நேரத்திட்டமிடல்: வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!
fasteddie.wordpress.com
வேகமான இன்றைய உலகில், நாமும் வேகமாவும், விவேகமாவும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதலினால், நம்மில் பலர் இன்று வாழ்வியல் முறைகளில் பலவகையான மாற்றங்களை அவ்வப்போது செய்துகொண்டு, வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.
வாழ்வியல் முறை மாற்றங்களில் மிக முக்கியமானதும், எளிதில் கைவரப்பெறாததுமாய் ஒன்று இருக்குமென்றால், அது நேரத்திட்டமிடலே என்பது நம்மில் பலர் அறிந்திருக்கும் ஒன்று. நேரத்திட்டமிடல் குறித்த புரிதல்களையும், சில/பல நுணுக்கங்களையும் புத்தகங்கள், துறை வல்லுனர்கள், நண்பர்கள் மூலமாக எனப் பலவாறாக சேகரித்து வைத்திருப்போர் பட்டியலில் நம்மில் பலர் கண்டிப்பாக இருப்போம்!
நேரத்திட்டமிடல் குறித்த திட்டங்கள், ஆயத்தங்கள், முயற்ச்சிகள் என எல்லாம் இருந்தும் சில/பல சமயங்களில் அதில் வெற்றியடைவது என்பது நம்மில் பலருக்கு “கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் கதையாய் போய்விடுகிறது!”. இதற்க்கு காரணம், நேரத்தை நாம் எப்படி அணுகுகிறோம் அல்லது நேரத்துடன் நம்மை நாம் எப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்!
நேரத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதென்பது கிட்டத்தட்ட முதலீடு செய்வதைப்போல. அதாவது, நேரத்துடனான நம் உறவு/தொடர்பு ஒரு கொடுக்கல்-வாங்கல் போலத்தானாம்?! தொடக்கத்தில் நாம் முதலீடு செய்யும் ஒரு குறிப்பிட்ட கால அளவானது இறுதியாக நமக்கு நல்ல லாபத்தைக் தரும் என்கிறார்கள் உளவியலாளர்கள்!
என்னங்க ஒன்னும் புரியலீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. அதுக்காக அப்படியே விட்றவா முடியும். வாங்க நேரத்திட்டமிடலா நாமளா அப்படீன்னு ஒரு கை பார்த்துடுவோம்……
நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!
நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்க்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking): சமீபகாலங்கள்ல, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!
முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities): ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!
உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise): உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!
‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness): நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!
காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early): ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும்முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது!
உடற்பயிற்ச்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!
போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest): ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!
எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations): உங்கள் அறையக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!
மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times): ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!
தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்துவிடுங்கள் (Unplug): அசினும், நயன்தாராவும் அடுத்த எந்த படத்துல நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கலைன்னா, ஒன்னும் குடி முழுகிப்பொயிடாது. அதனால, இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுச்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்ச்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking): ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.
நாம் எப்போதும் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்தக் கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே…..!!
Thanks:padmahari
No comments:
Post a Comment