Saturday, February 7, 2009

கோடிகளைகொட்டி மாநாடுகள்; கொட்டிக்கொடுப்பவர்கள் சிந்தி...

சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கென்று ஒவ்வொரு கட்சி உதயம் என்று சொல்லுமளவிற்கு தமிழகத்தில் முஸ்லிம்கட்சிகள்/இயக்கங்கள்/அமைப்புகள் பெருத்துவிட்டன. ஒவ்வொரு தனி முஸ்லிமுக்கும் ஒரு அமைப்பு என்ற நிலைவரும்வரை விடமாட்டார்கள் போலிருக்கிறது.

இந்த அமைப்புகள்/இயக்கங்கள் அரசின் கவனத்தை ஈர்க்கிறோம் என்றபெயரிலோ, மார்க்கத்தை பரப்புகிறோம் என்ற பெயரிலோதான் இதுவரை மாநில அளவில் மாநாடுகளை நடத்திவந்தன. இப்போது பரிணாம வளர்ச்சிபெற்று ஒரு கட்சி துவங்குவதற்கு கோடிகள் செலவில் மாநில மாநாடு நடக்கிறது. இப்படி புதிய புதிய அமைப்புகளை, இயக்கங்களை, கட்சிகளை உருவாக்கி நடத்துவதற்கும், அவ்வப்போது லட்சங்கள்/கோடிகள் செலவில் மாநாடுகள் நடத்துவதற்கும் பொருளாதார உதவி செய்வது யார்?

இந்த அமைப்புகள்/ இயக்கங்கள் 'நாங்கள் எந்த வெளிநாட்டு அரசிடமோ,வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ உதவிகள் பெறமாட்டோம்' என்று பைலாவை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படியாயின் உதவுவது யார்? தனது வறுமையை போக்க, இறைவன் வழங்கிய இளமையை தொலைத்து, மனைவிமக்களை பிரிந்து அனாதையாக அரபுநாடுகளில் அற்ப சம்பளத்தில் பணியாற்றிவரும் நம்முடைய சகோதரர்கள்தான். நம்முடைய உழைப்பின் மூலம் சம்பாதித்த இந்த தொகை சமுதாயத்திற்கு பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில் தருகிறார்கள்.

ஆனால், வியர்வை சிந்தி உழைத்தபனம் வீணாக நாளிதழ்/தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும், மாநாடுகளுக்கும் விரயமாவதையும், லட்சங்கள் செலவழித்து நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மார்க்கத்தையும் தாண்டி, சக சகோதரர்களைப்பற்றிய பித்னாக்கள்தான் பெருமளவில் அரங்கேறுகிறது என்பதையும் உதவும் உள்ளங்கள் கண்டுகொள்வதில்லை. நாம் நல்வழியில் செலவுசெய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. நம்முடைய ஒவ்வொரு நயாப்பைசாவும் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் கண்காணிப்பது கடமையாகும்.

கோடிகளை கொட்டி மாநாடு நடத்தும் தொகையை வைத்து இந்த சமுதாயத்திற்கு எத்தனையோ பயனுள்ள விசயங்களை செய்யலாம். சென்னையில் பிளாட்பாரத்தில் தொழில்செய்யும் ஒரு முஸ்லிம் ஆயிரம் ரூபாய் முதலீடு இல்லாமல் தண்டலுக்கு வாங்கி வியாபாரம் செய்து கிடைக்கும் அற்ப லாபத்தில் வட்டியும் கட்டி, தன்குடும்பத்தோடு அல்லாடுகிறானே அவனுக்கு முதலீட்டுக்கு பனம்தருவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்டவுட்டுகளும் பேனர்களும் வைப்பது இறை உவப்பை பெற்றுத்தருமா?
மருத்துவம் செய்ய வசதியின்றி, எத்தனையோ ஏழைகள் இந்த இயக்கங்களின் படியேறும்போது பலநேரங்களில் விரட்டப்பட்டு, சிலநேரங்களில் உதவிகள் செய்யப்படுகிறதே! இந்த மாநாட்டு தொகையைவைத்து எத்தனையோ நோயாளிகளின் நோயை போக்கலாமே! ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணமுடியுமா? ஏடுகளின் விளம்பரத்தில் இறைவனைக்கானமுடியுமா?
நன்றாக படிக்கக்கூடிய நம்சமுதாயத்து பிள்ளைகள் பெற்றோரால் படிக்க வைக்கமுடியாமல், கல்லூரியில் கேட்கும் கட்டணத்தை செலுத்தமுடியாமல் கல்வியை தூக்கிப்போட்டுவிட்டு கடைகளில் பணியாற்றும் சமுதாய மாணவமணிகளை இந்த மாநாடு நடத்தும் தொகையில் எத்துனையோபேரை பட்டதாரிகளாக உருவாக்கலாமே? கல்விக்கு நம்பனம் செலவாவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்சிகளுக்கு செய்யும் விளம்பரங்கள் பெற்றுத்தருமா?
வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் உதவிதேடும் அமைப்பினர், அவர்கள் வெளிநாடுசெல்வதற்காக வட்டியில்லா கடன்கேட்டால், நாங்கள் வெளிநாடு செல்பவர்களுக்கு கடன்தரமாட்டோம் என்று தத்துவம் பேச, வட்டி மார்க்கத்தில் பெரும்பாவம் என்று தெரிந்திருந்தும் வட்டிக்கு வாங்கி வெளிநாட்டு வேலைக்கு வந்து, சம்பாதிப்பதில் பெரும்பங்கை வட்டிக்கு தீனியாக தந்துகொண்டு இருக்கிறானே அவனைப்போன்றோருக்கு உதவுவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? அல்லது 'கண்காட்சி' நடத்துவது இறைஉவப்பை பெற்றுத்தருமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு நாம் சொல்லும்போது 'நாங்கள் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவை செய்வதில்லையா? என்று இயக்க ஆர்வலர்கள் கேட்கலாம். நீங்கள், ஒருஆண்டுக்கு மருத்துவம்-கல்வி உள்ளிட்ட சமுதாயப்பனிகளுக்கு செய்யும் செலவையும், அமைப்பின்/கட்சியின் பலத்தை அடுத்தவர்களிடம் காட்டுவதற்காக செய்யும் செலவையும் ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் இருப்பதை காணலாம்.

எனவே, உதவி செய்யும் உள்ளங்களே! உங்கள் உதவிகள் எதற்கு பயன்படுகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். இயக்கத்தலைவர்களே! நபி[ஸல்] அவர்கள் மாநாடு போட்டு மார்கத்தை வளர்க்கவில்லை; மாநாடு போட்டு மன்னராகவில்லை. இதை கவனத்தில் கொண்டு உங்களை நம்பி தரும் தொகைகளை முழுக்க முழுக்க மார்க்கப்பிரச்சாரத்திற்கும், முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்துங்கள். மாறாக பலம்காட்டும் வித்தைக்கு செலவு செய்தால், படைத்தோனின் விசாரணைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.

--
2/06/2009 10:14:00 PM அன்று நிழல்களும் நிஜங்களும் இல் நிழல்களும் நிஜங்களும் ஆல் இடுகையிடப்பட்டது

No comments: