பள்ளிவாசல் பணியாளர் சங்கம்
சட்ட ஆலோசகர் சந்திர குமாரிடம் நேரடி உரையாடல்!
பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் நோக்கமென்ன? கோரிக்கை என்ன?
தமிழகம் முழுக்கவுள்ள ஏறத்தாழ 7,500 பள்ளிவாசல்களில் பணிசெய்யும் இமாம்கள், முஅதீன்கள், மதரஸாக்களில் பணி செய்யும் ஒஸ்தாது, பள்ளி கணக்கர், சந்தா வசூலர், மையத்தை குளிப்பாட்டுபவர், கபர்க்குழி வெட்டுபவர் என தமிழகம் தழுவி ஏறத்தாழ 30,000 பேர் பணி செய்கின்றனர். இவர்களுக்கு அரசு சலுகை கிடைப்பது என்பது அதிகாரி களின் மனோநிலையைப் பொறுத்து அமைகிறது. ஆனால் உத்தரவாதமில்லை. மற்ற பணியாளர்களைப் போல் இவர்கள் போராட்டம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத நிலை இவர்கள் இறைப்பணியாளர்களாக இருப்பதால்
இவர்கள் ஏதாவது ஓர் அமைப்பு சார்ந்து செயல்பட்டால் தான் குறவர், கோயில்பூசாரி, ஓவியர், இதரப் பணியாளர்கள் தங்களுக்கான நலவாரியம் பெற்றது போல் பெற முடியும். இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே பள்ளி வாசல் பணியாளர் சங்கம். இது கடந்த ஏழு வருடமாக இயங்கி வருகிறது இச்சங்கத்தின் தலைவராக சென்ற ஓரிரு நாட்களுக்கு முன்பு நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சை மேட்டுப் பள்ளிவாசல் இமாம் ஏ.எம்.எஸ்.அஹமது லியாகத்தலி நூரி அவர்கள் இருக்கின்றார்கள்.
வலது சாரி தளத்தைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ.உலகநாதன் சட்டசபையில் இவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டுமெனப் பேசினார். அவரது பேச்சை செவிமடுத்த அரசு முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிவாசல் பணியாளர்களைக் கணக் கெடுக்கும்படி வக்ஃபு வாரியத்தை பணித்தது. வக்ஃபு வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கணக்கெடுக்கச் செல்லும்போது பள்ளி நிர்வாகிகள் பயந்து கொண்டு உண்மையான கணக்கைக் கூறாது மறைத்து விட்டனர். இதனால் கணக்கெடுப்பு பாதியிலேயே நின்று விட்டது. இதுபற்றி விரிவாக எழுதி சமீபத்தில் தஞ்சைப் பகுதிக்கு வருகை தந்திருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வசம் மனுக்கொடுத்துள்ளோம். அதனில்,கணக்கெடுப்பை அரசு தான் செய்ய வேண்டும். அது எளிமையானதும் கூட ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஹெட்மேன் (V.A.O)மூலமாகவும் நகரப்பகுதிகளில் கார்ப்பரேஷன் அலுவலர்கள் மூலமாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். என்று மனுவில் கூறியிருக்கிறோம்.
ஏழு வருடமாக பள்ளிவாசல் பணியாளர் சங்கத்துக்கு பெயர் பதிவைத் தமிழக அரசு மறுப்பதாகக் கூறப்படுகிறதே?
சங்கப் பதிவு சுணக்கத்திற்குக் காரணம், அவர்கள் கேட்கும் பதிவு தொழிலாளர் நலச் சட்டத்துக்குள் வருமா? என்ற சந்தேகம் தான். எவ்வளவு நேரம் பணி செய்கின்றார்கள். எத்தனை பேர் பணி செய்கின்றார்கள் என்று எப்படி நாங்கள் மசூதிக்குள் சென்று செக்கப் செய்வது என்ற கேள்விகளை அரசு அதிகாரிகள் முன் வைத்தனர். பள்ளிவாசல்களில் 8மணி நேரம் வேலை போன்ற கணக்கெல்லாம் கிடையாது. ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை பேர் பணி, என்ன பணி என்பதற்கு ஆதாரமாக பள்ளி நிர்வாகம் தனது லெட்டர் ஹெட்டில் எழுதிக் கொடுத்து விடும். அதை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளோம். ஆகவே தர மறுக்கின்றார்கள் என்பதெல்லாம் சரியல்ல.
ஏகப்பட்ட வாரியங்களை அமைத்திருக்கும் அரசு முஸ்லிம் களுக்கு ஒரு வாரியம் கொடுப்பதில் மட்டும் தடுமாற்றம் அடைவது ஏன்?
தடுமாற்றம் நமக்குள்தான். இந்த வாரியத்தை வாங்கலாமா வாங்கக் கூடாதா? மதப்படி சரியா? சரியில்லையா? என்ற ஊசலாட்டம் பலரிடம் நிகழ்கிறது. இதன் காரணமாகச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்குச் சென்று தெளிவுபடுத்தி வருகிறோம். ஒரு பள்ளியில் 20 வருடம் வேலை பார்த்ததாகச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் தான் உலமா, முஅதீன் ஓய்வூதியம் 750/- பெறமுடிகிறது. ஒரே பள்ளியில் ஒரு இமாமோ, முஅதினோ 20 வருடம் பணி செய்வது என்பது இயலாது காரியம். அதனால் ஒரு இமாம் எந்தெந்த பள்ளியில் எத்தனை வருடம் பணி செய்திருக்கிறார் என்று சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் அது மொத்தமாக 20 வருடம் இருக்கும் பட்சத்தில் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. இந்த ஓய்வூதியம் விண்ணப்பிப்பதற்கான இலவசப் படிவத்தை 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம்.
தமிழக அரசு இப்போதைய சூழ்நிலையில் வாரியம் அமைத்தால், அது வலிமையானதாக இருக்குமா?
வாரியங்களுடைய வருமானத்தை பெருக்கும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 வாரியங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் மட்டுமே 219 கோடி நிதியுள்ளது. இந்த வாரியத்தில் மட்டும் இவ்வளவு நிதி சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஒவ்வொரு கட்டிடமும் கட்ட பிளான் அப்ரூவல் கொடுக்கும் போது கட்டிடத் தொழிலாளர் வாரியத்துக்காக 1003/- (ஆயிரத்து மூன்று ரூபாய்) நிதி பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து எடுத்து மற்ற வாரியங்களுடைய அலுவலகச் செலவை மேற்கொள்ளலாம் எனப் பேசப்பட்டுள்ளது. இதற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் எங்களது நிதியை மற்ற வாரியங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வாரியங்களுடைய அலுவலகச் செலவுக்கே திண்டாடும் போது பள்ளிவாசல் பணியாளர்களுக்கு வாரியம் அமைக்கப் பட்டால் மட்டும் என்ன நன்மைகள் கிடைக்கும்?
முதலில் வாரியம் அமைக்கப்பட வேண்டும். வாரியம் அமைப்பதற்கு முன்னதாக நாம் என்ன கோரிக்கை வைக்கிறோம் என்பதைத் தெளிவாகப் பிரேம் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு தனித்தனியாகச் சென்று குரல் கொடுக்காமல் அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சென்று கேட்டுப் பெற வேண்டும்.இதற்கு அமைப்பு ரீதியாகச் செயல் படவேண்டும். வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் பலரிடமும் சிக்கி வீணாகும் வக்ஃபு சொத்துக்களை வாரியத்துக்குக் கொடுங்கள் எனக்கேட்டு வாங்கலாம். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாரியத்தை செயல்படுத்தலாம். இன்னும் ஒன்றாக அமர்ந்து பேசி செயல்பட நிரம்ப வாய்ப்புகள் உள்ளன.
வாரியம் அமைக்கப்பட்டால் பள்ளிவாசல் பணியாளர்கள் என்னென்ன நன்மைகளைப்
பெறமுடியும்?
வாரியத்தில் பதிவு செய்து ஐந்து வருடம் ஆகியிருக்க வேண்டும். அவர்களுக்கு 400/- ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதியம் பெற 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். வாரிய உறுப்பினர்கள் விபத்தில் இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும், இயற்கை மரணத்துக்கு 15,000 + 2,000 மொத்தம் 17,000மும் 10 ஆவதுக்கு மேல் படிக்கும் வாரிய உறுப்பினர்களுடைய குழந்தைகள் இருவருக்கு 6000 த்திலிருந்து 10,000/-ம் வரைக்கும் கிடைக்கும். இரண்டு பெண் குழந்தைகளுடைய திருமணத்துக்கு 2,000/- வீதம் கிடைக்கும். பிரசவத்துக்கு 6,000/-ம் கிடைக்கும். வாரிய உறுப்பினர் பதிவை 2 வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
இந்த சங்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? சங்கத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபலப்படுத்து வதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
30 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600 உறுப்பினர்கள் இச்சங்கத்தில் உள்ளனர். சங்க வருடச் சந்தா 120/- ரூபாய். சங்கத்திற்கு அலுவலகம் இல்லை. தற்போதைக்கு தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்துக்கு கீழ் தளத்தில் இயங்கி வருகிறது. விரைவில் தனி அலுவலகம் ஏற்பாடு செய்ய உள்ளார்கள். மாவட்டந்தோறும் சென்று, பள்ளிவாசல் இமாம், முஅதீன், மற்றுமுள்ளோரைச் சந்தித்து பேசி வருகிறார்கள். – விரைவில் தனி அலுவலகத்தில் இயங்கும்.
(குறிப்பு) : ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் துணைத்தலைவராகப் பணி செய்பவர் திரு.வழக்கறிஞர் சந்திரகுமார் அவர்கள். இவர் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்துக்கு சட்ட ஆலோசகராகச் சேவையாற்றுகிறார்.)
பள்ளிவாசல் பணியாளர் சங்கப் பொதுச் செயலாளரோடு நேரடி உரையாடல்!
தங்களது சங்கத்தின் செயல்பாடுகள்; இது வரை என்ன விதமான பணிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள்?
பிலால் சங்கம் என்று முதலில் ஆரம்பித்தோம். எங்களது செயல்பாடுகளைப்
பார்த்து இமாம்கள் எங்களோடு இணைய ஆரம்பித்தார்கள். பிலால் என்று மட்டும் இருந்தால் சரியாக இருக்காது. பள்ளிவாசலில் பணிசெய்யக்கூடிய அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பள்ளிவாசல் பணியாளர் சங்கம் எனப் பெயர் மாற்றிக் கொண்டுள்ளோம். ஜெயலலிதா அம்மா அவர்களது ஆட்சி காலத்தில் 6 கோரிக்கைகளை முன்வைத்தோம். உலமா ஓய்வூதியம் 500 ஆக உள்ளதை 1,000/- ம் ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும். உலமாக்கள் இறந்த பிறகு ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது. இறந்த பிறகு உலமா மனைவிக்கு வழங்கப்படவேண்டும். உலமா பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, உலமா பெண் பிள்ளைகளுக்கு திருமண உதவித் தொகை, இமாமாகப் பணி செய்யும் உலமாக்களுக்கு வக்ஃபு வாரிய நிலங்களை கையகப்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். சங்கத்துக்கு பதிவு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம் இக்கோரிக்கைகளை ஓய்வூதியம் 1,000ம் ஆக உயர்த்த வேண்டும் என்பதை மட்டும் 750/- ரூபாய் ஆக உயர்த்திக் கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
உலமாக்கள் மத்தியில் உங்களுக்கு எப்படி ஆதரவுள்ளது?
உலமா ஒருவர் தான் இச்சங்கத்துக்கு இப்போது புதிய தலைவர் சமீபத்தில் உலமா வாரியம் கேட்டு மாநாடு போட்டார்கள். பலரும் தீர்மானம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள். நாங்கள் அவர்களிடம் உலமா வாரியம் என்று கேட்காதீர்கள் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கம் என்று கேளுங்கள், ஏழு வருடமாக முயற்சிக்கிறோம் எங்களது கோரிக்கைகள் செக்ரட்டிரியேட்டில் உள்ளன. வீணாக்கி விடாதீர்கள் என தொலைபேசியில் கூறினோம்.ஒரு சிலர் ஒத்துக் கொண்டாலும் ஒரிருவர் ஒத்துக்கொள்ளவில்லை. உலமா சபைத் தலைமையை அணுகினோம். உங்களது பாதை எங்களுக்கு ஒத்துவராது உங்களுக்குப் பின்னால் நாங்கள் வரமாட்டோம் என்றார்கள்.
இதற்குக் காரணம் என்ன?
எங்களைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதுவது தான். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மூலமாகவே ப.ப. சங்கப்பிரச்சனைகளை அணுகி வருகிறோம் இந்த மாதிரி பொது அமைப்போடு சேர்ந்து செயல்பட்டு தான் பெற முடியும். முஸ்லிம் அமைப்புகளுக்குள் ஒற்றுமை இல்லை. அவர்கள் கேட்டாலும் அரசும் அதிகாரிகளும் செவி சாய்க்கப் போவதில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதனால்தான் இவ்வகையில் முயற்சிக்கிறோம். எங்களது அலுவலகம் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத்திற்குக் கீழாக அலுவலகம் இல்லாத காரணமாக தற்காலிகமாக இயங்கி வருகிறது. அவர்கள் தான் எங்களுக்கு உதவி வருகிறார்களே தவிர நாங்கள் அவர்கள் கட்சிக் கூட்டத்திற்கோ, தேர்தல் விளம்பரத்திற்கோ, கட்சிப் போராட்டங்களிலோ கலந்து கொள்வதில்லை. இது தான் உண்மை. எங்களது நோக்கம் இறையில்லப் பணியாளர்களாக விளங்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான். ஒரு முக்கியமான செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலமா ஓய்வூதியத்துக்காக ஒருவர் விண்ணப்பிக்கும் போது 20 வருடப் பணிசெய்தல் அவசியம் என்ற சட்டம் ஒருபுறம். விண்ணப்பிக்கும் உலமா, வக்ஃபு வாரியத்தில் வரி கட்டும் பள்ளிவாசலில் பணி செய்தால் தான் அந்த ஓய்வூதியமும் கிடைக்கும் என்பது மறுபுறம். வருமானம் இல்லாத காரணத்தால் வரி கட்டாது வெறுமனே வக்ஃபு வாரிய சர்வே பதிவோடு இயங்கும் பள்ளிகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இதனில் பணிசெய்யும் இமாம் களுக்கு இல்லை எனச் சொல்லும் வக்ஃபு வாரியச் சட்டமும் மாற்றப்பட வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.
எங்களது சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாவட்டத்துக்கு ஐந்து பேர் என 150 பேர் உள்ளனர்.
குறிப்பு : பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஷேக் அப்துல் காதர் என்ற இவர், முன்னாள் முஅதீனாக இருந்து இப்போது இச்சங்கத்துக்கு முழு நேர ஊழியராகப் பணி செய்கின்றார். இச்சங்கம் தற்போது இயங்குவது நெ.117, கீழ வாசல் வீதி, தஞ்சாவூர்.
நன்றி : முஸ்லிம் முரசு – ஜனவரி 2009
No comments:
Post a Comment