Sunday, September 16, 2012

தினமணி - ஆஸ்திரேலியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழி!


தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழி என்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்கிறோம். ஆனால், தமிழ் எப்போது ஒரு மொழியாக உருவாகியிருக்கும் என்பதற்கு போதிய சான்றுகள் நம்மிடம் இல்லை. ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வக்குடிகளின் மொழிகளை ஆய்வு செய்வதன் மூலம் இதற்கு விடை காண இயலும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் 200 மொழிகளுக்கு மேல் பேசி வந்திருக்கின்றனர். இவற்றுள் தற்போது இருபதிற்கும் குறைவான வட்டார மொழிகள்தான் பயன்பாட்டில் உள்ளன. இவற்றிற்குத் தனி வரிவடிவம் கிடையாது. ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 50,000. இவர்களில் 30,000 பேர் மட்டுமே தங்கள் தாய்மொழியை ஓரளவு பேசுகின்றனர். இவர்கள் பேசும் மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150. இம்மொழிகளில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. வெவ்வேறு 15 குடும்பங்களின் வழித் தோன்றல்கள் இம்மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு மொழியையும் 5000 பேருக்கு மேல் பயன்படுத்துவோர் இல்லை. பத்து மொழிகளைப் பேசுவோர் மொத்த எண்ணிக்கை 1,000. "ஆராண்டா" என்னும் மொழியை ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) என்னும் மத்திய ஆஸ்திரேலியப் பகுதியில் இருக்கும் நகரைச் சுற்றியுள்ளவர்கள் பேசுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முக்கியமான மொழி "பிதாஞ்ச ஜாத்தா" இன்னொரு மொழி "வால் ம ஜாரி". முன்பு ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா, நியூகினி, இந்தோனேசியா ஆகியவற்றின் நிலப்பகுதி இந்தியாவோடு நெருங்கி இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஆப்பிரிக்கர்கள் இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவை அடைந்திருக்கின்றனர். இடையிடையே நீர்ப்பகுதிகள் இருந்தாலும் அவற்றின் தூரம் குறுகிய அளவிலேயே இருந்தது என்று நிலநூல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றவர்கள் மீனவர்களாகவும் கடற்கரைப் பகுதிகளில் உணவைத் தேடிச் சென்றவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு மிக விரைவாகச் சென்றிருக்க முடியாது என்கிறார் மரபணு விஞ்ஞானி ஸ்பன்சர் வெல்ஸ். கிரஹம் வால்ஷ் என்பவர் வட ஆஸ்திரேலியாவிலுள்ள கிம்பர்லி என்னும் இடத்தில், பாறையில் தீட்டப்பட்ட பழைய சித்திரம் ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார். 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் அதில் 29 பேர் படகு ஒன்றில் இருப்பதாக வரையப்பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ்:- தென் இந்தியாவில் வசிக்கும் பிறமலைக் கள்ளர் என்னும் பூர்வக்குடிகளின் இரத்தத்தில் உள்ள மரபணுவும், ஆஸ்திரேலியக் குடிகளின் மரபணுவும் (M130) ஒன்றுபோல் இருக்கின்றன என்று கூறினார். ஸ்பென்சர் கூற்றுப்படி ஆப்பிரிக்காவிலிருந்து 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென் இந்தியா வழியாக ஒரு பகுதி மக்கள் தென் கிழக்கு ஆசியா, நியூகினி ஆகியவற்றின் வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந்தனர் என்று தெரிகிறது. கடைசி உறைபனி (Last Ice Age) காலத்தில் இந்தக் குடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கடல் நீர்மட்டம் உயர்ந்தபோது இந்தியத் துணைக்கண்டம் தென் கிழக்காசியாவில் இருந்து துண்டித்துப் போகும் நிலை ஏற்பட்டது. குமரிக் கண்டம்: தமிழகத்தின் தென் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது என்றும், அது கடலில் மூழ்கிப்போனது என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி''. என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ளார். "பஃறுளியாறு" - கங்கை போன்று பெரிய ஆறு என்றும், குமரி மலை இமயமலைக்கடுத்த பெரு மலை என்றும் ஊகிக்கலாம். இடைச்சங்க காலத்தில், பாண்டிய நாட்டுப் பகுதி மூழ்கியதன்றி, வேறு ஒரு மாறுதலும் நேர்ந்ததில்லை. பஃறுளி மூழ்கிய பின் தமிழகத்தில் பெரிய ஆறாக இருந்தது குமரியாறே. "தெனா அதுருகெழு குமரி'' (புறம் - 67) கடைச்சங்க காலத்திற்குப் பின் குமரியாறும் மூழ்கிற்று. பஃறுளியும் குமரியும் மூழ்கிய பின்னரே, "தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே''. என்று கம்பர் பாடுமாறு காவிரி தமிழகத்தில் சிறந்த, சோழ நாடு, புனல் நாடு எனப்பட்டது. (பழந்தமிழராட்சி ஞா.தேவநேயப் பாவாணர்). தமிழ் இலக்கியக் குறிப்புக்களைக் கொண்டு பார்க்கும்போது குமரிக் கண்டம் நீரில் மூழ்கிப் போவதற்கு முன்பு, ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் இக்கண்டம் வழியாகச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஸ்பென்சர் வெல்ஸின் மரபணு ஆய்வு மெய்ப்பிக்கிறது. பேசியது என்ன மொழி? தமிழகம் வழியாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் சென்றனர் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் என்ன மாதிரியான மொழி பேசியிருக்கக் கூடும் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. தமிழகம் மூலமாகச் சென்றதால் அவர்கள் பேசும் மொழிகளில் ஏதேனும் தமிழ்ச் சார்ந்த சொற்கள் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூறியது. அண்மையில் நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டவுன்ஸ்வில் நகரில் இருக்கும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளைப் பற்றிய சிறிய ஆய்வினை மேற்கொண்டேன். என்னுடைய யூகம் சரியாக இருந்தது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பேச்சு வழக்கில் இருக்கும் அவர்களின் மொழிகளில் சில சொற்கள், இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் மொழிச் சொற்களாகவே இருக்கின்றன. * முட்டி - muti : கை, கால் முட்டிகளை முட்டி என்றே ஆஸ்திரேலியப் பூர்வக் குடிகள் கூறுகின்றனர். * பிறை - pira : இளம் திங்களைப் பிறை என்கிறோம். அவர்கள் சந்திரனை இப்படிக் கூறுகின்றனர். * வல்லூறு - waluwuru: கழுகுக்கு வல்லூறு என்றும் பெயர் உண்டு. ஒருவகைக் கழுகை அவர்கள் இப்படி அழைக்கின்றனர். * காகம் - kaanka: காகத்தை "கான்கா" என்கின்றனர். * புற்று - putu: புற்று என்பதை நாம் புத்து என்று பேச்சு தமிழில் வழங்குகின்றோம். அவர்களும் (எறும்பு) புற்றை = புத்து என்றே கூறுகின்றனர். * கிளி - killy : கிளியை அவர்கள் "கீளீ" என்கின்றனர். * குட்டன் - kuta: தமிழில் குட்டம் என்றால் மகள். அவர்கள் அண்ணனை குட்டா என்றழைக்கின்றனர். * வால் - walu, waly: வால்,வாலிது ஆகிய சொற்களுக்குத் தமிழில் வெண்மை, தூய்மை ஆகிய பொருள்கள் உண்டு. கடவுளை "வாலறிவன்" (வால் அறிவன்) என்கிறார் வள்ளுவர். வாலறிவன் என்றால் "தூய அறிவுடையவன்" என்று பொருள். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் வெள்ளை நிறத்தை wala, waly என்றழைக்கின்றனர். அவர்கள் வெள்ளைக்காரரை walypara என்றும் வெள்ளைக்காரியை walypala என்றும் அழைக்கின்றனர். * இலகரி - Ilakari: நீண்ட அகன்ற பொந்திரைக்குத் தமிழில் இலகரி என்று பெயர். அவர்கள் நீண்ட வான்வெளியை இவ்வாறு அழைக்கின்றனர். * மங்குல் - munga: பகல் பொழுது சிறிது சிறிதாக மங்கிக்கொண்டு வந்து, இறுதியில் இருட்டாகிறது. இத்தகைய இருட்டுதான் இரவு. ஆஸ்திரேலியப் பழங்குடியினர் இரவுப் பொழுதை இவ்வாறு கூறுகின்றனர். "மங்குல்" என்னும் சொல்லுக்குத் தமிழில் இருள் என்னும் பொருள் உண்டு. இன்னும் சில சொற்கள் சிதைந்த நிலையில் வழங்கிவருகின்றன. எ.கா:- இல்லம் - yiwalu; பறத்தல் - parkani மேற்குறிப்பிடும் சொற்கள் pitgantjatjara என்னும் வட்டார மொழியில் காணப்படுகின்றன. இந்த மொழி வட ஆஸ்திரேலியாவிலும் தென் ஆஸ்திரேலியாவிலும் பேசப்படுகிறது. 50,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை இன்னும் பயன்படுத்துகின்றனர் என்பதை அறியும்போது வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இவர்கள் அக்காலத்தில் வழக்கில் இருந்த தமிழ் மொழியைத் தங்களோடு கொண்டு சென்றுள்ளனர். பயன்படுத்தியவை தனித்தமிழ்ச் சொற்கள். வடமொழிக் கலப்பு இல்லாதவை. இறுதியாக:- ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் பேசும் மொழியில் பயன்பாடு காணும் தமிழ்ச் சொற்கள் மூலம், தமிழ்மொழி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மொழி என்பது உறுதியாகத் தெரிகிறது. க.கந்தசாமி "மலேசிய அறிமுக மலர்" மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம். நன்றி:- தினமணி

No comments: