அமெரிக்க படிப்பு வேண்டும், வாட்ச் வேண்டும், டீல் வேண்டாமா - லாலு நக்கல்
செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2008
டெல்லி: அமெரிக்க வேலை வேண்டும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச் வேண்டும். ஆனால் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் வேண்டாம் என்று நாடகமாடுவதா என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆவேசமாக கேட்டார்.
லோக்சபாவில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு லாலு பேசுகையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமரே தானாக முன்வந்து கொண்டு வந்துள்ளார். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது மன்மோகன் சிங்கிற்கு உள்ளது.
பாஜக அணு சக்தி ஒப்பந்தத்தை ஒருபோதும் எதிர்த்ததில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அத்வானி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அமெரிக்காவை அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை.
அணு ஒப்பந்தத்துக்கு அத்வானி எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இப்போது எதிர்க்கிறார்களாம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணு ஆயுத சோதனை தடை சட்டத்தில் கையெழுத்திட இருந்தார். கடைசி நேரத்தில் அதை கைவிட்டார்.
அணு ஒப்பந்தத்தை எதிர்க்கும் விஷயத்தில் பாஜகவிடம் உண்மையான பதில் இல்லை. அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனையை வைத்து நாட்டை பிளக்க முயல்வதே வேலை.
இந்தியா முன்னேற, தொழிற்சாலைகள் நடக்க அணு ஒப்பந்தம் மிக அவசியம். அடிப்படைக் கட்டமைப்பும் மின்சாரமும் தான் ஏழைகளுக்கு ரொட்டி தரும். வானிலிருந்து ரொட்டி மழை பெய்யுமா?.
இடதுசாரிகளே எங்களுடன் இருங்கள்.. என இப்போதும் கேட்கிறோம்.
இங்கு இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் பலரின் பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். அங்கே போய் படிக்கிறார்கள். அதை பெருமையாகவும் சொல்லிக் கொள்கின்றனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச்சை பெருமையாக கட்டிக் கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவை பார்த்து பயப்படுகின்றனர். அணு சக்தி ஒப்பந்தத்ைத எதிர்க்கிறார்கள்.
எல்லோருக்கும்தான் பிரதமராக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. முலாயம் சிங் ஆசைப்படுகிறார், மாயாவதிக்கும் ஆசை வந்து விட்டது. எனக்கும்தான் ஆசை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் முடிகிற காரியமா. அவசரப்படக் கூடாது.
இடதுசாரிகள் குழப்பும் வேலையை மிக சரியாக செய்கிறார்கள். அதில் அவர்களை குறை கூறவே முடியாது.
தீவிரவாதம் குறித்து, அப்சல் குரு பற்றி பேசுகிறது பாஜக. உலகின் மிகப் பெரிய தீவிரவாதியான அஸார் மசூதை ஆப்கானி்ஸ்தானில் போய் விட்டுவிட்டு வந்தது யார்?. பாஜக தானே... இவ்வாறு லாலு பேசியபோது பாஜகவினர் எழுந்து கடும் கூச்சல் போட்டனர்.
அப்போது குரலை மேலும் உயர்த்தி தொடர்ந்து பேசிய லாலு, இந்தக் கூச்சலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இப்போது குஜராத்தில் மதக் கலவரம் நடத்தியவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்களுடன் இடதுசாரிகள் கைகோர்க்கிறார்கள்.
நான் சாதாரண ஆள் இல்லை. மொரார்ஜி தேசாய் அரசையே கவிழ்த்தவன். அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியவன். கைதும் செய்தவன். என்னை உங்களது மிரட்டல் ஒன்றும் செய்யாது.
நம்மிடம் நிலக்கரி ரிசர்வும் குறைந்து வருகிறது. மின் நிலையங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் இந்த அணு ஒப்பந்தம் மிக அவசியம்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மட்டுமல்ல, மின்சாரமும் வேண்டும். அதை எங்கிருந்து தருவது?. மின்சார உற்பத்தியை அதிகரித்தாக வேண்டாமா? என்றார் லாலு.
மற்ற உறுப்பினர்கள் பேசும்போதெல்லாம் அவை முழுவதும் எதிர்ப்பலைகள் பரவி அவையே அமளியில் மூழ்கியிருந்தது. ஆனால் லாலுவின் பேச்சுக்கு அவை முழுக்க ஒரே சிரிப்பலையாக இருந்தது. பாஜக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் கூட லாலுவின் ரகளையான பேச்சைக் கேட்டு சிரித்தபடி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தனது பேச்சின்போது, எனக்கு ஆங்கிலத்திலும் பேசத் தெரியும். ஆனால் அவையின் நேரம் வீணாகி விடக்கூடாது என்று பார்க்கிறேன் என்று லாலு கூற அவை சிரிப்பலையில் மூழ்கி தத்தளித்தது.
No comments:
Post a Comment