Monday, November 1, 2010

இரத்த தானம் செய்வோம்! (நூ. அப்துல் ஹாதி பாகவி)

இரத்த தானம் செய்வோம்! (நூ. அப்துல் ஹாதி பாகவி)


http://mudukulathur.com/?p=3121


”மூன்றில் (நோய்க்கான) நிவாரணம் உண்டு. 1) தேன் அருந்துவது 2) இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது 3) தீயால் சூடிட்டுக்கொள்வது. (எனினும்) தீயால் சூடிட்டுக்கொள்ள வேண்டாம் என என் சமுதாயத்துக்கு நான் தடைவிதிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)

புகாரியின் மற்றோர் அறிவிப்பில், தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது என்று வந்துள்ளது. நபிகளார் காலத்தில், உடலிலிருந்து அதிகபட்ச இரத்தத்தை அதற்குரிய கருவியால் உறிஞ்சி வெளியேற்றிவிடுவது வழக்கம். அதற்காகவே தனிப்பட்ட முறையில் சிலர் இருந்துவந்தனர். அவ்வாறு இரத்தத்தை வெளியேற்றுவதில் நிவாரணமும் உடலுக்கு ஆரோக்கியமும் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.




ஆகவே, நம் உடலிலுள்ள உதிரத்தைக் குறிப்பிட்ட சில மாதங்களுக்குப்பின் வெளியேற்றி இரத்ததானம் செய்வதால் நம் உடலுக்கு முற்றிலும் ஆரோக்கியமே என்பதை மேற்கண்ட நபிமொழி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் நபிகளார் காலத்தில், உறிஞ்சி வெளியேற்றப்பட்ட உதிரத்தை மண்ணில் புதைத்து விடுவார்கள். ஆனால், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள இன்றைய காலத்தில், அந்த உதிரம் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது. உதிரத்தை உறிஞ்சி வெளியேற்றுவதில் உடலுக்கு ஆரோக்கியம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள அதே கருத்தை இன்றைய மருத்துவர்களும் கூறுகின்றனர்.

இரத்ததானம் (குறுதிக்கொடை) என்பது ஒருவர் தம் இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படும் வகையில் தயாள குணத்துடன் தானமாக வழங்கப்படுவதாகும். பொதுவாக, ஆரோக்கியமான ஒரு மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானம் செய்வோரிடமிருந்து ஒரு நேரத்தில் 300 முதல் 350 மி.லி இரத்தமே எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட இரத்தம் இரண்டு வாரங்களுக்குள் நாம் உண்ணும் சாதாரண உணவின் மூலமே மீண்டும் உற்பத்தியாகிவிடும். ஆக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நாம் இரத்ததானம் செய்யலாம். இதனால் நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமல்ல, நம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாகி, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறையில் மனிதனுக்கு எவ்வாறெல்லாம் நன்மை உள்ளது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.



நன்றி :


இனிய திசைகள் – சமுதாய மேம்பாட்டு மாத இதழ்
அக்டோபர் 2010--

No comments: