Friday, August 29, 2008

குழந்தை வளர்ப்பு ஒரு கலை!

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

தொடர்-1

S.A. மன்சூர் அலி
சென்னை வண்டலூர் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்
மர்ஹூம் நீடூர் ஏ. எம். சயீத் சாஹிப் அவர்களின் மருமகன்


http://niduronline.com
http://niduronline.com/?p=11#more-11


நல்ல துணி வகைகளை எடுத்து நன்றாக தைக்கத் தெரியாத டெய்லர் ஒருவரிடம் கொடுத்தால் நமது உடைகளின் நிலை என்னவாகும்?

தேவையான அனைத்து சமையல் பொருட்களையும் தேர்வு செய்து சமைக்கத் தெரியாத சமையல்காரரிடம் கொடுத்தால் அந்த உணவின் சுவை எப்படி இருக்கும்?

நல்ல செங்கற்கள், நல்ல சிமெண்ட், நல்ல இரும்புக் கம்பிகள் என்று பார்த்து பார்த்து வாங்கி அரைகுறைப் பொறியாளர் ஒருவரிடம் ஒப்படைத்தால் நமது வீட்டின் அழகு எப்படி காட்சியளிக்கும்?

தோட்டக்கலை தெரியாத ஒருவரிடம் இளம் பூச்செடிகளை ஒப்படைத்தால் அவைகளின் கதி என்னவாகும்?

ஆடு, மாடு, கோழிகளை பண்ணை வைத்து வளர்ப்பவர்கள் அது குறித்த அறிவை சிறிதும் பெறாமல் போய் விட்டால் அந்த உயிரினங்கள் என்ன பாடு படும்?

அறை குறை மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டால் நோயாளி என்ன ஆவார்?


பெற்றோர்களே!

தையல் ஒரு கலை! அது ஒரு திறமை!

சமையல் ஒரு கலை! அது ஒரு திறமை!

வீடு கட்டுதல் ஒரு கலை! அது ஒரு திறமை!

அது போலவே தோட்டப் பராமரிப்பும், ஆடு மாடு வளர்த்தலும், அறுவை சிகிச்சையும் வெவ்வேறு கலைகளே! திறமைகளே!

அப்படியானால் குழந்தை வளர்ப்பு? அது ஒரு கலை அல்லவா? அது ஒரு திறமையல்லவா?

திருமணமான எத்தனையோ தம்பதிகள் குழந்தைப் பேற்றிற்காக ஏங்கித் தவிப்பதைக் கண்டிருப்பீர்கள்! குழந்தைப் பேற்றினை அதுவரை அடையாத ஒரு மனைவியின் ஏக்கத்தை இவ்வாறு வர்ணிக்கிறார் ஒரு கவிஞர்:

அடுக்கி வைக்கவா? கலைத்துப் போடவா?
அடுக்கி வைத்து என்ன பயன்?
கலைத்துப் போட ஒரு குழந்தை இல்லையே?
(நன்றி: தினகரன் வார மலர்)

அல்லாஹுதஆலா உங்களுக்கு அழகான குழந்தையை / குழந்தைகளை அருட்கொடையாக வழங்கியிருக்கிறான். ஆனால் நமது குழந்தைகளை எப்படி வளர்த்திட வேண்டும் என்பது குறித்து நமக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாது! இது வேதனை அல்லவா?

நன்றாக உடுத்திக் கொள்ள நல்ல டெய்லரைத் தேடிப் போகிறோம். நாம் பெறுகின்ற குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களாக நாம் விளங்கிட வேண்டாமா? சிந்தியுங்கள் சிறிது நேரம்! இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு குறித்து…

(தொடரும்..)


பாகம் 2

இன்றைய குழந்தைகள் படு சுட்டிகள்

(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-2)

அன்று ஒரு நாள் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்லாம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். பாடத்தைத் துவங்கிடும் முன்பு கேள்வி ஒன்றைக் கேட்டேன்:
‘”முஸ்லிம் என்றால் யார்?”
ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். நான் கேட்டேன்:
முஸ்லிமான தாய் தந்தைக்குப் பிறந்த ஒருவரே முஸ்லிம் ஆவார் - இது சரியா? தவறா?
‘தவறு சார்’ என்றான் ஒரு மாணவன் உடனேயே.
‘எப்படி?’
‘முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம்!
ஆனால் அவர்களின் தந்தை ஒரு முஸ்லிமாக இருந்திடவில்லையே சார்!’
‘சார்,சார்’ என்று எழுந்து நின்றான் மற்றொரு மாணவன்
‘என்ன பையா?
‘இப்ராஹிம் நபி(அலைஹிஸ்ஸலாம்)யின் தந்தை சிலைகளை விற்று வந்தார். ஆனால் அவர் மகன் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) ஒரு முஸலிம்தானே’ என்றான்.

இவர்கள்தாம் இன்றைய குழந்தைகள். படு சுட்டிகள்’
படு வேகமாக சிந்திப்பவர்கள். நாமே வியந்து அசந்து போகும் அளவுக்கு அவர்களிடம் சிந்தனை வளம் (Creative Thinking) கொட்டிக் கிடக்கிறது.

ஒரு தடவை ஆங்கிலக் கலந்துரையாடல் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தேன். மாணவர்களிடம் கற்பனையாக ‘நீங்கள் இப்போது தான் சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்திருக்கின்றீர்கள். விமான நிலைய அதிகாரிகளிடம் நீங்கள் உரையாடிட வேண்டும். எவ்வாறு உரையாடுவீர்கள்? செய்து காட்டுங்கள் பார்ப்போம்’ என்றேன். அவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து உரையாடலைத் தொடங்கினார்கள்.

சற்று நேரத்தில் அவர்களில் ஒருவனை கவனித்தேன். மூக்கின் மேல் ஒரு கர்ச்சீப்பை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தான். ஏன் என்று கேட்டேன். ”சாரஸ்” வியாதிக்கு பயந்து தான் சார் என்றான். (அப்போது சிங்கப்பூரில் ”சார்ஸ்’ பயம் இருந்தது உண்மை தான்). மாணவனின் கற்பனை வளத்தைப் பார்த்தீர்களா? இவர்கள்தாம் இன்றைய மாணவர்கள்.

பேற்றோர்களே! ஆசிரியர்களே!

உங்கள் குழந்தைகளும், மாணவர்களும் படு சுட்டிகளே என்பதை பல தருணங்களில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அவற்றை ஒரு கணம் நினைவு படுத்தி அசை போட்டுப் பாருங்கள்;. அத்தகைய ‘சுட்டித்தனம்’ குழந்தைகளுக்கு அவசியம். அவர்களின் எதிர்கால வெற்றிக்கு அவர்களிடம் கொட்டிக் கிடக்கின்ற புதுப்புது சிந்தனைத் திறன்தான் பெரிதும் உதவும். அவற்றை அள்ளி அள்ளி வெளிக்கொணர வேண்டுமே தவிர கிள்ளி எறிந்து விடக் கூடாது.

சில சமயங்களில் நமது குழந்தைகள் நமது எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தவாறு ”அடக்கம்,ஒடுக்கமாக’ நடந்திட மாட்டார்கள். அப்போதெல்லாம் பெரியவர்கள் நாம் என்ன செய்வோம்? நமது பழங்கதைகளைத் துவங்கி விடுவோம்.
அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் இப்படியா இருந்தோம். கையைக் கட்டி, வாயைப் பொத்தி நில் என்றால் நிற்போம். உட்கார் என்றால் உட்காருவோம். நீங்களும் இருக்கிறீர்களே என்று நீட்டி முழக்கத் துவங்கி விடுவோம். நமது Flash Back அவர்களுக்கு சுவைப்பதில்லை.குழந்தைகள்தானே, அவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைக்காதீர்கள். பேற்றோர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேறு, உங்கள் குழந்தைகள் வேறு. நீங்கள் வாழ்ந்த காலம் வேறு. அவர்கள் வளர்கின்ற இன்றைய காலம் முற்றிலும் வேறு. நமது பெற்றோர் நம்மை வளர்த்தது போல நாம் நமது குழந்தைகளை நிச்சயமாக வளர்த்திட முடியாது. கூடாது!!

எனவேதான் சொல்கிறோம்.இன்றைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு பெரிய சவால் ஆகும். அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.


பாகம் 3

குழந்தைக்கு அம்மா யார்?

(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-3)

சொற்பொழிவு ஒன்றில் கேட்ட நினைவு.

அவர் ஒரு சிறந்த மார்க்க அறிஞர். ஒரு நாள் அவரிடம் ஆலோசனை கேட்க ஒருவர் வந்திருந்தாராம்.

‘குழந்தை வளர்ப்பது எப்படி என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்’.

அறிஞர் கேட்டார்: ‘உங்கள் குழந்தையின் வயது என்ன? ‘

‘மூன்று’.

‘நீங்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளீர்களே!’

‘ஏன்? அப்படியானால் நான் எப்போது வந்திருக்க வேண்டும்?’

‘நீங்கள் திருமணம் முடிப்பதற்கு முன்பே வந்திருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை வளர்ப்பது என்பது அந்தக் குழந்தையைப் பெற்று வளர்த்திடும் தாயைத் தேர்வு செய்திடும் நேரத்திலேயே துவங்கி விடுகிறது’.

அறிஞரின் பதிலில் உள்ள ஆழத்தைக் கவனித்தீர்களா?

இதோ இன்னொரு சம்பவம்.

அபுல் அஸ்வத் (ரஹ்) என்ற பெரியார், ஹஜ்ரத அலி ரலியல்லாஹ் அவர்களின் மாணவர். அவர் தமது முதுமைக் காலத்தில் தனது பிள்ளைகளை அழைத்து ‘நான் உங்களுக்கு நீங்கள் பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னரும் உபகாரம் செய்துள்ளேன்’ என்று சொன்னாராம். புரியவில்லையே என்றார்களாம் பிள்ளைகள்.நல்ல ஸாலிஹானதொரு பெண்ணை எனக்கு மனைவியாக தேர்வு செய்ததன் மூலம் உங்களுக்கு நல்லதொரு தாயை நான் தேர்வு செய்திடவில்லையா? என்று புரிய வைத்தாராம் அந்த அறிஞர்.

இந்த இடத்தில் நாம் சில பாடங்களைப் படித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம்.

1. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது திருமண விஷயத்தில் முற்றிலும் பொருந்தும்.

2. வரதட்சனைக்காக பெண்ணை தேர்வு செய்யும் இளைஞர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். பெண்ணின் குணத்தைப் பாருங்கள். பணத்தைப் பார்க்காதீர்கள்.

3. அவசர கோலத்தில் காதலித்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திருமணம் செய்திடத் துடிக்கும் இளைஞர்களே! சற்று நிதானித்து செயல் படுங்கள். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். இஸ்லாத்தைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சீரியஸான விஷயம். அதனை விளையாட்டாய் எடுத்துக் கொண்டால் அது உங்கள் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.

4. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கப் பற்றுள்ள பெண்களை தேர்வு செய்திடும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பொய்க்கப் போவதில்லை.


பாகம் 4

தாய்மையின் சிறப்பு

(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-4)

• குழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள் (குர்ஆன் 18: 46).

• குழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்(குர்ஆன் 25: 74).

• குழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற அருட்கொடைகள். ஆம் அது ஒரு நிஃமத்.

• குழந்தைகள் ஒரு அமானத்தும் கூட. எனவே குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பொறுப்பு(Responsibility).

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லதொரு குடும்பச் சூழல் அவசியம். ஒரு குழந்தையைப் படைத்து அதனை உலகுக்கு அனுப்பி வைக்கு முன்பேயே அக்குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவன் அல்லாஹூதஆலா!

எனவே ஒரு இல்லத்திலே குழந்தை ஒன்று பிறப்பதற்கு முன்பேயே அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையை (psychological preparation) எவ்வாறு தயார் செய்கிறான் என்பதைப் பார்ப்போமா?

ஒரு முறை அண்ணல் நபி(சல்) அவர்களின் மகன் இப்ராஹிமின் வளர்ப்புத் தாய் சலமா (ரலி) அவர்கள் நபி (சல்) அவர்களிடத்திலே வந்து கேட்டார்கள்:

யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் ஆண்களுக்கு அதிக நன்மைகளை வாக்களிக்கிறீர்கள். ஆனால் பெண்களுக்கு அது போல் செய்வதில்லையே!

நபி(சல்) அவர்கள் கேட்டார்கள்: உங்கள் பெண் நண்பர்கள் உங்களை இவ்வாறு கேட்கச் சொல்லித் தூண்டி விட்டார்களா? ஆம் என்றார்கள் சலமா (ரலி) அவர்கள். நபி(சல்) அவர்கள் பதிலளித்தார்கள்:

தன் கணவன் மகிழ்ச்சியுற்றிருக்கும் நிலையில் உங்களில் ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளே அவள் - அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற ஒரு நோன்பாளி பெறுகின்ற அதே நன்மைகளைப் (reward) பெறுகிறாளே அது உங்களுக்கு திருப்தியளித்திடவில்லையா?

பிரசவ வலியால் துடித்திடும் அந்தப் பெண்ணுக்காக எப்படிப்பட்ட அளவிலா நன்மைகள் காத்திருக்கின்றன என்பதை வானத்திலோ பூமியிலோ உள்ள எந்தப் படைப்பினமும் அறிந்திடாது.

அவள் குழந்தையைப் பெற்றெடுத்து அக்குழந்தை குடிக்கின்ற ஒவ்வொரு மிடறு பாலுக்காகவும் அவளுக்கு நன்மைகள் வழங்கப் படும்.

அக்குழந்தைக்காக அதன் தாய் இரவில் கண் விழிக்கிறாளே அதற்காக அவளுக்கு வழங்கப் படும் கூலி என்ன தெரியுமா? 70 அடிமைகளை அல்லாஹ்வுக்காக உரிமை விட்டவர் பெறுகின்ற அதே அளவு கூலியைத்தான்! (ஆதார நூல் : தபரானி)

தாய்மார்களே! இவ்வளவு சிறப்புகளையும் நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றிட நாங்கள் துஆ செய்திடும் அதே வேளையில் குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு மகத்தான பொறுப்பு என்பதையும் நீங்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே எங்கள் அவா!


பாகம் 5

தந்தையின் பொறுப்பு

(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-5)

ஒப்பு நோக்குங்கால் தந்தையை விட தாய்க்கே குழந்தை வளர்ப்பில் பொறுப்பு அதிகம் என்பது உண்மைதான். ஆனால் தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் தான் என்று பல தந்தைமார்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல.

குழந்தை வளர்ப்பு என்பது பின்வரும் ஐந்து பரிணாமங்களைக் கொண்ட ஒரு பெரும் பொறுப்பு ஆகும்.

1. உடல் வளர்ச்சி (Physical Development)
2. மன வளர்ச்சி (Psychological Development)
3. அறிவு வளர்ச்சி (Intellectual Development)
4. ஆன்மிக வளர்ச்சி (Spiritual Development)
5. ஒழுக்க வளர்ச்சி (Character Development)

பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது மேற்கண்ட ஐந்து பரிணாமங்களிலும் தங்கள் குழந்தைகள் வளர்கிறார்களா என்று கண் காணித்திட வேண்டும். அதுவே முழுமையான குழந்தை வளர்ப்பு முறை ஆகும். இப்பெரும் பொறுப்பினை தாயும் தந்தையும் சேர்ந்தே ஏற்றுக்கொள்ள வேண்டுமேயல்லாமல் எனக்கு எங்கே இருக்கிறது நேரம் என்று ஒரு தந்தை ஒதுங்கி விடக் கூடாது. அப்படி ஒதுங்கினால் பின்னர் ‘என் பிள்ளை என் பேச்சைக் கேட்பதேயில்லை, எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான், நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன், எவ்வளவு அவனுக்காக செலவு செய்திருக்கறேன் தெரியுமா’ என்றெல்லாம் ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை!

இங்கே இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:

நபித்தோழர் ஒருவர் தமது குழந்தையை தமது கைகளில் அரவணைத்து அணைத்துக் கொண்டவராக நபி (சல்) அவர்களை சந்திக்க வந்திருந்தார். இதனைக்கண்ட நபியவர்கள் ‘உங்கள் குழந்தையின் மீது கொண்ட அன்பினாலும் இரக்க குணத்தாலும் தான் இவ்வாறு செய்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். ஆம் என்றார் அந்த நபித்தோழர். நபி (சல்) அவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள். ‘நீங்கள் எப்படிப்பட்ட அன்பையும் இரக்க குணத்தையும் கொண்டு உங்கள் குழந்தையை இவ்வாறு நடத்துகிறீர்களோ அதை விட பன்மடங்கு அதிகமாக அல்லாஹுதஆலா விடமிருந்து அவன் அன்பையும் அருளையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஏனெனில் அல்லாஹுதஆலாவின் அன்பும் இரக்க குணமும் அவன் படைப்பினங்கள் அனைத்தின் இரக்க குணத்தை மிகைத்து நிற்கக் கூடியது!’ (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (சல்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு தந்தை தமது மகனது முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார் எனில், அதற்காக அவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்ட நற்கூலி வழங்கப்படுகிறது. நபித்தோழர் ஒருவர் : முன்னூற்று அறுபது தடவை அப்படிச் செய்தாலுமா என்று கேட்டார்? நபி (சல்) அவர்கள் பதிலளித்தாரகள்: அல்லாஹுதஆலாவைப் பற்றி நீங்கள் எண்ணுவதை விட அவன் மிகப்பெரியவன் (தபரானி)

தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் அல்ல என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா தந்தைமார்களே?



பாகம் 6

குழந்தைகளை கொஞ்சுங்கள்!

(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-6)

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று. இரவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று விழித்துக் கொள்கிறது. அழத்தொடங்குகிறது. நீங்கள் ஒரு தாய். என்ன செய்வீர்கள்?

இங்கே ஒரு தாய். அவர் பாசத்துடன் தனது குழந்தையை வாரி அணைத்துத் தூக்கிக் கொள்கிறார்.

“என்னம்மா, முழிச்சிக்கிட்டியா? என்ன வேணும்? இதோ நான் இருக்கேன் உனக்காக!” என்று கொஞ்சுகிறார். கைகளில் அரவணைத்துக் கொண்டே பால் கொடுக்க தொடங்குகிறார். குழந்தை தனது அம்மாவைப் பார்த்து சிரித்த முகத்துடன் பால் குடித்துவிட்டு அப்படியே திருப்தியுடன் தூங்கி விடுகிறது.

இன்னொரு தாய். இஅவ்ர் தனது குழந்தையை இரவில் தூங்க வைக்கிறார். தானும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூஙகப் போகும் சமயம் மாமியார் சண்டைக்கு வருகிறார். எல்லாம் வரதட்சனைப் பிரச்சனைதான். ஒருவாறு சண்டை ஓய்ந்து அந்த இளம் தாய் தூங்கப் போகிறார். தூக்கம் வரவில்லை. இரவு ஒரு மணி இருக்கும். அப்போதுதான் அசந்து தூங்கியிருப்பார். திடீரென்று கண் விழித்துக் கொண்டு அழத் தொடங்குகிறது குழந்தை.” ஏய் சும்மாயிரு தூங்க விட மாட்டியா என்னை?” என்று அதட்டியவாறே குழந்தையைத் தூக்குகிறார் தாய். குழந்தை பால் குடிக்க மறுக்கிறது. மீண்டும் அதட்டுகிறார் அந்தத் தாய், சற்றும் முகத்தில் பாசம் இல்லாதபடி. குழந்தை தாயை அச்சத்துடன் பார்க்கிறது. நெளிகிறது. அப்படியே விரைத்துக் கொள்கிறது குழந்தை. பால் குடிக்காமல் பசியுடனேயே அசந்து தூங்கி விடுகிறது. இதுவே ஒரு தொடர் கதையானால்?

மேற்கண்ட இரு தாய்மார்களிடத்தில் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக வளர்கிறார்கள் தெரியுமா? முதல் தாயின் குழந்தை தன்னம்பிக்கை உடையதாக வளர்கிறது. முன்னேறத் துடிக்கிறது. மற்றவர்களையும் நம்புகிறது. அவர்களின் உதவியுடன் சாதித்துக் காட்டுகிறது. ஆனால் இரண்டாவது தாயின் குழந்தை யாரையும் நம்புவதில்லை. யாரையும் உதவிக்குக் கூட அணுகுவதில்லை. ஒட்டு மொத்த உலகமே தனக்கு எதிரானது என்று ஒதுங்கி ஒதுங்கி சென்று பயந்து பயந்து வாழ்த்து எதனை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

மைக்கேல் ஜோர்டன் ஒரு தலை சிறந்த முன்னணி கூடைப்பந்து ஆட்டக்காரர். அவர் சொல்கிறார்: நான் கூடைப்பந்தில் மிகச் சிறந்த ஆட்டக்காரராக வந்திட வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. அதெற்கென படிபடியாக திட்டமிட்டு உழைத்தேன். கடுமையான முயற்சிகள் மேற்கொண்டேன்.

எனக்கு உதவி தேவைப்பட்டால் யாரையும் அணுகுவதற்குத் தயங்கமாட்டேன். நான் ஏன் அதற்கு பயப்பட வேண்டும்?”

இங்கேதான் நாம் நன்றாக சிந்தித்தாக வேண்டும்.

ஒருவர் சாதித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் அவர் தயக்கங்களைத் தூக்கி யெறிந்திட வேண்டும். உதவி தேடுவதற்கு வெட்கப்படக் கூடாது. அதற்கு மற்றவர்கள் நமக்கு உதவிடுவார்கள் என்று நம்பிக்கை அவசியம். கைக்குழந்தையாக இருக்கும் நிலையில் தன் தாயே தன் உதவிக்கு வராத போது அக்குழந்தை வளர்ந்து ஆளாகும் போது வேறு யாரை நம்பிடும்?

எனவே தான் சொல்கிறோம் - கொஞ்சுங்கள்!

விளையாட்டுக்கு; கூட குழந்தைகளை அதட்டிப் பேசாதீர்கள். ‘கோபம்! ரோஷம்! பொத்துக்கிட்டு வர்ரதைப் பாரு!’ என்று சில பெற்றோர்கள் சிறு குழந்தைகளை அதட்டி அழ வைத்து வேடிக்கைப் பார்ப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதை விட ஒரு கொடுமையை நாம் ஒரு குழந்தைக்குச் செய்து விட முடியாது.

பெற்றோர்கள் இதனை உணர்வார்களா?

இங்கேயும் இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:

அண்ணல் நபியவர்கள் குழந்தைகளுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள் தெரியுமா? ‘நபியவர்கள் தங்களின் பேரக்குழந்தைகள் ஹசன் மற்றும் ஹூசைன் இருவரையும் தங்களிடம் வரச்சொல்லி அழைத்து இருவரையும் ஆரத் தழுவிக்கொள்வார்கள்’ என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நான் அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் நபியவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் கூடவே சென்றேன். வழியில் அவர்கள் சில சிறுவர்களைச் சந்தித்தார்கள். ஒவ்வொரு குழந்தையின் கன்னத்தையும் அன்போடு அவர்கள் தட்டிக் கொடுத்தார்கள். எனது கன்னத்தையும் அவர்கள் தட்டிக் கொடுத்த போது நான் நபியவர்களின் கரங்களின் குளிர்ச்சியையும் வாசனையையும் உணர்ந்தேன். அது எப்படி இருந்தது என்றால் ஒரு வாசைன திரவியம் நிரம்பிய பையில் கையை விட்டு எடுத்தவர் கைகள் போன்று இருந்தது. (முஸ்லிம்)

இது போன்ற நபிமொழிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே குழந்தைகளைக் கொஞ்சுவதை ஒரு சுன்னத் என்ற அடிப்படையில் செயல் படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை.

இங்கே இன்னொன்றையும் நினைவில் நிறுத்துவோம். குழந்தைகள் நன்றாக வறர்க்கப்பட குடும்பச் சூழல் எந்த அளவுக்கு அவசியம் என்பதை நாம் மேலே எடுத்துக் காட்டிய சான்றிலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.


பாகம் 7

குழந்தையைப் பாராட்டுங்கள்!

(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-7)

ஒரு வயது கூட நிரம்பியிருக்காது அக்குழந்தைக்கு. அதன் தாய் அந்தக் குழந்தை விளையாடுவதற்காக சில ப்ளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வருகிறார். குழந்தைக்கு முன்னே அமர்ந்து கொண்டு அவைகளை எப்படி அடுக்கிட வேண்டும் என்று செய்து காட்டுகிறார். குழந்தை அந்த டப்பாக்களை எடுத்து வைத்துக் கொண்டு அடுக்கத் தொடங்குகிறது. ஒரு டப்பா உருண்டோடுகிறது. அம்மா அதனை எடுத்து மீண்டும் குழந்தையிடம் கொடுக்கிறார். குழந்தை அம்மாவைப் பார்த்து சிரித்த படி மீண்டும் முயற்சி செய்கிறது. இதோ அடுக்கியும் விட்டது. கண்கள் பளிச்சிட அம்மாவை கவனிக்கிறது. அதன் பொருள் என்ன? ‘அம்மா, எப்படி என் சாதனை?’ அம்மாவும் கை கொட்டி சிரிக்கிறார். அப்படியே தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார். குழந்தை தன் தாயின் பாராட்டு மழையில் அப்படியே நனைகின்றது.

இந்தக் குழந்தைக்கு அதன் தாய் கற்றுக் கொடுத்தது என்னென்ன தெரியுமா? தன்னம்பிக்கையும், ஒன்றைக் கற்றுக் கொள்வதில் ஆவலும் ஆர்வமும், மேலும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கமும் தான். இப்படி அம்மாவினால் ஊக்கம் பெறுகின்ற குழந்தைகள் பள்ளிக்கூடத்திலும் சாதிக்கின்றன. தன் வாழ்க்கையிலும் சாதிக்கின்றன. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நமது குழந்தைகள் ஏதாவது ஒரு மிகச்சிறிய செயலை செய்து முடித்தால் கூட அதனை வாய் விட்டுப் பாராட்டி விட வேண்டும். நமது பெற்றோர்கள் சிலர் அப்படிப் பாராட்டினால் குழந்தைகளுக்கு கர்வம் வந்து விடும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. குழந்தைகளின் எல்லா வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்களை நாம் ஊக்கப் படுத்திட வேண்டும். குழந்தைகளைப் பாராட்டுவதற்கு அவர்கள் ஏதாவது பெரிதாகத் தான் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிகச் சிறிய ‘சாதனை’ ஒன்றை அவர்கள் செய்து விட்டால் கூட அவர்களைப் பாராட்டி விடுங்கள்.

உங்கள் குழந்தை - புதிதாக ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டதா - பாராட்டுங்கள்.
உங்கள் மகன் ஏதாவது படம் ஒன்றை வரைந்து வந்து காட்டுகின்றானா - பாராட்டுங்கள்.
கீழே சிந்தாமல் ஒரு நாள் உணவு உண்டு விட்டானா - பாராட்டுங்கள்.
உங்கள் மகன் ஒரு தேர்வில் 15 மதிப்பெண் பெற்று வந்திருப்பான். ஆனால் அடுத்த தேர்வில் 25 மதிப்பெண் பெற்றிருப்பான். அடடா! இந்தத் தடவை 10 மதிப்பெண்கள் அதிகம் பெற்றிருக்கிறாயே - இன்னும் முயற்சி செய் - வெற்றி பெற்று விடுவாய் என்று பாராட்டுங்கள்.
உங்கள் மகனுக்கு படிப்பு வரவில்லையா? வேறு ஏதாவது திறமைகள் அவனுக்குள் ஒளிந்திருக்கும். ‘அத்தா! இதைப் பார்த்தீர்களா’ என்று ஏதாவது ஒன்றை செய்து வந்து காட்டுவான். பாராட்டுங்கள். ஒரு சிறுவன் தெருவில் மட்டைப் பந்து விளையாட வத்தானாம். ஆனால் அவன் நண்பர்கள் யாரும் வந்து சேரவில்லை. அவனே பந்தை ஒரு கையால் தூக்கிப் போட்டு இன்னொரு கையில் உள்ள மட்டையால் பந்தை அடிக்க முயற்சி செய்தானாம். ஆனால் பந்து அடிபடவில்லை. தவறி விட்டது. இதனைக் கவனித்த பெரியவர் ஒருவர் Good என்றாராம். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரை ஒரு கணம் பார்த்து விட்டு மீண்டும் பந்தைப் போட்டு மட்டையை விளாசினான் சிறுவன். இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Very Good என்றாராம். சிறுவனுக்கு சற்றே கோபம். அவரை முறைத்துப் பார்த்து விட்டு மூன்றாவது தடவை சற்றே எச்சரிக்கையுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Superb என்றாராம். சிறுவனுக்கு கோபம் இப்போது தலைக்கு மேல். கடைசியாக இந்தத் தடவை எப்படியும் பந்தை அடித்தே தீர்வது என்று உறுதியுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் பரிதாபம். இந்தத் தடவையும் பந்து அடிபடவில்லை. பெரியவரோ தனது கைகளைத் தட்டிக் கொண்டே Excellent என்றாராம். வந்ததே கோபம் சிறுவனுக்கு. நேரே அவரிடம் வந்து என்ன கிண்டலா? என்று அவரைத் திட்டினானாம். அதற்கு அந்தப் பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘தம்பி! நான் உனது மட்டை வீசும் திறமையைப் பற்றி ஒன்றும் சொல்லிடவில்லை. ஆனால் நான் பாராட்டியதெல்லாம் லாகவமாக நீ பந்தை வீசியதைத் தான். எவ்வளவு அற்புதமாக பந்து வீசுகிறாய் தெரியுமா!’ ஆமாம்! இப்படித் தான் பாராட்டிட வேண்டும் நமது குழந்தைகளை! பாராட்டுவதால் என்ன நன்மை? ஏதாவது ஒன்றில் ஒரு சிறு வெற்றி பெறுகின்ற குழந்தை பாராட்டப் படுகின்ற போது அதற்கு தன் மீது ஒரு நம்பிக்கை வருகிறது! இன்னும் இதை விட ஏதாவது பெரிதாக ஒன்றைச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதற்கு ஏற்படுகிறது. துணிந்து இறங்கி இன்னொன்றை சாதித்துக் காட்டுகிறது. அது மீண்டும் பாராட்டைப் பெறுகிறது. இந்த சுழற்சி அந்தக் குழந்தையை சாதனையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் ரகசியம். இப்போது நபிவழிக்கு வருவோம். ஆமாம் பாராட்டுவதும் நபிவழியே! இதோ சான்றுகள்: அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு சிறுவர். ஓரு நாள் நபி (சல்) அவர்கள் பின்னிரவில் தொழுவதற்காக எழுந்து சிறுநீர் கழித்து விட்டு திரும்புகிறார்கள். அப்போது உளு செய்வதற்காக தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. யார் வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் சிறுவர் இப்னு அப்பாஸ் தான் அது என்று தெரிய வருகிறது. தமக்குத் தெரியாமலேயே பணிவிடை செய்த இப்னு அப்பாஸ் அவர்களை நபியவர்கள் பாராட்டுகிறார்கள். அவருடைய கல்வியாற்றல் பெறுகிட துஆவும் செய்கிறார்கள். பின்னாளில் இப்னு அப்பாஸ் அவர்கள் மிகச் சிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராக விளங்கினார்கள் என்பது வரலாறு. சிறு வயதிலேயே விளையாட்டுச் சாமான்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட சஹாபி ஒருவரை நபியவர்கள் பாராட்டி துஆ செய்ததாக நபிமொழி உண்டு. சிறுவர்களுக்கு ஓட்டப் பந்தயம் வைத்து அதில் வெற்றி பெறுபவரை முத்தம் கொடுத்துப் பாராட்டுவார்கள் நபியவர்கள் என்றும் நபிமொழி உண்டு.
இப்போது சிந்தியுங்கள். எத்தனைத் தடவை உங்கள் குழந்தைகளைப் பாராட்டும் தருணங்களைத் தவற விட்டிருப்பீர்கள் என்பது புரிய வரும். இனியேனும் உங்கள் குழந்தைகளைப் பாராட்டுவீர்களா?



பாகம் 8

குழந்தைகளை திட்டாதீர்கள்!

(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-8)

எந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தையை “சனியனே!” என்று அழைப்பாளா? ஆனால் அழைக்கிறார்களே! இதை எங்கே போய் சொல்வது? “சனியனே! இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது!” என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

இன்னும் எப்படியெல்லாம் திட்டுகிறோம் தெரியுமா?
“இங்கே வாடா நாயே!”
“உயிரை வாங்காதேடா”
“நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா”.
“டேய்! சோம்பேறிக் கழுதை”.
“நீ எங்கேடா உருப்படப் போகிறாய்”

குழந்தைகளை திட்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?

பத்தொன்பது வயது பையன் ஒருவன். அப்பா ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான். தந்தை திட்டுவார் என்று பயந்து மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். எந்த அளவுக்கு தந்தைக்கு அவன் பயந்திருந்தால் இப்படிப் பட்ட விபரீத முடிவுக்கு வந்திருப்பான் என்று சிந்தியுங்கள்.

மற்றவர்கள் முன்பு திட்டப் படும் போது - நமது குழந்தைகள் கூனிக் குறுகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சுய மரியாதை பறிக்கப் படுகிறது. ஒரு தடவை திட்டுவதால் ஏற்பட்ட காயத்தை ஆற்றிட பத்து தடவை நாம் “மருந்து” இட வேண்டுமாம்.

குழந்தைகளை திட்டுவதால் - பெற்றோர் ஒரு அழகற்ற முன்மாதிரியாக (அழகான முன்மாதிரிக்கு எதிர்ப்பதம்) ஆகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் கோப உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. இதன் மூலம் - நமது குழந்தைகள் மற்றவர்களை திட்டுவதற்கும் அவர்கள் எதிர்காலத்தில் வன்முறை மிக்கவர்களாக மாறுவதற்கும் நாமே வழி வகுத்து விடுகிறோம்.

நாம் விளையாட்டுக்காக திட்டி விடலாம். ஆனால் நமது திட்டு இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டால் நமது குழந்தைகளின் கதி என்னவாகும்?

நாம் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்திருப்போம். நமது செல்வம் அதனை எக்குத் தப்பாக செய்து விட்டு வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்போம். அதனை நமது அருமை மகன் உடைத்து விட்டு வந்திருப்பான். “நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா” என்று அவர்களை திட்டுவதால் - அவர்களின் தன்னம்பிக்கையை நாம் அழித்து விடுகிறோம் தெரியுமா? அவர்களுக்குள் பொதிந்திருக்கின்ற ஆற்றல்கள் அனைத்தும் எப்படி வெளிப்படும் சொல்லுங்கள்?
ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது - ஒரு குழந்தை தனது பதினாறு வயதை அடைவதற்குள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் மொத்தம் 17000 முறை திட்டு வாங்குகிறதாம். என்னவாகும் குழந்தைகள்?

திட்டுவதால் - நமது குழந்தைகளின் கண்ணியம் பாதிக்கப் படுகிறது. அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்: ” உங்கள் குழந்தைகளை கண்ணியப் படுத்துங்கள்” என்று! எப்படி கண்ணியப் படுத்துவது? நாம் அழகாக அவர்களிடம் பேசிட வேண்டும். அழகாக அவர்களைப் பேச வைத்திட வேண்டும். மற்றவர்களிடம் அழகாக அவர்களை அறிமுகப் படுத்திட வேண்டும்.

“தம்பி இங்கே வா” - என்று அழைத்தால் என்ன குறைந்து விடும்?
“அடடா! உடைத்தா விட்டாய்? சரி, சரி - போனால் போகட்டும், இனி மேல் சற்று கவனமாக இரு!” என்று சொல்லி விட்டால் அடுத்த தடவை அவன் எச்சரிக்கையாக இருக்க மாட்டான்? ஏன்? நாம் பொருட்களை உடைத்ததே கிடையாதா?

இங்கே இறை வாக்கு ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

‘மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்’ என்கிறான் வல்லோன் அல்லாஹூ தஆலா. (2:83) இந்த இறைக் கட்டளைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள்:
- அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.
- பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.
- உறவினர்க்கும் நன்மை செய்யுங்கள்.
- அநாதைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.
- ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.
- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.
- தொழுகையை நிலை நிறுத்துங்கள்.
- ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.

எப்படிப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகளுடன் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்ற கட்டளையையும் இணைத்துச் சொல்கிறான் அல்லாஹ் என்று ஒரு கணம் சிந்தியுங்கள். வல்லோன் அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களிடம் வாங்கிய உறுதி மொழிகள் தான் மேற்கண்ட இறைக் கட்டளைகள் அனைத்தும். அல்லாஹ்விடம் உறுதி மொழி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சிந்தியுங்கள்!



பாகம் 9

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு பாகம் 9 - குழந்தைகளை அடிக்காதீர்கள்.

குழந்தைகளை அடிக்காதீர்கள்.

“அப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.” - என்று ஓடி வருகிறான் தம்பி.
“அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.” - இது அண்ணன்.
“டேய்! யாரடா முதலில் அடித்தது? - இது தந்தை.
தம்பி தயங்கியபடியே - அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!”


“திட்டினால் என்னிடம் வந்து சொல்ல வேண்டியது தானே? அதற்காக ஏன் அண்ணனை அடித்தாய்?” - என்று அதட்டிய படியே தந்தை தம்பியை ஒரு தட்டு தட்டுகிறார். கூடவே அதனை சரி கட்டுவதற்கு அண்ணனையும் ஒரு போடு போடுகிறார்!
“இனி மேல் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது! புரிகிறதா?” என்று அனுப்பி வைக்கிறார்.
இங்கே அந்த இரு சிறுவர்களும் தங்கள் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதென்ன?
இனி நாம் யாரையும் அடித்திடக் கூடாது - என்றா அவர்கள் கற்றுக் கொண்டார்கள்? இல்லை!
மாறாக - அடிப்பது தவறு என்றால் அப்பா நம்மை ஏன் அடித்திட வேண்டும்? அடிக்காமலேயே சொல்ல வேண்டியது தானே! ஆக தந்தை நம்மிடம் “அடிக்கக் கூடாது” என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அவருக்குத் தேவைப் படும்போது அவர் அடிக்கலாம் என்றால் நமக்குத் தேவைப் படும்போது நாமும் அடிக்கலாம் தானே - இதுவே அவர்கள் கற்றுக் கொள்கின்ற பாடம்!நாம் ஒரு செயலை குழந்தையிடம் எதிர்பார்க்கும் போது - அக்க்குழந்தை அதே செயலை அனைவரும் செய்கிறார்களா என்று உன்னிப்பாக கவனிக்கிறது.

சான்றுக்கு - நாம் சிறுவர்களை தொழச் சொன்னால் அப்பா தொழுகிறாரா, அம்மா தொழுகிறாரா, ஆசிரியர் தொழுகிறாரா - என்று ஒருவர் விடாமல் பார்க்கும். எல்லாரும் கடைப் பிடித்தால் தாமும் செய்யத் தொடங்கும். இல்லையேல் குழந்தை அதனை ஏற்காது.

குழந்தைகளை அடிப்பதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதே என்கிறீர்களா? ஆம்!
”உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டி விடும் போது தொழுகையை நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டி விடும் போது தொழுகையைத் தவற விட்டால் அவர்களை அடியுங்கள்.” (முஸ்லிம்)

ஆனால் அடிப்பது என்பது ஃபர்ளோ வாஜிபோ கிடையாது! தவிர்க்க முடியாத ஒரு சில சூழ்நிலைகளில் மட்டும் அடிப்பதை பயன் படுத்திக் கொள்ள “அனுமதி” உள்ளது. அவ்வளவு தான்.
அண்ணல் நபியவகள் குழந்தைகளை அடித்திருக்கிறார்களா? நபியவர்கள் எவரையும் கை நீட்டி அடித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு முறை ஒரு வேலைக்காரச் சிறுமியை ஒரு பொருள் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்புகிறார்கள் அண்ணல் நபியவர்கள். சிறுமியோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று விடுகிறாள். நீண்ட நேரம் காத்திருந்து, காத்திருந்து, பொறுமையிழந்து, சிறுமியைத் தேடி கடை வீதிக்குப் போகிறார்கள் அண்ணலார்.
அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி அண்ண்லார் என்ன சொன்னார்கள் தெரியுமா?
“மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு மட்டும் இல்லாமலிருந்தால் உன்னை இந்த மிஸ்வாக் குச்சியால் அடித்திருப்பேன்!”
எடை குறைவான, மிருதுவான விழுது தான் மிஸ்வாக்.

அடிக்கவில்லை என்றால் குழந்தைகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று கேட்கிறீர்களா?

குழந்தைகள் பொதுவாக பல சமயங்களில் நாம் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்கள். பொய் சொல்வார்கள். க்ண்ட இடத்தில் பொருள்களைப் போட்டு வைப்பார்கள். சுத்தமாக இருக்க மாட்டார்கள், நேரம் கழித்து வீட்டுக்கு வருவார்கள். வீட்டு வேலை ஒன்றை செய்யச் சொன்னால் மாட்டேன் என்பார்கள். இது போன்ற குழந்தைகளைத் திருத்துவது எப்படி?

ஒரு முறை:
அடித்துத் திருத்த நினைப்பது. அதற்கு சொல்லப் படும் “பொன்மொழிகள்” :
- கோள் எடுத்தால் குரங்கும் ஆடும்!
- அடியாத மாடு படியாது!
- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்!
- அடி உதவுவது போல் அண்ண்ன் தம்பி உதவ மாட்டான்!

இந்த முறையினால் ஏற்படும் விளைவுகள்:
- கட்டுப் படுவார்கள் குழந்தைகள் - பய உண்ர்ச்சியினால் - அதுவும் தற்காலிகமாக! அதுவும் நமது முன்னிலையில் மட்டும்!

- ஆனால் சற்றே வயது வந்த குழந்தைகளை அடித்தால் - அது கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி விடும்! கட்டுப் பட மாட்டார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். விலகிப் போய் விடுவார்கள். மறைவாக செயல் படத் தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இன்னொரு முறை - மென்மையான முறை - சுன்னத்தான முறை:
- அன்பு செலுத்தி (Love and Compassion)
- அக்கரை காட்டி (Taking Care)
- மரியாதை கொடுத்து (Respect)
- நம்பிக்கையூட்டி (Trust)
வழி காட்டினால் - கட்டுப் படுவார்கள் - ஆனால் அது மன மாற்றத்தினால்! இது தற்காலிகம் அன்று!

ஆனால் ஒரே ஒரு நிபந்தனை: நாம் மேலே சொன்னபடி குழந்தைகள் நம் “சொல்லை” கவனிப்பதில்லை. மாறாக நமது “செயலை”த் தான் கவனிக்கிறது என்பதனை மற்ந்திடக் கூடாது.

குழந்தைகள் உடனடியாக தங்களைத் திருத்திக் கொண்டு விடுவார்கள் என்று நாம் எதிபார்த்திடக் கூடாது. மெதுவாகத் தான் மாறுவார்கள். அதுவரை பொறுமை தேவை.

குழந்தைகளிடம் தனியே உட்கார்ந்து பேசிட வேண்டும். அவர்களிடம் பேசிட வேண்டிய நேரத்தைத் தேர்வு செய்திட வேண்டும். அதைச் செய் இதைச் செய்யாதே என்று உத்த்ரவுகள் போடக் கூடாது. அது ஒரு கலந்துரையாடலாக அமைந்திட வேண்டும். கேள்விகள் கேட்டு அவர்களிடம் பதில்களை வரவழைத்திட வேண்டும். அவர்களை சிந்திக்க விட வேண்டும். அவர்களின் தவறுகளால் ஏற்படுகின்ற விளைவுகளை (Consequences) அவர்களுக்கு சுட்டிக் காட்டிட வேண்டும். அவர்களின் அறிவுக்குப் படுகின்ற மாதிரியும் அவர்களின் உள்ள்த்தைத் தொடுகின்ற வகையிலும் நமது பேச்சு அமைந்திட வேண்டும். அதில் அவர்கள் மீது நமக்கு இருக்கின்ற கருணையும் அக்கரையும் வெளிப் பட வேண்டும்.

இந்த முறையில் தான் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் படிப்படியாக!

பின் வரும் நபி மொழி நாம் அடிக்கடி கேள்விப் பட்டது தானே.
“குழந்தைகளிடம் இரக்கம் காட்டாதவனும் பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவனும் நம்மைச் சேர்ந்தவன் இல்லை!” (அஹ்மத்)

குழந்தைகளை அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று நாம் அழுத்திச் சொல்வது ஏன் தெரியுமா?

குழந்தைகளைப் பிரம்பினால் அடிப்பது, கன்னத்தில் அறைவது, தலையில் குட்டுவது போன்ற “தண்டனைகள்” குழந்தைகளின் உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படுத்துகின்ற விளைவுகள் பாரதூரமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளை வ்ன்முறையாளர்களாக மாறுவது, அவர்களிடம் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது, அவர்கள் வீட்டை விட்டு ஓட நினைப்பது எல்லாமே - குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பெற்றோர்களால் தான். நம்மிடம் மென்மை இல்லாவிட்டால் நமது குழந்தைகள் நம்மிடமிருந்து வெருண்டோடத் தான் செய்வார்கள்!

பின் வரும் ஒரு இறை வசனமே இதற்குச் சான்று:
”(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளின் காரணமாகவே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லாம் உம்மிடமிருந்து வெருண்டோடி இருப்பார்கள்.” (குர் ஆன் 3:159)

இத்த்னைக்குப் பிறகும் மென்மையான அன்பான அக்கரையான முறைகள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?
- குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுத்தவர்கள்.
- தாமே முன் மாதிரியாக நடக்கத் தவறியவர்கள்.
இவர்கள் தாம்.

நீங்கள் அப்படி இல்லையே?

No comments: