அமெரிக்காவில் ஜும்மா - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
-------------------------------------------------------------------------------------
நான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும் என்னுள் எழுந்து நிற்கும் கேள்வி - ‘ஜும்மா’வுக்கு
எங்கே போவது ?. அமெரிக்கப் பயணமும் அதற்கு விதிவிலக்கல்ல.
நியூ யோர்க்கில் ஒரு பெரிய பள்ளி இருப்பதாகச் சொன்னார்கள். கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிக்
கொண்டேன். நியூ யோர்க் என்பது மேன்ஹட்டன், ப்ரூக்ளின், குயீன்ஸ், ப்ரோங்க்ஸ், ஸ்டட்டென் தீவு என்ற
ஐந்து பெரும் பகுதிகளைக்கொண்ட ஒரு மா பெரும் நகரம்.
நான் தங்கி இருந்தது ஸ்டேட்டன் தீவில் திரு தேவகுமர் ராசையா - ஸ்வாதி சாந்த கௌரி தம்பதியர் வீட்டில். !
ஸ்வாதி சொன்னார்: “ ஐயா, இங்கே நான் வழமையாக எங்கள் ஊர் சாமான்கள் வாங்கும் ஒரு கடைக்கு எதிரில் அல்பேனிய கலாச்சார மையம் என்ற ஒன்றிருக்கிறது அவர்களைக் கேட்டால் தெரியும்” என்றார்.
நண்பகல் 12 மணிக்கே சொன்ன இடத்துக்கு கார் மூலம் அனுப்பி வைத்தார். ஒரு இஸ்லாமிய கலாச்சார
மையம், ஓர் உயர்தரக் கல்வி நிலையம், ஒரு விசாலமான பள்ளி, ஏராளமான வாகனம்க்கள் நிறுத்த இடம்
என்று ஒரு பெரிய வளாகமே இருந்தது.
முனைவர் பட்டம் பெற்ற ஃபரீத் பர்தோலி தான் அந்த மையத்தின் செயலர் மற்றும் பள்ளியின் பேஷ் இமாம்.
பன்னிரண்டரை மணிக்கு எல்லோரும் ஒருங்கிணைந்து, உரத்த குரலில் யாசீன் ஓதினார்கள். பிறகு அதான்.
சுன்னத் தொழுகை. பிறகும் அதான். அதையடுத்து ஜும்மா பிரசங்கம் - அபேனிய மொழியில். பிறகு அவரே
தொடர்ந்தார் - ஆங்கில மொழியில்...!
“அக்கிரமங்களை எதிர்க்கும் கடமை இன்ன இனத்தாருக்கு - மதத்தாருக்கு என்றில்லை. மனிதராகப் பிறந்த
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ‘ஜிஹாத்’ என்பது அநியாயங்களுக்கு எதிரான போராட்டமே தவிர
அக்கிரமங்களுக்கு ஆதரவான கூக்குரல் அல்ல.” அழகான கருத்துக்கள். ஆணித்தரமான வாதம். Dr. ஸாக்கிர்
நாயக்கின் சாயல் தெரிந்தது. நம்மவர்களும் இதைப் பின் பற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
வழமையாக மதிய உணவு அல்லது மென் பதார்த்தங்கள் வழங்கப்படும் என்றார்கள். ஆனால் அன்றில்லை.
அதற்கு, அடுத்த வாரம் பள்ளிக்கூட பட்டமளிப்பு விழா நடைபெற விருப்பதால் தடபுடலான விருந்துக்கு
ஏற்பாடாகியுள்ளதாகச் சொன்னார்கள். (நம்ம அதிர்ஷ்டம் அப்படி !!!). அமெரிக்காவில்., ஏன் துபையிலும்
கூட, முதல் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போவதையும் ஒரு பட்டமளிப்பு விழா நடத்தி
கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
மக்காவுக்குப் பிறகு பள்ளியில் அதிகம் அதிகமான வெளிநாட்டவர்களைச் சந்தித்தது லண்டனில்..! பிறகு
இதோ இங்கே..!! ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் - சுவையான அனுபவம். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment