாடுகள், பல்வேறுபட்ட தாவரங்களையும், உணவு வகைகளையும் படைத்தவன் அவனே. இவைகளைப் பற்றி பல கோணங்களில் தெரிந்து கொள்ள வேண்டும்,அவற்றைப் புசித்து மனிதன் மகிழ வேண்டும்,அவனது அளப்பரிய அருட்கொடைகளைப் பற்றி ஆராய வேண்டும்.மனிதனுக்கு அருளப்பட்ட நுண்ணறிவுத் திறனால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என அல்லாஹுத் தஆலா விரும்பினான்.
இதை நாம் புனித ஹஜ் பயணத்தில் கண்ணால் காணலாம். அந்த மாபெரும் உலக நாட்டில் பல கோணங்களிலிருந்து பலவகை கலாச்சாரங்களை மேற் கொள்ளும் மனிதர்கள் மட்டுமல்ல. பன்னாட்டு பழவகைகளும்,உண்டிகளும் மண்டிக் கிடக்கின்றன. எந்த நாடுகளில் சிறந்த உணவு வகைகள் உள்ளனவோ அத்தனையும் அங்கு வந்து குவியும். அவைகளைப் புசித்து இறையருளை சிந்தித்து சித்தமெல்லாம் பக்தியில் கரைந்துருகும் வாய்ப்பு அங்கு தான் கிடைக்கிறது.
இதைத் தவிர பல நாடுகளுக்குச் சென்று வர வாய்ப்பு பெற்ற மற்றவரும் அந்தந்த பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகளைக் கண்டு தத்தம் நாட்டிலும் இவ்வசதிகளை இறக்குமதி செய்ய விழைவர், முயற்சி மேற்கொள்வர் என்பது வெள்ளிடைமலை. இதனை இக்காலத்தில் கண்கூடாகப் பார்க்கிறோம். தொழில் வளங்கள், பயிர் வளங்கள், அறிவியல் கூறுகள் வான்வெளி ஆய்வுகள் இவை பல்கிப்பெருக வேண்டுமானால் பூமித்தாயின் மடியில் தவழும் மனிதக்குழந்தைகள் பல கோணங்களில் சென்று ஆய்வு செய்வது இன்றியமையாதது என்ற தத்துவம் இத்திருவசனத்தில் புதைந்துள்ளது எனலாம்.
நன்றி :
குர் ஆனின் குரல்
மாத இதழ்
ஜனவரி 2009
No comments:
Post a Comment