Sunday, February 22, 2009

தாய்மொழியை பாதுகாப்போம்

தாய்மொழியை பாதுகாப்போம்
Saturday, 21 February 2009 11:21

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாள் கொண்டாடப்படுவது போல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார அமைப்பான் யுனெஸ்கோ இந்த நாளை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடி வருகிறது.

யுனெஸ்கோவின் ஆய்வுப்படி உலகம் முழுவதும் தற்போது 6 ஆயிரத்திற்கும் கூடுதலான மொழிகள் பேசப்பட்டு வருகிறது. இவற்றில் 2500 மொழிகள் அழியும் தருவாயில் இருப்பதாக யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 196 மொழிகள் அழிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 192 மொழிகளும், இந்தோனேசியாவில் 147 மொழிகளும் அழியும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் சுமார் 199 மொழிகளை பேசுபவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே உள்ளது என்றும், மேலும் 10 முதல் 50 பேர் மட்டுமே பேசும் மொழிகளின் எண்ணிக்கையும் 100க்கும் அதிகமாக உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 3 தலைமுறைகளில் மட்டும் சுமார் 200 மொழிகள் மறைந்துவிட்டன. கடந்த ஆண்டு அலாஸ்காவில் இயாக் மொழியை பேசிக் கொண்டிருந்த ஒரே நபர் இறந்து போனதைத் தொடர்ந்து அந்த மொழியும் மறைந்துபோய்விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைக்கு உரிய தமிழ் மொழிக்கு அந்த அபாயம் வராது என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆயினும் அன்னிய கலாச்சாரத்தை பின்பற்றுவதில் நமது இளைய தலைமுறை அதிக ஆர்வம் காட்டி வருவது கவலை அளிக்கிறது. இந்த நிலை நீடித்தால் மெல்லத் தமிழ் இனி சாகும் என்று பாரதியின் கவலை உண்மையாகிவிடும்.

எனவே தம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பாதுகாப்பது மட்டுமின்றி அதனை மேலும் வளர்க்க பாடுபடுவது என்று உலக தாய்மொழி தினத்தில் உறுதியேற்போம்.
நண்பர்கள் தினம், காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் போன்றவற்றை கொண்டாடுவதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேனும் உலக தாய்மொழி தினத்தை கொண்டாடுவதில் காட்டுவோம்.

வாழ்க தமிழ. வளர்க அதன் புகழ்
nigazhvugal.com

No comments: