Wednesday, August 5, 2009

அல்குர்ஆன் ஓர் அற்புதம் - “இறையருட் கவிமணி” தமிழ்ச் செம்மல் பேராசிரியர் கா. அபதுல் கபூர், எம்.ஏ.டி.லிட்.

அல்குர்ஆன் ஓர் அற்புதம் - “இறையருட் கவிமணி” தமிழ்ச் செம்மல் பேராசிரியர் கா. அபதுல் கபூர், எம்.ஏ.டி.லிட்.

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=114


வையகத்து மக்கள் வாய்பிளந்து வியக்கின்ற அற்புதங்கள் பலவற்றை ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன. எகிப்து நாட்டில் ஏற்றத்துடன் மிளிர்கின்ற பிரமிடுகள் எனப்படும் பட்டைக் கோபுரங்கள். அவற்றின் அருகாமையில் 66 அடி உயரத்திலும் 175 அடி நீளத்திலும் ஒற்றைக் கல்லில் உருவாக்கப் பட்டுள்ள ஸஃபிங்கஸ் எனப்படும் சிங்க வடிவச் சிலை. இராக் நாட்டில் புராத் நதிக்கரையில் திகழ்ந்த பண்டைய பாபிலோனியாவின் தொங்குதோட்டம். கிரேக்க நாட்டில் 127 சலவைக் கற்களின் மீது நிறுவப்பட்டிருக்கும் 60 அடி உயரமுடைய ஆர்ட்டிமிஸ் ஆலயம். ஹெலிகார்னஸஸ் என்னுமிடத்தில் எழில்மிகு தோற்றத்துடன் எழுப்பப்பட்ட மெளஸலஸ் மண்ணறை. ரோட்ஸ் நகரத்தில் கிரேக்கர்களின் கதிர்க்கடவுளுக்காக 109 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கலச் சிலை. அலெக் சாந்திரியாவில் 600 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம். சீன நாட்டின் வட எல்லையில் 2550 மைல் நீளத்தில் நிருமாணிக்கப்பட்ட உயரமான நெடுஞ்சுவர். பைசா நகரத்தில் 116 அடி உயரத்தில் சாய்ந்து நிற்கின்ற கோபுரம். பேரரசர் ஷாஜஹான் துணைவியார் மீது கொண்ட காதற் சின்னம் கண்ணீர்த்துளியாக உறைந்துவிட்ட தாஜ் மஹால். இவைகளெல்லாம் பாருலகம் கண்ட பேரற்புதங் களாகப் போற்றப்படுகின்றன. இவற்றினும் மேலான சில அற்புதங்களைப் பற்றி மனிதன் சிந்திப்பதே இல்லை.
மலைகளைப் போன்று உயரமாக எழுந்த அலைகளின் நடுவே மரத்தாலும் ஆணிகளாலும் அமைக்கப்பட்ட ஒரு கலத்தில் நபி நூஹ் (அலை) அவர்களும் குழுவினரும் எத்தகைய இடையூறுமின்றிக் காப்பாற்றப்படுகின்றனர். கொடியோன் நம்ரூதின் ஆணைப்படிக் கோபுரமாகக் கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குண்டத்தில் இறைநேயர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி எறியப்பட்டபோது நெருப்புக் குண்டம் குளிர்ச்சிமிக்க தண்ணீர்க் குளம் போன்று மாறிவிடுகின்றது. அட்டதிசை போற்றும் சுலைமான் நபி (அலை) அவர்களின் அரசவையில் ஸபா நாட்டரசி பல்கீஸின் அரியணை நாடியவுடன் கொணரப்படுகிறது. முன்னவன் தூதர் மூஸா (அலை) அவர்களின் ஆஸாக் கோல் பாம்பாக மாறுகின்றது. பாறையில் அடித்தவுடன் நீரூற்றுக்கள் தோன்றுகின்றன. இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றியே பிறக்கின்றார்கள். தொட்டிற் பருவத்திலேயே தெளிவாக உரையாடுகின்றார்கள். இறை யாணைப்படி இறந்தோரை எழுப்புகின்றார்கள். பிறவிக் குருடர்களையும், பெரு நோயாளிகளையும் குணப்படுத்து கின்றார்கள்.
