Saturday, February 7, 2009

சவுதிக்கான இந்திய தூதருக்கு பாராட்டு விழா

சவுதிக்கான இந்திய தூதருக்கு பாராட்டு விழா

சவூதி அரேபியாவில் நடைப்பெற்ற சவூதி தமிழ்ச்சங்க விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.

வியாழனன்று (05.02.2009) இரவு 08:30 மணிக்கு ஜித்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் மேதகு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களின் சீரிய பணிகளை பாராட்டி சவூதி தமிழ்ச்சங்கம் சார்பில் விழா நடத்தப்பட்டது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை திரு. ராபியா தொகுத்து வழங்கினார். திரு. ஜைனுலாபிதீன் வரவேற்புரை வழங்கினார். திரு. லியாகத் அலி, திரு. ஒ. பி. ஆர். குட்டி, திரு. அக்பர் பாட்சா, திரு. அப்துல் பத்தாஹ், டாக்டர். ரபிக், சவுதிக்கான இலங்கை இணைத் தூதர் மேதகு அப்துல் லத்திப் லாபிர், மற்றும் சவூதி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் "அயலகத்தில் தமிழர்கள் சிறப்பதற்கு பெரிதும் காரணம் - கல்வியே! கடமையே!! கண்ணியமே!!!" என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைப்பெற்றது.

நடுவராக திரு. குணசேகரன் பங்கேற்க, கல்வியே என்ற அணியில் டாக்டர். ஜெயஸ்ரீ மற்றும் திரு. ராமசந்திரன்; கடமையே என்ற அணியில் திரு. பீர் முஹம்மது மற்றும் திருமதி. ராபத்; கண்ணியமே என்ற அணியில் திருமதி. மைதிலி மற்றும் திரு செய்யது ராஜா ஆகியோர் பங்கு பெற்றனர்.

பட்டி மன்ற நடுவர் தனது தீர்ப்பில், இந்த மூன்று தலைப்புக்கும் தீர்ப்புக் கூற நம் தூதர் ஐயா தான் பொருத்தமானவர் என்று அவர்களின் முடிவிக்கே விட்டுவிட்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் திரு. அப்துல் சலாம் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்குப்பின், இரவு விருந்துக்கு விழாக் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த விழாவில் ஜெத்தா தமிழ் சங்கம், தஃபாரஜ்-ஜெத்தா மற்றும் கிரிட் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன .

செய்தி:
மு. இ. முஹம்மது இபுறாஹீம் மரைக்கார் ஜெத்தா, சவூதி அரேபியா

________________________________________________________________________
இந்த நிகழ்ச்சியின் பொது, சவூதி தமிழ்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் அவர்கள் திரு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டிய கவிதை:
ஆதவன் அச்சுறுத்தலில் அன்றாடம்
அல்லுலுற்று அழும் பாலைவனம்
அன்று பலப்பலப்போடு பளிச்சிட்டது!
காலை முதல் மாலை வரை
அலட்டிய ஆட்சி அழிந்தது
அடிமைப்பட்ட அவலமும் ஒழிந்ததென
பூரித்தது பாலைவனம்!
ஏனெனில் ...
அதன் படுகையில்
பெருமை மிகு புதுவையின்
புகழ் மிக்க ஐயா அவர்கள் !!
கொடியவன் கதிரவன்
கலக்கமுற்று கதறினான்
வையகத்து விடிவெள்ளி
வந்துவிட்டதே இங்குமென்று !
உங்கள் வருகை
வறண்ட இவ்வனத்துக்கு
மட்டுமல்ல
இருண்டிருந்த இந்திய
இதயங்களுக்கும் இதமளித்ததையா ...!
தாய் திருதேசத்தின்
தலை மகனாய்
இந்திய மக்களுக்கு
அரணாய்
எங்களனைவருக்கும்
வரமாய்
இந்நாட்டையும், எம்நாட்டையும்
இணைக்கும் பாலமாய்
உறவை வளர்க்கும்
உண்ணத தூதராய் வந்த
தங்களின் வருகையால்
தமிழனின் தனித்துவம்
தலைத்தூக்கியது!
தன்மானம் தழைத்தது!!
பண்பால், பாசத்தால்
பரிவால், பதவியால்
உள்ளத்தால், உரையாடலால்
உயர்ந்து விளங்கும்
ஐயா அவர்களே!
சாதனைப் படைப்பதும்
அதைச் செவ்வனே செய்து
சரித்திரம் பதிப்பதும்
தங்களின் சிறப்பாயிற்றே !
புகழும், புதுமையும்
விரல் வைத்து
வியக்கும் வண்ணம்
மேதகு தூதராய்
இரு நாட்டவரும்
பெருமைப்பட, பெருமிதமுற
தாங்களாற்றிய அரும்பணிகள்
பற்பல !
இந்திய மண்ணின் உயர்வை
தாய் மொழியின் வல்லமையை
வானுற வளர்த்திட்ட
தாங்கள் மென்மேலும்
நலத்தோடும், வளத்தோடும்
புகழோடும், வாழ்ந்து
வெற்றிகள் படைக்க
வேண்டுகிறேன் வல்லவனை!
தமிழ் உறவுகளே!
வியக்க வேண்டாம்...!!
சஞ்சலமில்லா வாழ்வில்
சுகத்தை தந்து
அவ்வப்போது
சோகத்தையும் சுமந்து
அச்சோகத்திலும் ஒரு
சுகத்தையும் ஈந்து
சிறுகதைகள் சிந்திய
என் பேனா முனையில்
இப்போது
கவிதைகளையும் சிதரச்செய்த
நீ சிறப்புற வேண்டும் !
வல்லவனே!
வையகத்தில் வாழ்ந்து
உன்னை வாழ்த்தி
என்றென்றும் வழிப்பட
வாய்ப்பளிப்பாயாக - இறைவனே
இறைஞ்சுகிறேன் - இருகரமேந்தி
உன்னை!!

No comments: