Tuesday, July 22, 2008

ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் ! - தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

முன்னோக்கும் என் நோக்கு :

ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் !

- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்


வீடும் வாசலும் நம்மிரு விழ்கள்தாம். அந்த விழிகள், வெறுமையை - பசுமையற்ற வாழ்க்கைப் பாதையை - எவ்வளவு நாள்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும் ?

பொருளீட்டல் பூக்கள், எத்தனை தூரத்தில் இருந்தால் என்ன ? அவற்றை அடைந்தால்தானே வாழ்க்கையே அழகாகும் ?

இந்த யதார்த்த உண்மை, தகைசால் ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களின் கேள்வியில் கிளைத்திருந்தது.

நான் எழுதியுள்ள இளைஞனே புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் நான் இவ்வாறு கேட்டிருந்தேன்.

வீட்டுக்கு வருகின்றாய் ஒரு விருந்தினரைப் போல. நீ என்ன சரக்குக் கப்பலா, சாமான்களை இறக்கிவிட்டுச் செல்ல ?

எனினும் அரபிக் கடலில் நம் இளைஞர்கள் வியர்வை நீச்சல் அடிக்காமல் இருந்திருந்தால் - செல்வ முத்துக்களைச் சேமித்திருக்க முடியுமா ?

இன்றைக்கு துபாய் நாட்டின் பெருநகர வீதியொன்றில் ‘ஸலாஹுத்தீன் தெரு' என ஒளிவீசக் காணமுடிகிறதென்றால் - அது, பிற்ந்த நாட்டை விட்டுப் பிரிந்து சென்ற அறிவையும் உழைப்பையும் முதலீடு செய்ததால் தானே ?

இதனை துபாய்ப் பயணம், எனக்குத் துல்லியமாகத் துலக்கியது.

சொந்த நாட்டில் - வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. கைப்பொருளை விற்றுக் காசாக்கி, சிறு கடையொன்றில் வியாபாரம் செய்தாலும் அதனால் குடும்பத்தைக் கால் வயிறுகூட கழுவ முடிவதில்லையே !

இந்த வெட்ட வெளிச்சமான வெப்ப உண்மைதானே நம் இளைஞர்களை விரட்டுகிறது. வேலை தேடச் சொல்லி வெளிநாட்டிற்கு ?

துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய அமீரக நாடெனும் குளத்துத் தாமரைகளாகப் பூத்திருக்கும் தமிழக இளைஞர் முகங்களை நான் பார்த்த போது மலர்ந்தே காணப்பட்டன.

இந்ந்நாடுகளில் வேலை வாய்ப்பு நெல்மணிகள் அதிகமாக விளைந்து கிடக்கின்றன. எனவே நம் நாட்டு இளைய தலைமுறை, அந்த நெல்மணிகளை அறுவடை செய்யப் புறப்படுதல் தவறே அல்ல என்பதை நேரிற் கண்டுணரும் வாய்ப்பைப் பெற்றேன்.

எனவே மதிப்புமிகு ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களிடம் நான் சொன்னேன் :

நிலவின் ஒரு பக்கத்தை குறிப்பிட்டது போல, அயலகம் செல்வதைத் தவிர்க்கலாம்' என எழுதிவிட்டேன். இனி நிலவின் மறுபக்கமான ‘வேலை தேடி விரைந்து செல்லுங்கள்' என்று குறிப்பிடுவேன் என நான் விளக்கம் தந்ததும் ஸலாஹுத்தீன் காக்கா சிரித்துவிட்டார்கள்.

குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான், ‘இந்த உலகமே மனித உலகத்திற்கு' என்று. மனிதன் தான், உன் நாடு, என் நாடு என எல்லை பிரித்து, இயல்புகள் பிரிந்தும் கெட்டுக் கிடக்கின்றன.

திரைகடலோடியும் திரவியம் தேடு' எனபதும் மேலே சொன்ன குர்ஆனின் கூற்றுக்கு இணங்கக் கூறப்பட்டதுதான்.

கரும்புகள் விளைச்சல் கண்டிருப்பது போல - எங்கு பார்த்தாலும் கட்டட விளைச்சல்கள், பாலைவனமெங்கும் இன்று பல நூற்றுக்கணக்கில் அடுக்கு மாடிகள் அரும்பிக் காணப்படுகின்றன.

பெட்ரோலியப் பொருளாதாரம் - அமீரகத்தை - கடலைத் திடலாக்கும் அளவுக்குக் கட்டுமீறி காணப்படுகிறது. செல்வச் செழிப்பும் அதனையொட்டி நவநாகரீகப் பயன்பாட்டுப் பொருட்குவியலும் - சூப்பர் மார்க்கெட்களாக சூழ்ந்து கிடக்கின்றன.

குடும்பத்தை விட்டு அமீரகத்தில் குழுமியிருக்கும் நம் தோழர்கள், மீலாதுந்நபி விழாவை - ஒன்று ஒருமித்துச் சிறப்புச் செய்து வருகிறார்கள்.

துபாயில் ஈமான், அபுதாபியில் அய்மான் என உருவான அமைப்புகள் தமிழ் முஸ்லிகளின் பண்பாடுகளைப் பேணி வருகின்றன.

தரை வழிப் பயணத்திற்குப் பேருந்தும், ஆற்று வழிப் பயணத்திற்குக் கப்பலும், ஆகாய வழிப் பயணத்திற்கு விமானமும் போல மேற்கண்ட பண்பாட்டு அமைப்புகள், தங்கள் தங்களுக்கெனத் தனித்தனி வழிமுறைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

துபாய் ஈமான் அமைப்பின் சார்பாக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

தூதர் திருநபி ( ஸல் ) அவர்களின் சிறப்புக்களை எடுத்துக்காட்ட - திருக்குறளில் இருந்து ஒரு மேற்கோளுடன் என் உரைப்படகு, மேடை நதியில் வெள்ளோட்டங் கண்டது.

தூது உரைப்பவர் பற்றி திருக்குறளில் -

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று' என இலக்கியம் செய்யப்பட்டதற்கு இலக்கணமாக நபி ( ஸல் ) அவர்கள் விளங்குகிறார்கள். அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய மூன்று குணாம்சங்களில் நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து விளக்கம் தந்த என் பேச்சு குவைத் மஸ்ஜித் இமாம் அவர்களுக்கு ஒப்பவில்லை போலும் அது.

-- தொடரும்



நன்றி : இஸ்மி - ஜுலை 2005

No comments: