Friday, August 29, 2008

நினைவே ஒரு சங்கீதம்...!

நினைவே ஒரு சங்கீதம்...!

http://www.lankasripoems.com/



இனியவளே...!

நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....

முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத் தந்த
கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி வடாகத்திலும்
இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....

அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில் இல்லை
உயிரே...

அலுவலகத்திலும் சரி.. அறையிலும் சரி
இருபத்துநான்கு மணி நேரமும்
இங்கே AC இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி சுழலாமல்
ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..

முகத்து வியர்வையை துடைக்க
Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...

இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...

உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்
இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும் இல்லை
என் தேவதையே...

அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....

தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...

இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...

இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை நாட்களில்
ஊர் சுற்றியபோது உண்டான ஆனந்தம்
இங்கு இல்லை
என் அன்பே...

இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை கண்டாலும்
நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச் சுவரில்
பென்சிலாலும் கரியாலும் கிறுக்கிய
அழகு இதில் இல்லை
என் அழகே....

பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை, நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....







உன் இனிய நினைவுகளுடன்
உன் உறவுக்காரன்
Trichy Syed,
Dubai, U.A.E.

No comments: