உணவா? விஷமா?
Written by விருந்தினர் Friday, 12 December 2008 08:06
கேரள மாநிலம் காசர்கோடு, இன்னும் அந்த சாபத்தில் இருந்து மீளவில்லை. இன்று வரையிலும் காலோ, கையோ, இதயமோ, மூளையோ, உயிரோ..., ஏதோ ஒன்று இல்லாமல் தான் அங்கு குழந்தைகள் பிறக்கின்றன. சில பெரியவர்கள் திடீரென ரத்தம் கக்கி சாகின்றனர். புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, மூளை வளர்ச்சியின்மை.. என ஏதேனும் ஒரு நோய்கள் அண்டாத மனிதர்களே அங்கு இல்லை.
கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் இந்த அவலத்தின் மூலம் எது?
7000 ஏக்கரில் விரிந்து கிடந்த முந்திரி தோட்டத்தை திடீரென தாக்கி சிதைத்தன பூச்சிகள். பூச்சிகளின் தொல்லையால் நிலை தடுமாறிய கேரள முந்திரி கார்பரேஷன் எடுத்த முடிவு தான் காசர்கோடு மாவட்டத்தையே விஷக்குழியில் தள்ளியது. ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் என்ற விஷத்தை முந்திரி தோட்டத்தில் கொட்டியது அந்நிறுவனம். மிகவும் சக்தி வாய்ந்த அந்த விஷத்தால் பூச்சிகள் அழிந்ததோ இல்லையோ? நீர், நிலம், காற்றில் மிக வேகமாக ஊடுருவிய எண்டோசல்பான் மனிதர்களுக்கு கொள்ளை நோய்களை வாரி வழங்கியதுடன் ஜென்ம சனியாக அந்த மாவட்டத்தையே ஆட்டி படைக்க தொடங்கி விட்டது. 1971ல் தொடங்கி 30 வருடங்களுக்கும் மேலாக நடந்த பாவ செயலை, ஒரு டாக்டர் கண்டு பிடித்து உலகுக்கு சொல்ல, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செயவதைப்போல 2003ல் அந்த விஷத்தை தடை செய்தது கேரள உயர்நீதி மன்றம்.
இந்த கொடூரத்தை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு வருவோம்.
தஞ்சை, நாகை திருவாரூர் அடங்கிய டெல்டா பூமியில், பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக உளுந்து பயிரை புரோட்டீனிய புழுக்கள் உண்டு, இல்லையென்றாக்கி வருகின்றன. வெறுத்துப்போன விவசாயிகள் 10 நாளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 250 முதல் 500 மிலி எண்டோசல்பான் விஷத்தை தெளிக்கிறார்கள். 60 நாள் பயிரான உளுந்துக்கு 30 நாள் வரை 3 முறை மருந்து தெளிக்கப்படுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் ஒரே மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3.75 லட்சம் முதல் 7.5 லட்சம் லிட்டர் எண்டோசல்பான் காற்றில், நீரில், உணவில் கலந்து உயிருக்குள் ஊடுருவுகிறது. இது மட்டுமின்றி அதன் பிறகு பயிரிடப்படும் நெல் பயிருக்கும் இதே எண்டோசல்பானைத்தான் லிட்டர், லிட்டராக கொட்டுகிறார்கள் நம் விவசாயிகள்.
இது காசர்கோட்டைக் காட்டிலும் விபரீதமானது. பெரும்பான்மை உணவுத் தேவையை டெல்டா மாவட்டங்களே நிறைவு செய்கிறது என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த விபரீதத்துக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தான் விஷயமே!
நம் விவசாயத்துக்கு 15 ஆயிரம் வருட பாரம்பரியம் உண்டு. இன்று விவசாயத்தில் வெற்றி கண்ட எல்லா மேலை நாடுகளும் நம்மிடம் தொழில்நுட்பத்தை பிச்சை வாங்கியவைகள் தான். வீட்டுக்கு வீடு வளர்க்கப்பட்ட மாடுகளின் சாணம், வயற்காட்டோரம் இருக்கும் மரங்களின் இலை தழைகள் தான் உரங்கள். பருவத்துக்கேற்ற ரகங்கள். பயிருக்கு கேடு செய்யும் ஒரு பூச்சியிருந்தால், அதை சாப்பிடும் 5 பூச்சிகள் இயல்பாகவே வளரும் சூழல். உழைப்பு மட்டுமே விவசாயியின் முதலீடு. சாகுபடியில் கிடைக்கும் உற்பத்தி முழுவதும் லாபம். இது தான் நம் பாரம்பரியம். விவசாயிகளின் வியர்வையில் மட்டுமே உப்பை காணும் வயற்காடுகளில் உற்பத்தியாகும் அத்தனை உணவு பயிர்களும் முழு சக்தி தருவனவாக இருந்தன. கைபிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள்.., சிலந்தி, தவளை, தட்டான், குளவி, பறவைகள் என வயலே சங்கீத மேடையாக இருக்கும். ஆற்காடு கிச்சடி, திருவண்ணாமலை தூயமல்லி, புதுக்கோட்டை மாப்பிள்ளை சம்பா, தஞ்சை சம்பா மோஷனம், ஒட்டடை சம்பா, சீரக சம்பா என உலகை பொறாமைப்பட வைத்தன நம் உற்பத்தி செய்த உணவு ரகங்கள். உள்நாட்டு உணவு தேவையை நிறைவுசெய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்த நம் விவசாய தொழில்நுட்பத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பார்த்த பார்வை தான் இன்றைய அவலத்துக்கு காரணம். அதிகமில்லை. ஐம்பதே ஆண்டுகளில் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருந்த 65 சதவீத விவசாயிகளின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் கட்டத்துக்கு வந்தாயிற்று.
1949ல் தான் மாபெரும் பேரழிவுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. 1940களில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகள் பயன்படுத்தி, பின்னர் அதன் தன்மை உணர்ந்து தடை செய்யப்பட்ட டி.டி.சி, டி.டி.டி, பி.ஹெச்.சி போன்ற பூச்சி மருந்துகள் அந்த காலக்கட்டதில் தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தன. சூழ்ச்சியின் தன்மை அறியாமல் ஐந்துக்கும், பத்துக்கும் ஆசைப்பட்ட சில அதிகாரிகளை, கைக்குள் போட்டுக்கொண்டு இந்திய விவசாயிகள் மத்தியில் கடைவிரிக்கத் தொடங்கின பூச்சி மருந்து நிறுவனங்கள். சிறிது, சிறிதாக இந்த பூச்சி மருந்துகளில் மதிமயங்கினர் விவசாயிகள். 1952ல் அமெரிக்க மோட்டார் கம்பெனியான போர்டும், எண்ணை கம்பெனியான ராக்பெல்லரும் இந்திய விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உதவிகளை செய்வதாக கூறி களமிறங்கின. 1959ல் புதிய ஒட்டுரக பயிர்கள் புகுத்தப்பட்டன. அதோடு நம் விவசாயிகளின் நிம்மதி முடிவுக்கு வந்தது.
வயற்காடுகள் யூரியா, பாஸ்பேட் போன்ற உப்பின் ருசிக்கு பலியாகி மலடாக தொடங்கின.
மேலை நாடுகளின் ஒட்டுரக பயிர்கள் நம் நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு தாக்கு பிடிக்காமல் வாடி வதங்கின. மேலும் தீமை செய்யும் பூச்சிகளை அந்த பயிர்கள் ஈர்ததன. இன்று ஒட்டு மொத்த மனித குலத்துக்கே சவாலாக மாறிய பிரச்னையின் வித்து அப்போது தான் தூவப்பட்டது. ஒட்டு ரக பயிர்களையும், உரங்களையும் தந்த மேலை நாட்டு நிறுவனங்களே பூச்சி கொள்ளிகள் என்ற பெயரில் விஷங்களையும் வழங்கின. நம் உற்பத்தியை இறக்குமதி செய்த மேலை நாடுகள், உரங்களுக்கும், பூச்சிக் கொல்லிகளுக்கும் நாம் பழக்கப்பட்ட பிறகு, உரம் போட்ட பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்று கை விரித்து விட்டன. நம் பூமி சுயம் அழிந்து, உரங்களின்றி புல் பூண்டுகளைக்கூட பிரசவிக்க தகுதியற்றதாகி விட்ட நிலையில், இருக்கும் பூமியை விற்றுவிட்டு வெளிநாடுகளில் கொத்து வேலைக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி விட்டு தெருவோர டீக்கடைகளில் உக்கார்ந்து ஆடுபுலியாட்டம் ஆடுகின்றனர் விவசாய பெருங்குடி மக்கள். இது தான் ஒரு அடிமைக்கதையின் சுருக்கமான வரலாறு.
உலக அளவில் இரசாயன உரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கிறது இந்தியா. உலக நாடுகளால் தடை செயயப்பட்ட எண்டோசல்பான், மாலத்தியான், அல்ட்ரின், எண்ட்ரின், லின்டேன், குளோர்பைரிபாஸ் ( இது போபால் விஷவாயு சம்பவத்துக்கு காரணமான டோ கெமிக்கல் கம்பெனியின் தயாரிப்பு. அமெரிக்காவில் உற்பத்தியாகிறது. அங்கு தடை செய்யப்பட்டு தற்போது இந்திய வயல்களுக்குள் கொட்டப்படுகிறது). உள்பட 90 வகை பூச்சிக்கொல்லிகள், 147 வகை ரசாயான உரங்களை பயன்படுத்தி இந்திய காற்று, நிலம், நீரை விஷமாக்குகிறார்கள் விவசாயிகள். நெல், உளுந்து, பயறு, காய்கறிகள், எண்ணை, பூக்கள் என நிலங்களில் விளையும் எல்லாமே விஷமாகி விட்டது.
டிடிசி, எக்காலக்ஸ், ஆண்ட்ரின், பாலிடால் உள்ளிட்ட 12 விஷங்களுக்கு எதிராக உலக அளவில் நடத்தப்பட்ட 12 அழுக்குகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்னும் கண்மூடி கிடக்கிறது.
வியட்நாம் நாட்டு போராளிகளை ஒழிக்க அந்த அரசு, காடுகளில் ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற பயங்கர விஷ மருந்தை விமானங்கள் மூலம் தெளித்தது. அந்த ரசாயன விஷம் பட்ட மரங்கள் கருகி அழிந்தன. அந்த ஏஜென்ட் ஆரஞ்ச் விஷமும் நம் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் வரிசையில் இடம் பிடித்துள்ளது தான் அதிர்ச்சி.
வேதி பூச்சி மருந்துகளை வயல்களில் கொட்டுவதால் விவசாயிகளின் நண்பர்களான மண்புழு, தவளை, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி தட்டான் போன்ற உயிரினங்கள் தாக்குப்பிடிக்காமல் அழிந்து விட்டன. இயற்கை எதிரிகளான பூச்சிகள் விஷங்களையே புரோட்டின்களாக மாற்றிக்கொண்டு கொளுத்துப் போய்விட்டன.
விஷங்களை தெளித்தும் பூச்சிகள் அழியாததால் மேலும், மேலும் விஷங்களை கொட்டுக்கிறார்கள் விவசாயிகள். குறிப்பாக காய்கறி பயிர்களுக்கு வாரத்துக்கு 3 முறை கூட மருந்தடிக்கிறார்கள். எண்டோசல்பான் மாதிரியான பூச்சிக்கொல்லியின் வீரியம் முற்றிலும் அழிய 50 வருடங்கள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். குறைந்தபட்சம் பூச்சிமருந்தடித்து 23 நட்கள் கழித்து தான் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் நாளை பறிக்க வேண்டிய காய்கறிக்குக்கூட இன்று மருந்தடிக்கும் பழக்கம் விவசாயிகளிடம் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில காய்கறிகளில் டாக்ஸிஸ் லிங்க் (TOXICS LINK) நிறுவனம் நடத்திய சோதனையில் 80 சதவீதம் விஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உண்ணும் உணவில் 10 லட்சத்தில் 1 பங்கு விஷத்தன்மை இருக்கலாம் என்கிறது ஐநா சபை. ஆனால் இந்தியர்களின் உணவில் சராசரியாக 50 சதம் விஷம் இருக்கக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள்.
நேரடி உணவு பொருட்களான திராட்சை, வெள்ளரி, வெத்தலைகளில் கூட எண்டோசல்பான், மோனோகுரோட்டபாஸ் மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதை சாப்பிடும்போது அந்த பொருட்களால் கிடைக்கும் சத்துக்களைக் காட்டிலும் 50 சதம் அதிக பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உற்பத்தியில் பூச்சிக்கொள்ளிகள் பயன்படுத்துவது மட்டுமின்றி இப்பயிர் வகைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தங்கள் பங்குக்கு விஷத்தை சேர்க்கிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி.
பொதுவாக உளுந்து போன்ற பயறு வகைகளை இருப்பு வைக்கும் போது அந்துப்பூச்சி பதம் பார்த்துவிடும். முதலுக்கே மோசம் வரும் என்பதால் அலுமினியம் பாஸ்பேட் என்ற ஹெவி பாய்ஸனை இருப்பு வைக்கும் அறைக்குள் வைக்கிறாகள் வியாபாரிகள். அந்த விஷம் காற்றில் பரவி உளுந்திலேயே தங்கி விடுகிறது. உளுந்து நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக மாறிவிட்ட நிலையில் நுகர்வோர் இந்த விபரீதம் குறித்து கவலைப்படுவதில்லை என்பது தான் சோகம்.
மேலும் விஷம் கலந்த தவிடு, புண்ணாக்கு, பயிர்களின் மிச்சங்களை உண்பதால் மாடுகள் தரும் பால், ஆடுகளின் இறைச்சி எல்லாமும் விஷ முலாம் பூசப்பட்ட பொருட்களாக உருமாறி விட்டன.
இது போன்ற விஷங்கள் உடம்பில் நிகழ்த்தும் பாதிப்புகள் சொல்லி மாளாது. மூளை, இதயம், பெண்களின் மார்பகம், கர்ப்பப்பை, விரைப்பை போன்ற இடங்களில் தங்கி புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்குகிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பெண்களின் கொழுப்பு திசுக்களில் கலந்து தாய்ப்பால் வழி குழந்தைகளுக்கும் அந்த விஷம் சப்ளை செய்யப்படுகிறது என்று உயிரை கலங்கடிக்கிறார்கள் டாக்டர்கள்.
மல்லி, முல்லை, ரோஜா போன்ற மலர்களில் இயற்கை மணம் மறைந்து இன்று பூச்சி மருந்துகளின் நாற்றமே அடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மலர்கள் அதிகம் பயிரிடப்படும் தாமரைப்பாக்கம், வெங்கல், பூரிவாக்கம் போன்ற பகுதிகளில் பூந்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கைகளே இந்த அவலத்துக்கு சாட்சி. மேலும் அதிகபட்ச விஷம் தெளிக்கப்படும் பூக்களை தலையில் வைப்பதால் கூட சில அபாயகரமான பாதிப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாம்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு கிராமங்களில் மாடுகள் இல்லாத வீடே இல்லை. இன்றோ அடிமாடுகளாக கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மாடுகள் ஏற்றுமதியாகி விட்டன. மாடுகள் மூலம் கிடைக்கும் கோமயம், சாணம், பால், தயிர், மோர் தான் விவசாயிகளின் மூலதனம். கோமயத்தில் ஆடாதொடை, ஆடு தின்னா பாலை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, துத்தி போன்ற ஆடு சாப்பிடாத இலைகளில் 5 வகைகளை 15 நாட்கள் ஊறவைத்து அந்த நீருடன் தம்ணீர் கலந்து அடித்து தான் விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்தினர். மேலும் மாடு தரும் பொருட்களால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மிகச்சிறந்த ஊக்க மருந்து. மாடுகளை இழந்ததே உணவு விஷமானதுக்கு காரணம் என்கிறார்கள் முற்போக்கு விவசாயிகள்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்றார்கள் நம் மூதாதை சித்தர்கள். ஒரு 50 ஆண்டு இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டத்திலேனும் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.
-முடச்சிக்காடு புதியபாரதி
http://poovulagu.blogspot.com/2008/12/blog-post_12.html
www.tamilcircle.net
No comments:
Post a Comment