அன்று குழந்தை தொழிலாளி: இன்று சாதனை மாணவி!
First Published : 15 May 2009 12:59:52 AM IST
Last Updated : 15 May 2009 02:11:48 AM IST
திருப்பூர், மே 14: சாதனை படைக்க வறுமையும் மொழியும் தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் திருப்பூர் மாணவி புஷ்ரா பானு.
குழந்தை தொழிலாளியாக தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்ட அவர், பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ரஹமத்துல்லா, சாராம்மா தம்பதியின் மகள் புஷ்ரா பானு. இவர் கேரளத்தில் 4-ம் வகுப்பு வரை படித்தார். வறுமை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் பிழைப்புத் தேடி திருப்பூர் வந்தனர். பின்னர் புஷ்ரா பானு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்தார்.
இதையறிந்த கோவை கிளாஸ் அமைப்பினர் அவரை மீட்டு, தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தனர். பின்னர், ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்து 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியிலேயே படித்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அவர் 994 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 176 மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்: தமிழ் - 176, ஆங்கிலம் - 145, கணிதம் - 179, கணினி அறிவியல் - 169, இயற்பியல் - 164, வேதியியல் - 161. மொத்தம் 1200க்கு 994.
நான் பொறியாளராக விரும்புகிறேன். ஆனால், குடும்ப வறுமை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. யாரேனும் உதவி செய்தால் படிப்பைத் தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
திருப்பூர் கல்லூரி சாலை ராம்ஜி நகரில் வசிக்கும் அவரது வீட்டு அலைபேசி எண் 9943016993.
No comments:
Post a Comment