இவர்தாம் முஹம்மது நபிநாதர்!
************************************************************
இவர்தாம் முஹம்மது நபிநாதர்!-அல்லாஹ்
இறுதியில் அனுப்பிய திருத்தூதர்!!
அன்பே இவர்களின் அடிப்படையாம்-தூய
அறிவே இவர்களின் ஆயுதமாம்!
பண்புகள் இவர்களின் படைவரிசை-இந்தப்
பாருலகே இவர்கள் சீர்வரிசை! (இவர்தாம்...)1.
ஆர்வம் இவர்களின் வாகனமாம்-வந்(து)
அடைந்திடும் துக்கமும் துணைவனென்பார்!
சீர்இறை வணக்கமே பேரின்பம்-இவர்கள்
செயலுக்கு ஞானமே மூலதனம்! (இவர்தாம்...)2.
பொறுமை இவர்களின் போர்வையாம்-பெரும்
போராட் டம்தான் பிறவிக்குணம்!
உறுதி இவர்களின் நல்லுடைமை -என்றும்
உண்மையே இவர்களின் வழிகாட்டி! (இவர்தாம்...)3
ஏழ்மை இவர்களின் தனிப்பெருமை-வியக்கும்
எளிமை இவர்களின் வாழ்வருமை!
தாழ்மை இவர்களின் செல்வகுணம்-இதனைத்
தாரணி புகழ்ந்திடும் தினம்தினம்! (இவர்தாம்...)4
பணிசெய் தல்இவர் களின்நிறைவு-ஒளிரும்
பகுத்தறி(வு) இவர்களின் பக்தியின்வேர்!
அணியாய் அமைந்தநன் நம்பிக்கை-அது
அன்றோ இவர்களின் வல்லமை! (இவர்தாம்...)5
தியானம் இவர்களின் உயிர்த்தோழன் -உள்ள
திருப்தி இவர்களின் வெற்றிப்பொருள்!
தியாகம் இவர்களுக் குரியகலை -இவர்கள்
தியாகத்திற் கீடு இணையில்லை! (இவர்தாம்...)6
சொல்லும் செயலும் ஒன்றாக - நாம்
சொர்க்கத்து வாழ்வினைப் பெற்றிடவே
அல்லும் பகலும் உழைத்தவர்கள் -அந்த
அல்லாஹ் வேதத்தை உரைத்தவர்கள்! (இவர்தாம்...)7
இறைசொல் ஏற்றம் பெற்றிடவே- எங்கும்
இஸ்லாம் பூரணம் உற்றிடவே
நிறைமொழி கூறிய நீதரிவர்-மக்கள்
நேர்நிறை ஒன்றெனும் போதரிவர்! (இவர்தாம்...)8
அகிலங் களுக்கோர் அருட்கொடை-யாக
அமைந்தார் நடையே நன்னடை!
முகம்மது நபியினும் மேலவர்-என
மொழிந்திட எங்கே யாருளர்? (இவர்தாம்...)9
பற்றுகொள் வார்கள் எவரிடமும் -மீளப்
பரிந்துரைப் பார்கள் இறையிடமும்!
ஒற்றுமை இவர்கள் உவந்தநிலை-இரண்டு
உலகிலும் இவர்களுக் குயர்ந்தநிலை!! (இவர்தாம்...)10.
----ஏம்பல் தஜம்முல் முகம்மது
No comments:
Post a Comment