அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த உலகத்தில் கல்விதான் மக்களின் நலத்தையும் வளத்தையும் தீர்மானிக்கிறது. பன்மொழிச் சூழல் நிறைந்த இந்தியாவில் தாய்மொழிக் கல்வி என்பது பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக, மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கின்ற மக்களிடம் தாய்மொழிக் கல்வி இன்னும் முழுமையாகச் சென்று சேராத நிலையே தொடர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழி கல்விமொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இருந்து வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களிலும் மாநில மொழிகளின் செல்வாக்குக் காணப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலமும், அம்மாநில உள்ளாட்சி அமைப்பும் தாய்மொழி வழிக் கல்வியைப் பயிற்றுமொழியாக்க தொடக்கக் கல்வியில் தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தல் வேண்டும் என்றும், மொழிரீதியான சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் இவ்வசதிகளைச் செய்து தரவேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் அறிவுறுத்தியிருந்தாலும், இன்னும் இந்த இலக்கை எட்டமுடியாதவர்களாகவே நாம் இருந்து வருகிறோம்.
அயல் மாநிலங்களில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியைத் தக்கவைத்துக்கொள்ளவும், தங்களுக்கான தாய்மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளவும் ஏராளமான நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு குழந்தை தானாகவே உள்ளூர் மொழியை தனது முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இயல்பாகக் கற்றுக்கொள்கிறது.
பேச்சு வழக்கின் தரத்தை அக்குழந்தை கற்றிட மேலும் அதிக வலுவுள்ள கற்கும் சூழலை, அனுபவத்தைப் பெறுதல், உருவாக்கித் தருதல், பேசவும் கவனிக்கவும் ஒரே மொழியாக இருக்கும் சூழலில் கணிசமான குறிப்பிடத்தக்க அளவிற்கு அக்குழந்தை கற்றுவிடும்.
ஆனால், அயல் மாநிலங்களில் புறச்சூழலில் தாய்மொழி இல்லாத நிலையில் வாழும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே கிடைக்கக்கூடிய தாய்மொழி அறிவு கிடைப்பதில்லை. இடம்பெயர்ந்த தமிழர்கள் வேலைவாய்ப்புக்காகவும், கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் அந்தந்த மாநில மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநிலமொழியின் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க தமிழின் பயன்பாடு குறையத் தொடங்கும். இது இறுதியில் மொழி இழப்புக்கு வழிவகுத்துவிடும்.
எனவே, அயல்மாநிலத் தமிழர்கள் மொழித்தக்கவைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழலில் எக்காரணத்தைக் கொண்டும் பிற மொழிப் பயன்பாடு இருத்தல் கூடாது. வீட்டுமொழியாக முழுமையாகத் தமிழைப் பயன்படுத்தும் பயிற்சியைப் பெற்றோர் பெறவேண்டும்.
அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்ல மறக்கக்கூடாது. பள்ளிகளில் தமிழைப் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், பெற்றோர்களே ஆசிரியர்களாக மாறி, தமிழைச் சொல்லித்தர முன்வர வேண்டும். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டும். தாய்மொழியின் தேவையைக் குழந்தைகளின் மனங்கொள்ளுமாறு பதிவுசெய்ய வேண்டும். இளைய தலைமுறையினரிடம் மொழிப்பற்று குறைந்து வரும் நிலை காணப்படுகிறது.
எனவே, பெற்றோர்கள் விழிப்புடனிருந்து அடிப்படைத் தமிழை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். பிற மாநிலங்களில் வசித்துக்கொண்டு தமிழ்ச்சூழலை நுகர தமிழ் இதழ்கள், தமிழ்த் தொலைக்காட்சிகள், தமிழ் இணையதளங்கள் போன்றவை துணைபுரியும். இவற்றில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளச்செய்தல் பெற்றோர்களின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து விலகிச்சென்று வெகுதூரத்தில் பிற மாநிலங்களில் வாழ்ந்தாலும் தமிழ் மண்ணோடு தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினரிடம் தொடர்பு நீடிக்கும்போது இயல்பாகத் தமிழ் மொழியின் மீதும் தொடர்பு அதிகரிக்கும். திருவிழாக் காலங்களில் குழந்தைகளோடு சொந்த ஊருக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்து போகும் பழக்கத்தைப் பிற மாநிலத் தமிழர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழரின் மரபார்ந்த பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ள முடியும்.
தமிழர் திருநாளாகத் திகழ்கின்ற பொங்கல் விழா நாள்களில் இத்தகைய பிறந்த ஊர் நோக்கிய பயணத்தை அமைத்துக் கொண்டால் மிகுந்த பயன் கிடைக்கும். பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அங்கு ஒன்றுகூடி தமிழ்நாட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழவேண்டும். தாங்கள் வாழும் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும்.
குழந்தைகளின் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவற்றோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் நடத்தும் தொலைநிலைக் கல்வியில் தமிழில் கூடுதல் பட்டம் பெற பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் தமிழர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களுக்குக் கேரள மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிலையம் தமிழ்ப் பாடங்களைத் தயாரித்து அளித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் பகுதிகளிலும் தமிழ்க் கல்விக்கான வசதிகள் கிடைக்கின்றன.
பெங்களூரில் கல்லூரி அளவிலும் தமிழ்மொழி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தையொட்டிய மாநிலங்களில் தமிழ்மொழிக் கல்விக்கான வாய்ப்பு ஓரளவு இருந்து வருகிறது. அந்தமானில் வாழும் தமிழர்களுக்காக தீவு மலர் எனப் பாட நூல்களைத் தயாரித்து அளித்து வரும் பணியை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் செய்து வருகிறது.
ஆனால், பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மொழிக் கல்விக்கான வாய்ப்பின்றி இருந்து வரும் சூழலை மாற்ற வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் கால் நூற்றாண்டுக்கு முன்பே இதில் ஆர்வம் கொண்டு பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தொடர்பாக சோமலெ மூலம் கள ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று அதை நூலாகவும் வெளிட்டது. இன்றையச் சூழலில் மீண்டும் கள ஆய்வு மூலம் புதிய தரவுகளைத் திரட்டி அயல் மாநிலத் தமிழர்களின் தாய்மொழிக் கல்வியின் தாகம் தணிக்கத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறது.
முனைவர் திருமலை
துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம்
நன்றி:- தினமணி
No comments:
Post a Comment