பாலைவன நாட்டின் பாரான் பள்ளத்தாக்கில் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தன்னந்தனியாகக் கிடந்த புனிதக் குழவியொன்றன் பூவடிகள் பட்டுப் பொங்கியெழுந்த நீரூற்றொன்று, இற்றைநாள் வரையில் வற்றாமலிருந்து வையகத்து மக்களுக்கெல்லாம் வாய்கமழ, மனங்குளிர ஜம்ஜம்மென்று நீரூட்டி வருகின்றது. அந்த ஜம்ஜம் ஊற்றின் கரையிலேயே எழுந்த மக்கமா நகரத்தில் அனாதையாகப் பிறந்து எழுதப் படிக்கத் தெரியாதிருந்த ஒருவரால் தோற்று விக்கப்பட்ட இஸ்லாமிய நாகரீகம் இன்று உலகளாவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் நெறியின் அடிப்படை யாகவும், ஆதாரமாகவும் அமைந்துள்ள அல்- குர்- ஆன் என்னும் அருள்மறை அவனியிலுள்ள நூல்கள் அனைத் திற்கும் அன்னையாகத் திகழ்ந்து அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு வளர்ச்சியினால் புதுமை மாறிவிடாமல், இன்றளவும் இணையற்ற நூலாய் விளங்கி வருகின்றது. இத்தகைய அற்புதங்களை ஆறறிவு படைத்த அற்புத மனிதன் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
இறைத் தூதர்களாக இவ்வுலகில் வாழ்ந்த நபிமார் களெல்லாம் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக் கேற்ற அற்புதங் களைக் காட்டிச் சென்றார்கள். இசை இன்பத்தில் இதயத்தைப் பறிகொடுத்து வாழ்ந்த மக்களிடையே தோன்றிய ஹலரத் தாவூத் (அலை) அவர்கள் நாத வேதமாகிய சபூர் மறையை ஓதிக் காட்டினார்கள். மந்திரவாதிகளின் மாயத் தந்திரங் களெல்லாம் மேலோங்கி நின்ற காலத்தில் வாழ்ந்த ஹலரத் மூஸா (அலை) ஆஸாக் கோலால் அற்புதம் செய்தார்கள். மருத்துவத் துறையில் மனத்தைச் செலுத்திய மக்களிடையே வாழ்ந்த ஹலரத் ஈஸா (அலை) அவர்கள் தீராப் பிணிகளைத் தீர்த்து வைத்தார்கள். மொழி வெறியிலும், இலக்கிய இன்பத் திலும், கவிதைச் சுவையிலும் மெய்ம்மறந்து திளைத்திருந்த மக்களுக்கு அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறையருள் இலக்கியமாகிய திருக்குர்ஆனை வழங்கினார்கள். பிற நபிமார் காட்டிய அற்புதங்களெல்லாம் ஏடு கமழும் பேருண்மைகளாக விளங்க அண்ணலார் காட்டிய அற்புதம் என்றும் எல்லோரும் நேரிற் காணும் பாருண்மையாக நிலைத்து விட்டது.
“அற்புதங்கள் யாவினையும் அவைமிகைத்து நிற்பனவாம் நிற்கவில்லை முந்தைநபி நிகழ்த்துமற்றை அற்புதமே”
என்பது காலமெல்லாம் கமழும் கஸீதத்துல் புர்தா என்னும் கவிதைச் செல்வம் வழங்கியுள்ள இமாம் பூஸ்ரீ (ரஹ்) அவர்கள் ’தாமத்ல தைனா’ எனத் தொடங்கும் பாவடிகளில் பதித்துள்ள கருத்தாகும். பெற்றெடுத்த குழவிகளையே உயிருடன் குழிதோண்டிப் புதைத்துக் கொடுமையின் கொடு முடியிலேறிக் கொக்கரித்து நின்ற கொடியவர்களின் கன் னெஞ்சங்களைத் தண்ணீர் போல மாற்றிய அற்புதத்தை மாநிலத்தில் வேறெங்கே காண முடியும்?
பளிச்செனத் தோன்றிய வான்மறையின் வெளிச்சத்திற்கு முன்னால் இலக்கிய அரக்கர்களெல்லாம் கண்ணைத் திறக்க முடியாமல் வாயை மூடி மெளனிகளாயினர். நானில நாயனின் மறை நாதத்தைச் செவிமடுத்த மாத்திரத்தில் ஆடிய அவர்களின் நாடிகளெல்லாம் அடங்கியொடுங்கி இதயங்களெல்லாம் இளகியோடின. வானின்று இறங்கிய பேரமுதம் அவர்களுக்குத் தேனினும் பாலினும் தெவிட்டாக் கனியிலும் தித்தித்தது. வள்ளல் நாயகமவர்களின் தலையைக் கொய்வதற்காக வஞ்சினங் கூறி வாளேந்திப் புறப்பட்டுச் சென்ற மாவீரர் உமறு, திருமறை வசனங்கள் சிலவற்றைக் கேட்டதும் மனந்திருந்தி மாநபியின் தாளடைந்து மறை நெறியைத் தழுவுகின்றார். திருநபியைத் திருத்துவதற்காகத் திட்டமிட்டு வந்த தீரர் உத்பா, திருமறை ஓதக் கேட்டதும் ஊமையைப் போல் ஒன்றும் பேசாமல், சிங்கத்தைக் கண்ட வரையாடு போன்று அசையாமல் நிற்கின்றார். உத்தமத் திருநபிக்குப் புத்தி கூற வந்த வலீதிப்னு முகைரா,”தேனீ” என்னும் அத்தியாயத்தைக் கேட்டு மறைமலர் நுகரும் தேனீயாக மாறிவிடுகிறார். பிரசித்தி பெற்ற மந்திரவாதி லம்மாதிப்னு ஸஃலத்துல் அஜ்தீ, துமாமத் இப்னு உதால், அபூ தர்ருல் கப்பார் முதலிய ஆயிரக்கணக்கானோரின் திசைமாறிய வாழ்க்கையில் திருமறையே ஒரு திருப்பு மையமாக அமைந்தது. கவிதச் செருக்கு மண்டையிலேறி யிருந்த அண்டாக்கவிஞன் இன்பத் திருமறையில் ஈரைந்து சொற்களைக் கொண்டிலங்கும் “அல் கவ்தர்” அத்தியாயத்தைச் செவி மடுத்ததும் ”மானிடர் மொழி யீதன்று” (மா ஹாதா கவ்லுல் பஷர்) என்பதாக வியந்து மொழிந்து தலைகுனிந்த நிகழ்ச்சியை அறிகின்றோம்.
அருமை நாயகமவர்களின் திருமறை வெளிப்பாடெனக் கூறுவதெல்லாம் கற்பனையின் களியாட்டே யென்றும், பித்தரின் பிதற்றலென்றும் சூனியக்காரரின் சூழ்ச்சி யென்றும் குறை கூறிக் கொண்டிருந்த மக்கத்து மக்களுக்கு மாபெரியோன் விடுத்த அறைகூவல் உலையாத இறை மறையில் நிலையாக இடம்பெற்றுள்ளது.
”நாம் நம் அடியாருக்கு அருளியதில் நீங்கள் ஐயம் கொண்டு நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அல்லாஹ்வைத் தவிர - உங்கள் உதவியாளர்களையும் நீங்கள் துணைக் கழைத்துக் கொண்டு இதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்” (2:23)
இவ்வறை கூவலை ஏற்கும் வகையில் தொடக்கத்திலே தோன்றிய ஓரிரு சலசலப்புகள் மக்கள் மன்றத்திலே நகைப்பிற் கிடமாகி அழிந்தொழிந்தன. பிற்காலத்தில் திரு மறையின் அறைகூவலை ஏற்கும் வகையில் வரிந்து கட்டிக் கொண்டு வந்த வில்லியம் மூர் போன்ற பாதிரிமார்களும் வித்தகர்களும் படுதோல்வி கண்டதோடு மட்டுமன்றி வான் மறையை வாய்விட்டுப் பாராட்டவும் தொடங்கினர். “There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர் “That the best of Arab writers has never succeded in producing anything equal in merit to the Holy Quran itself is not surprising” (மிகச்சிறந்த அரபி எழுத்தாளர் ஒருவர் கூடப் புனிதக் குர்ஆனின் ஆற்றலுக்கு ஈடானதொன்றை ஆக்கியளிப்பதில் என்றுமே வெற்றி கண்ட தில்லை என்பது வியப்பிற்குரியதல்ல”) என்பதாக பால்மர் என்பார் திருக்குர்ஆன் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
“மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து இதைப் போன்ற ஒரு குர்ஆனை உண்டாக்க முயன்றாலும் அவ்வாறு உண்டாக்கவே முடியாது அவர்களில் சிலர் சிலருக்கு உதவி செய்த போதிலும் சரியே” (17:88) என்னும் இறை தீர்ப்பு எக்காலமும் நிலைத்திருப்பதல்லவா?
மனித குலத்தின் மனப் பக்குவத்திற் கேற்பக் காலத்திற் கேற்ற முறையில் தூதர்கள் வாயிலாக வழிகாட்டி வந்த இறைவன், நிறைவான அறவுரைகள் அனைத்தையும் பெறு வதற்கு மனிதகுலம் தகுதியைப் பெற்றுவிட்ட தருணத்தில் இறுதித் தூதராகிய அண்ணல் நாயகமவர்கள் வாயிலாக வளமும் வனப்பும் செறிந்த உயர்தனிச் செம்மொழியாகிய அரபியில் நிறைவு பெற்ற இறுதி மறையை இறக்கினான். ஆகவே உலகின் இறுதி வரையிலே மனித குலத்திற்குத் தேவையான அறவுரைகள் அனைத்தும் அதில் இடம் பெற்றன. அதனை மாசுபடாமல், மாறுபடாமல் இறைவன் ஏற்றெடுத்தான்.
“அறிவுவகை யெத்தனையென் றறியவகை யில்லை
அத்தனையும் அவனுரைத்த அருள்மறையி லடக்கம்
எத்தனையோ கோடிமறை இறையுரைத்த தெல்லாம்
எடுத்தொடுக்கிக் குர்ஆனை இறையிறக்கிக் கொடுத்தான்
முத்தான குர்ஆனுக் குயர்ந்தமறை யில்லை”
என்பது ஞானமேதை பீரப்பா அவர்களின் சத்தான பாடல். அறிஞர்களால் ஆக்கப்படும் நூல்கள், யாதேனும் ஓரிரு பொருட்கள் பற்றிப் பேசுவதைப் பொதுவாகக் காணலாம். அனைத்துலகுக்கும் உலக முடிவு வரையில் வழிகாட்டும் ஆற்றல் பெற்றிருக்கும் ”நூல்களின் தாய்” (உம்முல் கிதாப்) என நுவலப்படும் இறைவனின் அருள்மறை தொட்டுக் காட்டாத பொருட்களே உலகத்திலில்லை. அறிவியல், அரசியல், அருளியல், பொருளியல், உயிரியல்,ஒழுக்கவியல், சட்டவியல், சமூகவியல் முதலிய எல்லாப் பொருட்களை யும் தன்னகத்தே தாங்கியுள்ளது ஏகநாயகனின் எழில்மறை, ஒருவன் யார் யாரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை விரிவாக எடுத்துக் கூறுவதிலிருந்து தன்னுடைய தல்லாத இல்லத்தில் நுழைகின்றபோது எத்தகைய ஒழுக்கத் துடன் நுழையவேண்டு மென்பது வரையில் எல்லாப் பொருள் பற்றியும் நுட்பமாக நுவல்லது அல்லாஹ்வின் அருள்மறை மனிதகுல ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத் துவம், உயிர்களின் உற்பத்தி, வான்வெளிப் பயணம், வானுக்கும் மண்ணுக்கு மிடையே உயிரினங்கள், அனைத்துயிர்களிலும் ஆண், பெண் அமைப்பு, அன்னையின் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி, உலோகங்களின் பயன், பொறியின் செயற்பாட்டால் விளையும் வீரியம் – போன்ற பல்வேறு பொருள்பற்றி இன்று விஞ்ஞானிகள் வெளியிடும் கருத்துக்களுக்குரிய கருவனைத்தையும் திருமறையில் காணலாம் நூஹ் நபியின் கப்பல், உரோமர்கள்மீது வெற்றி ஃபிர்அவ்வின் சடலம் ஆகியவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் காலப் போக்கிலே வெளிப்பட்டுள்ளன.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்” என்னும் இலக்கணத்திற்குப் பொருத்தமாக ஒரே நூல் பொய்யகற்றும் திருமறை யென்பதில் ஐயமே இல்லை. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய நூல்களுக்குரிய பத்து வனப்பாலும் பொலிவினைப் பெற்று ”குன்றக் கூறல், மிகைபடக் கூறல்” முதலிய குற்றங்கள் பத்தும் இல்லாததாக இலங்குகின்ற நூல் இறைமறையேயாகும். வரலாற்றைக் கூறினாலும் வாக்குறுதிகளை வழங்கினாலும் அச்சுறுத்தி எச்சரிக்கை செய்தாலும், ஆகுமானவற்றை அறிவித்தாலும், நன்மையை ஏவினாலும், தீமையைத் தடுத்துரைத்தாலும், இறை புகழை இயம்பினாலும் திருமறையில் ஒரு தனித்தன்மையைக் காணலாம். ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ற முறையில் தேவையான உவகை உருவகங்களுடன் உலகின் எப்பகுதி மக்களும் புரிந்துகொள்ளும் தன்மையில் அமைந்துள்ளன திருமறையின் போதனைகள்.
தீயானது தொட்டவரை மட்டும் சுட்டிடும் தன்மை வாய்ந்தது. தீமையோ, செய்தாரை மட்டுமின்றி அவர் வழி வந்தோரையும் வாட்டி வதைக்கும் இயல்புடையது. மனிதப் புனிதர்களாகிய இறை தூதர்களுக்குத் தீங்கிழைத்ததன் காரணமாகப் பூண்டோடழிந்த மக்களைப் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் எடுத்துரைக்கப்பட்டு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. நூஹ் நபியின் காலத்தில் வெள்ளப் பெருக்கால் அழிந்தவர்களையும், ஆத் கூட்டத்தினர் புயலினால் அழிந்த தையும், தமூத் கூட்டத்தினர் இடியோசை கேட்டு ஈரல்கள் வெடித்துக் குடல்கள் தெறித்துச் சிதறி அழிந்ததையும், லூத் நபியின் பகைவர் கல்மாரியினால் அழிந்ததையும், ஷுஐப் நபியின் பகைவர் நெருப்பு மாரியால் மடிந்ததையும், மூஸா நபியின் பகைவர்கள் நீலாற்றில் மூழ்கி இறந்ததையும், காரூன் குழுவினரை நிலமே விழுங்கியதையும் திருமறை யானது எடுத்துரைத்து எச்சரிக்கும் பகுதிகள் எவரையும் நடுங்கச் செய்வனவாகும்.
உலகின் எப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கும் தோன்று கின்ற எவ்வகைச் சிக்கலுக்கும் ஓரிரு சொற்களில் வழிகாட்டுகின்ற அற்புதத்தைத் திருமறையில் காணமுடியும். ஒரு போது ஆண், பெண் ஆகிய இரு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மாரிடையே ஆண் குழந்தைக்குரியவன் யாரெனும் ஐயம் எழுந்தபோது, எடையிலே மிகுந்த தாய்ப் பாலுக்குரிய அன்னையே ஆண் குழந்தைக்குரியவள் என்னும் தீர்ப்பினை வழங்குவதற்குக் காரணமாக இருந்தது. ”அர்ரிஜாலு கவ்வாமூன அலந் நிஸா (ஆண்களே பெண்களின் நிர்வாகிகள்) 4:34, என்னும் திருமறைத் தொடராகும்.
குழப்பங்களைத் தெளிவு படுத்துவதற்கும் மயக்க நிலையில் நல்ல தீர்ப்புகள் வழங்குவதற்கும் காரணமாக இருந்த மறைத்தொடர்கள் பலப்பல திருமறையின் ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு சொல்லும் விளைக்கின்ற பயன்களும் அற்புதமாகவே அமைந்துள்ளன. மனிதர்களே உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கிறது. உங்கள் இருதயங்களிலுள்ள நோய்க்கு அது ஒரு சஞ்சீவியாகும். மேலும் (அது) விசுவாசம் கொண்டவர் களுக்கு நேர்வழி காட்டியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது. (10:57) இவ்விறை மொழிக்கேற்ப இதயப் பிணிகளைப் போக்கும் ஆத்மீக மருந்தும் இம்மையையும் மறுமையையும் செம்மையாக்கும். அறவுரைகளும் வான் மறையில் நிறைந்துள்ளன. “லஹா மஆனின்” என்பதாகத் தொடங்கும் கஸீதத்துல் புர்தாவின் கவின்மிகு பாடலைக் காண்போம்.
“கடலின் அலைபோன்றதுவாம் கத்தன் மறை வாக்கருத்தம்
சுடருமுத்தின் மேலதுவாம் சொல்லழகினால் மதிப்பால்”
பரந்து விரிந்து கிடக்கும் ஆழ்கடலின் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வருவதையும் முன்னால் வந்த அலைகளைத் தழுவியே பின்னால் வரும் அலைகள் எழுவதையும் பார்க்கின்றோம். அதுபோன்ற திருமறையின் வசனங்களுக்குத் தொடர்ந்து பல விளக்கங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதையும் அவ்விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஆதரவாக இருப்பதையும் காண்கிறோம். அழகிலும் விலைமதிப்பிலும் திருமறையின் மணியான கருத்துக்கள் முத்துக்களை வென்றுவிடப் பார்க்கின்றோம். “ஸிப்கத்தல்லாஹ்” (இறைவனின் வண்ணத்தை அடைவீர்) 21:38, “வஜிபால அவ்தாத” (மேலும் மலைகள் முளைகள்) 78:7 இவைபோன்று எத்தனையோ சிறுதொடர்களுள் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்கள் ஆய்வாளர்களை வியப்பில் மூழ்கச் செய்கின்றன.
ஆசிரியர் ஒருவர் ஒரு நூலை எழுதி முடித்தபின் அந்நூலினை ஆயும் அறிஞர்கள் அதிலுள்ள பிழைகளையும், முரண்பாடுகளையும் எடுத்துரைப்பதற்குத் தவறுவதில்லை. ஓர் ஆசிரியரின் வாழ்நாளிலேயே அவர் நூலின் கருத்துக்கள் மறுக்கப்படுவதையும் வெறுக்கப்படுவதையும் பார்க்கின்றோம். அவர் மறைவுக்குப் பின் அந்நூல் திருத்தப்படுவதையும் இடைச் செருகல்கள் நுழைக்கப்படுவதையும் காண்கின்றோம். இறைவனால் இறக்கப்பட்ட மறைநூல்கள் கூட மனிதர்களின் கைபட்டுத் தூய்மையிழந்து உருக்குலைந்து விட்டன. ஆனால் இறைவனின் இறுதி மறையாகிய திருக்குர்ஆன் தோன்றி 1450 ஆண்டுகள் சென்ற பின்பும் அதன் ஒரு சொல்லோ, எழுத்தோ, புள்ளியோ, கோடோ மாற்றப்படாமல் காக்கப்பட்டு வருகின்றது. அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே அந்தாகியா என்னும் ஊரிலிருந்து வந்த ஒரு குழுவினர் திருமறை கூறும் வரலாற்றுக் குறிப்பின் காரணமாகத் தங்கள் ஊருக்கு ஏற்படுகின்ற பழியைப் போக்குவதற்காக “அபல்” என்னும் சொல்லை “அதவ்” என்பதாக மாற்றுவதற்கு எவ்வளவோ வேண்டியும் அண்ணலார் அவர்கள் அதற்கிசையவில்லை.
நிச்சயமாக நாமே இந்நினைவூட்டியை இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம்” (15:9) என்பது ஆற்றல் மிக்கோனின் அருள் வாக்கல்லவா? இவ்வசனத்தின் அடிப்படையில் இறைவன் திருமறையைக் காப்பாற்றி வருகின்ற முறைகள் பலவாகும். திருமறை முழுவதையும் மனத்திலே பதித்துள்ள ஹாபிளுகள் இஸ்லாமிய உலகில் என்றும் ஆயிரக்கணக்கிலே இருந்து வருகின்றார்கள். அவனி யிலுள்ள அனைத்து நூல்களும் அழிந்துவிட்ட போதிலும் உயர் மறையை உள்ளத்திற் பதித்துள்ள நானூறு ஹாபிளுகள் ஓரிடத்திலே சேர்ந்துவிட்டால் ஆளுக்கு ஈரெட்டு வசனங்களாகப் பகுத்து ஒரு மணி நேரத்திற் குள்ளாகத் திருமறை முழுவதையும் திருப்பி எழுதிவிட முடியும்.
திருமறையின் ஓர் எழுத்தைக் கூட எவரும் மாற்றிவிடாத நிலையில் அதன் கட்டுக்கோப்பு அமைந்திருப்பது மிகப் பெரும் அற்புதமாக இருந்து வருவதை இன்றைய ஆராய்ச்சி யாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். திருமறைக்கும் திருமறையிலுள்ள ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் சிறப்புத் தொடராகவும் காப்பு மொழியாகவும் அனைத்தும் வல்ல நாயனின் அரசு முத்திரையாகவும் அமைந்துள்ள பஸ்மலா என்னும் ஆணித்திறவுகோல் (Master – key) கொண்டு திருமறைப் பகுதிகளைத் திறந்து பார்ப்பவர்கள் மாமறைக் கருவூலத்தில் மண்டிக்கிடக்கும் மாமணிக் குவியல்களைக் கண்டு பெருவியப்படைவார்கள். “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்” என்னும் அரபித் தொடர் நான்கு சொற்களையும் 19 எழுத்துக்களையும் பெற்றதாக அமைந்துள்ளது. எண்களின் வரிசையில் மிகச்சிறிய எண்ணாகிய ஒன்றும் மிகப்பெரிய எண்ணாகிய ஒன்பதும் இணைவதே பத்தொன்பது. மேலும் அவ்வெண் வேறெந்த எண்ணாலும் வகுத்தற் கியலாத ஒற்றைப் பட்ட எண்ணாகத் தத்துவங்கள் பலவற்றைப் பொதிந்துள்ளது. காலத்தின் அளவுகோலாக அமைந்த ஒரு வாரத்தின் ஏழு நாட்களையும் ஒரு ஆண்டின் பன்னிரு மாதங்களையும் கூட்டினால் பெறுவது பத்தொன்பது. மனிதர்கள் பெற்றுள்ள தத்துவங்கள் 19 என்றும், மனிதன் உறுதிகொள்ள வேண்டிய நம்பிக்கைகள் 19 என்றும், அர்சு, குர்சு, எழுவான், மண், தண்ணீர், காற்று, நெருப்பு, ஜீவாதாரத் தாது இனங்கள், மானிட இதயம், ஈரல், மூளை ஆகிய வற்றிற்குரிய காவலர்களாகிய அமரர்கள் 19 என்றும் அறிஞர்கள் பகர்ந்துள்ளனர். காலத்தை வென்று ஞாலத்தை வாழவைக்கும் சீலத்திருமறையுடன்19 பிணைக்கப்பட்டுள்ளது. பஸ்மலாத் தொடரில் அடங்கியுள்ள இஸ்ம். அல்லாஹ், ரஹ்மான், ரஹீம், - ஆகிய நான்கு தொடர்களும் திருமறைக் குள் பத்தொன்பதன் பெருக்கமாகவே இடம்பெற்றுள்ளன.
