44 ஆண்டுளுக்கு முன் தனுஷ்கோடி அழிந்த தினம்!
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 23, 2008, 14:01 [IST]
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/1223-sea-engulfed-danushkodi-today-44-years-back.html
தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம்.
தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி முத்தமிட்டு, விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் இன்று (டிசம்பர் 23).
1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி, அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது.
மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர்.
அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது.
இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது. ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அழகிய மீனவ நகரம்.
அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். மீனவ மக்களும், பிறரும் நிம்மதியாக கண்ணயர்ந்திருந்த நேரம் அது. ஆனால் கடல் மட்டும் காட்டுத்தனமாக விழித்துக் கொண்டிருந்தது.
பொங்கி வந்த கடல் வெள்ளமும், திரண்டு வந்த ஆழிப் பேரலைகளும், தனுஷ்கோடிக்குள் புகுந்து, புரட்டிப் போட்டது. நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.
நகரிலிருந்த முக்கால்வாசிப் பேர் முகவரி தெரியாமல் கடல் அன்னையின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு ஒரு ரயில் போய்க் கொண்டிருந்தது. அதற்கு அப்போது போட் மெயில் என்று பெயர். தனுஷ்கோடி வரை செல்லும் இந்த ரயிலில் தமிழ்நாட்டில் பிறபகுதிகளில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை செல்வார்களாம். அப்போதெல்லாம் இலங்கைக்கும், நமக்கும் நல்லுறவும், பயணப் போக்குவரத்தும் இருந்து வந்தது.
எனவே இலங்கை செல்ல ஏராளமான பயணிகள் அதில் இருந்தனர். தனுஷ்கோடியைத் தாக்கிய புயலுக்கும், ஆழிப் பேரலைக்கும் இந்த ரயிலும் தப்பவில்லை. அப்படியே கடலுக்குள் இழுத்துப் போட்டு விட்டது போட் மெயிலை, கடலில் எழுந்து வந்த ஆழிப் பேரலை.
அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர்.
அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.
தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.
ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது.
தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது - கடந்த காலத்தில் தாங்கள் 'தடம் புரண்ட' கதையை சொல்லியபடி.
ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், ஒரு எட்டு தனுஷ்கோடிக்கும் சென்று வருவது வழக்கம். இப்படி வந்து செல்பவர்களால்தான் இன்னும் தனுஷ்கோடி நமது மன 'டைரி'யிலிருந்து அழியாத காவியமாக உள்ளது.
No comments:
Post a Comment