Thursday, April 30, 2009

மனித நேய விரோதிகள் யார்?

மனித நேய விரோதிகள் யார்?

(காயல் இளம்பிறையான்)
kayalpirai@gmail.com

இந்திய பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அனல் பறக்கும் பிரச்சாரங்கள், அறிக்கை போர்கள், வாக்குறுதி மழைகள் என தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கிவிட்டது. இதில் தமிழக முஸ்லிம்களின் நிலை என்ன? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சிபுரியும் இருபெரும் திராவிட கட்சிகள் இம்முறையும் ஒரு முஸ்லிமுக்குக்கூட வாய்ப்பு வழங்காதது பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் தருகிறது. இதற்கு மூலகாரணம், முஸ்லிம்கள் பல்வேறு தலைமையின் கீழ் செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களிடத்திலே மேலோங்கி இருப்பதுதான். இந்த எண்ணம் முறியடிக்கப்பட வேண்டும். இதற்கு முடியுமான எல்லா முயற்சிகளையும் எடுத்தாக வேண்டிய கடமையும், கடப்பாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உண்டு என நான் வலியுறுத்துகிறேன். இது எனது சொந்தக் கருத்தல்ல. நமது சமுதாயத்திலுள்ள நடுநிலையாளர்களின் கருத்தாக உருப்பெற்றிருக்கிறது.

பல நேரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக பேசி மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை விளைவித்துவரும் பா.ஜ.க-வைப் போலவே அ.தி.மு.க-வும் சில நேரங்களில் சிறுபான்மையினரை சீண்டி வருகிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் குறிப்பிடலாம்.

1. பொது சிவில் சட்டம் வேண்டும், 2. ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்ட வேண்டும்? 3. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் மதமோதல்களை உருவாக்கும் போன்ற பா.ஜ.க-வின் ஊதுகுழல் போல் இப்படிப்பட்ட அர்த்தமற்ற அபத்தமான கருத்துக்களை கூறி வருகிறது. எனவேதான் பி.ஜே.பி தமிழகத்திற்கு அவசியமில்லை. அதன் கொள்கைகளைத்தான் அ.தி.மு.க. பரப்பிவருகிறதே என அரசியல் விமர்சகர் சோலை அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை இன விரோதப்போக்கை கடைபிடித்துவரும் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு சீட்டு தந்தால், தங்களின் கொள்கைகளை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு அதனைப்பெற பேரம் பேசும் பெருமைக்குரியவர்கள்தான் மனித நேய மக்கள் கட்சி என்பதை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டார்கள்.

மனிதநேயத்திற்கும் அவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பதை மறைப்பதற்காகவே முஸ்லிம் என்ற பெயரை வைப்பதற்கு அஞ்சுகின்றனர். இவர்கள்தான் முஸ்லிம்களின் காவலர்களாம்!

சமுதாயத்தின் ஒற்றுமையை, கட்டுக்கோப்பை சிதைத்து உடைத்து சின்னாபின்னப் படுத்தியதுதான் அவர்கள் செய்த மகத்தான சாதனை. சமுதாயத்தை ஓரணியில் திரட்டுகிறோம் என்று புறப்பட்டவர்கள் தாங்களே பல அணிகளாக பிரிந்ததுதான் மிச்சம். தங்களுக்கிடையே திருட்டுப்பட்டங்கள் சூட்டி திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் சமுதாய வழிகாட்டிகளாம்! வெட்கமாயில்லை?

முழுக்க முழுக்க வஹ்ஹாபிசத்தை விதைத்துவரும் உங்களுக்கும் வக்ஃப் வாரியத்திற்கும் என்ன சம்பந்தம்? கோடிக்கணக்கான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தில் உள்ளது என்பதை குறிவைத்துத்தானே அந்தப்பதவியை அடம்பிடித்து வாங்கி அனுபவித்து வந்தீர்கள்? இல்லை இல்லை அந்த வாரியத்தை நெறிபடுத்தி, ஒழுங்குபடுத்தத்தான் அதனைக்கேட்டுப் பெற்றோம் என்றால், அதனை கைகழுவியதன் காரணம் என்ன? உங்களை நோக்கி சமுதாயத்திலிருந்து புறப்பட்ட எதிர்கணைகள்தானே? நாமாகவே விலகிவிடுவதுதான் கௌரவம் என்றுதானே அதனை ராஜினாமா செய்தீர்கள்? சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று இனியும் பகல்கனவு காணாதீர்கள்.

நீங்கள் யார்? எந்தப் போர்வையில் உலா வருகிறீர்கள் என்பதையெல்லாம் முஸ்லிம் லீக் தோலுரித்துக்காட்ட முனைந்து விட்டதால் என்னப்பேச்சு பேசுகிறோம் என்றுகூட சிந்திக்காமல் அநாகரீகமாக முஸ்லிம் லீக்கை பி.ஜே.பியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் சகோதரர் ஜவாஹிருல்லாஹ். நாவடக்கம் வேண்டும். நாவு நரகத்தற்கு இழுத்துச்செல்லும் என்ற நபிமொழிக் கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பி.ஜே.பியைப் போலவே சமூக ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை பாழ்படுத்துபவர்கள் என்று உங்களை நோக்கித்தான் மக்கள் கைநீட்டிப் பேசுகிறார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஏதோ தமிழக முஸ்லிம்கள் உங்களைத்தான் ஆதரிக்கிறார்கள், முஸ்லிம் லீக்கை கைவிட்டுவிட்டார்கள் என்ற உங்களின் தவறான எண்ணம், அகங்காரம், ஆணவம் எல்லாம் உங்களை இந்தத்தேர்தலில் தலைகுணிய செய்துவிடும் என்பது மட்டும் திண்ணம். இன்ஷா அல்லாஹ்.

உங்கள் தலைமை நிர்வாகிகளை எடுத்துக்கொண்டாலும், செயற்குழு, பொதுக்குழு என்று எடுத்துக்கொண்டாலும் எல்லோரும் வஹ்ஹாபிச சாயலைக் கொண்டவர்கள்தானே? அப்படி இருக்க, நாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ அமைப்பு என்று உங்களால் எப்படி சொல்லமுடியும்? என்று நான் வினவ கடமைப்பட்டுள்ளேன். விடையுண்டா?


இடஒதுக்கீடை தி.மு.க. அரசு நடைமுறைப் படுத்தவில்லை என்று கூறி ஒரு கூட்டம் அ.தி.மு.க-வின் பக்கமும், இல்லை இல்லை கலைஞர்தான் இந்த மகத்தான இடஒதுக்கீட்டையே நம் சமுதாயத்திற்கு வழங்கினார் என்று ஒரு குழுவும் பிரிந்து நின்று பிரச்சார சண்டை போட்டுக் கொண்டவர்கள் இன்றைக்கு எந்தக் காரணத்தை சொல்லி எதிர்த்தார்களோ அவர்கள் தி.மு.க-வை ஆதரிக்க, நன்றி கெட்டவர்களாய் ஆதரித்தவர்கள் இன்றைக்கு தி.மு.க-வை எதிர்க்கிறார்கள். இந்த இரு பிரிவினரும்தான் சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மஹல்லாக்களில், பள்ளிகளில் பிரிவினைகளை உருவாக்க முனைந்தவர்கள் என்பதற்கு தமிழகமெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் எழுதிப்போடப்பட்டுள்ள போர்டு – கரும்பலகைகளே போதிய ஆதாரமாகும்.

எனவே இவர்களை தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, எல்லோரும் ஒன்றாக புறக்கணிப்பார்கள் என்பதில் முள்ளின் முனையளவும் சந்தேகமில்லை.

No comments: