Thanks to: http://adiraixpress.blogspot.com
முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்!
என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.
என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் 'ட்ராலி'யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.
இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக அயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!
அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில், எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:
நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?
இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!
என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.
நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.
"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!
அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!
'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.
தகவல்: அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com
Thanks to: http://adiraixpress.blogspot.com
No comments:
Post a Comment