இஸ்ம் 19 x 1 = 19 தடவையும், அல்லாஹ் 19 x 142 = 2698 தடவைகளும், ரஹ்மான் 19 x 3 = 57 தடவைகளும், ரஹீம் 19 x 6 = 114 தடவைகளும் திருமறைக்குள் இடம் பெற்றுள்ளன. அரபி நெடுங்கணக்கில் 28 எழுத்துக்கள். 114 சூறாக்கள் ஆகிய வற்றின் கூட்டுத்தொகையாகிய 142 ன் பெருக்கமாகவே அல்லாஹ் 2698 தடவைகள் இடம்பெற்றுள்ளதும் ரஹ்மான் என்பதன் இரட்டிப்பாக ரஹீம் அமைந்திருப்பதும் குறிப்பிடத் தகுந்ததாகும்.
பாருலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றான விந்தைக்குரிய அரபி மொழி எழுத்துக்களின் ஒலி, வரி வடிவங்கள், தத்துவங்கள் பலவற்றைத் தாங்கியுள்ளன. நேர் கோடு ஒன்றை அகரமாகத் தலைப்பிலே நிறுத்திப் பின்னர் அதனையே படுத்தும் வளைத்தும் நெளித்தும் புள்ளிகள் இல்லாமலும் அமைந்துள்ள எழுத்துக்களின் வரிவடிவம் ஒரு வகைச் சுருக்கெழுத்தாகவே விளங்குகின்றது. அவ்வெழுத்துக் களுக்கு அமைக்கப்பட்டுள்ள “அப்ஜதீ” என்னும் எண் கணிதமும் ஒருபெரும் அற்புதமாகும். எழுத்துக்களைச் சூரிய எழுத்துக்கள், சந்திர எழுத்துக்கள், இருள் எழுத்துக்கள், ஒளி எழுத்துக்கள் என்பதாக வகைப்படுத்துவதும் உண்டு. “ஸப் அன் மினல் மதானி” எனப்படும் திருப்பித் திருப்பி ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்ட பாத்திஹா சூறாவில் இருள் எழுத்துக்கள் இடம் பெறாமலிருப்பதை எடுத்துக்காட்டுவதும் உண்டு. 28 அரபி எழுத்துக்களின் நேர்பாதியாகிய 14 எழுத்துக்கள் “ஹுருப்ஃபுல் முகத்த ஆத்” (சங்கேத எழுத்துக்கள்) என்பதாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை பதினான்கினையும் எழுத்துக்களின் சுரங்கமென்றும் பேச்சு மொழியின் தொடக்கமென்றும் ஹலரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அல்லாமா சுயூத்தி அவர்கள் இத்கானில் எடுத்துரைத்துள்ளார்கள். அலீஃப், லாம், மீம், யா, ஸீன் இச்சங்கத்தே எழுத்துக்கள் பதினான்கும் பதினான்கு வகையான இணைப்புகளைப் பெற்று திருமறை யின் 29 சூறாக்களின் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்துவரும் அத்தியாயத்திற்குள் இருக்கும் எழுத்துக்கள் வெளியேறி விடாமலும், வெளியிலிருந்து பிற நுழைந்து விடாமலும் அவை திறம்படக் காவல் புரிகின்றன.
குர்ஆன் என்னும் சொல்லின் முதலெழுத்து காஃப், ஈற்றெழுத்து நூன், சூறா 68-நூன் என்னும் எழுத்துடன் தொடங்குகிறது. அந்த அத்தியாயத்திலுள்ள நூன்களின் எண்ணிக்கை 133, அதாவது 19 x 7=133 சூறா 50-காஃப் என்னும் எழுத்துடன் தொடங்குகிறது. அந்த அத்தியாயத்திலுள்ள காஃப் களின் எண்ணிக்கை 57. அதாவது 19 x 3= 57 ஹா மீம் ஐன் ஸீன் காஃப் எனத் தொடங்கும் 42-வது சூறாவில் 57 காஃப்கள் உள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட இரு சூறாவில் 57காஃப்கள் உள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட இரு சூறாக்களிலுமுள்ள 114 காஃப்களும் குர்ஆனிலுள்ள சூறாக்களைக் குறிக்கும் இஷாராவாக உள்ளன. சங்கேத எழுத்துக்களுடன் தொடங்கும் எல்லா சூறாக்களிலும் தலைப்பிலுள்ள சங்கேத எழுத்துக்கள் பத்தொன்பதன் பெருக்கமாகவே அந்த சூறாக்களின் உள்ளே இடம் பெறுகின்றன. இத்தகைய அற்புதமான கட்டுக்கோப்பு டன் எழுத்துக்கள் அமைக்கப்பட்டிருப்பதால் திருமறைக்குள் ஓர் எழுத்தைப் புகுத்தினாலும், அகற்றினாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இவை மட்டுமின்றித் திருமறை யினுள் பல சொற்களும் அவற்றின் எதிர்ச்சொற்களும் ஒரே அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக, இம்மை யைக் குறிக்கும் துன்யா-115 தடவைகள்; மறுமையைக் குறிக்கும் ஆகிரத்-115 தடவைகள்; வாழ்க்கையைக் குறிக்கும் ஹயாத்-145; இறப்பைக் குறிக்கும் மெளத்து-145; நன்மையைக் குறிக்கும் ஸாலிஹாத்-167; தீமையைக் குறிக்கும் ஸையிஆத் -167; கடுமையைக் குறிக்கும் ஷித்தத்-102; பொறுமையைக் குறிக்கும் ஸப்ரு-102; துன்பத்தைக் குறிக்கும் முஸீபத்து-75; நன்றியைக் குறிக்கும் ஷுக்ரு-75.
எதிர்ச்சொற்களின் எண்ணிக்கையில் சமநிலை இருப்பது போன்றே தொடர்புடைய பல சொற்களிலும் ஒரு சமநிலை யைக் காண்கிறோம். நபாத் (முளை) ஷஜர் (மரம்) இரண்டும் 26 தடவைகள்; ரஹ்மத் (கருணை) ஹுதா (நேர்வழி) இரண்டும் 79 தடவைகள் பிர்ரு (நற்செயல்), தவாப் (நன்மை) இரண்டும் 20 தடவைகள்.
இவை போன்று நூற்றுக்கணக்கான சொற்களில் சமநிலை யைக் காண்கின்றோம். மேலும் ஓர் ஆண்டில் அமைந்துள்ள 12 மாதங்களும் இஷாராவாக ஷஹ்ர் (மாதம்) என்னும் சொல் 12 தடவைகளும் ஓர் ஆண்டிலுள்ள 365 நாட்களுக்கு இஷாராவாக யவ்ம (நாள்) என்னும் சொல் 365 தடவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்பின்னணியில் கவிதையுலகில் முன்னணியில் நிற்கும் புனித இலக்கியமாகிய கஸீதத்துல் புர்தாவில் ”ஃபலாது அத்து” எனத் தொடங்கும் பாவடிகளைப் பாடுகின்றபோது மெய் சிலிர்த்து விடுகின்றது.
“கத்தன்மறை அற்புதங்கள் கணிப்புக்கள வுக்கடங்கா;
நித்தமதை ஓதிவரும் நேயர் அடையார் அலுப்பே”
சாதாரண ஆசிரியர் ஒருவரின் நூலை இரண்டாவது முறை யாகப் படிக்கும்போது சலிப்படைகின்ற நாம் திருமறையின் ஒரு சூறாவை – பாத்திஹா சூறாவை –ஓராயிரம் தடவைகள் ஓதினாலும் உள்ளம் சலிப்படையாமலிருப்பதன் இரகசியம் இறைமறையின் அற்புதமேயாகும். இவ்வற்புதத்திற்கு இணை யான தொன்றை எங்கும் எவரும் எப்போதும் காணமுடியுமா தென்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வல் ஹம்துலில்லாஹ்!



( அல் குர்ஆன் ஓர் அற்புதம் எனும் நூலிலிருந்து ……….. )

பதிப்பாசிரியர் :

பேராசிரியர் மு. கலீல் அகமது எம்.ஏ
தமிழ்த்துறை
புதுக்கல்லூரி
சென்னை 600 014

வெளியீடு :
நன்னெறிப் பதிப்பகம்
17-18 B, பாறையடித் தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்

No comments: