Wednesday, January 16, 2008

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இலவசப் பொறியியல் கல்வியினை தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரி வழங்குகிறது.
ஜுன் 2008 ஆம் ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரியும், அகில இந்திய இஸ்லாமியக் கல்வி நிறுவன குழுமமும் இணைந்து பிளஸ் டூ படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்வி படிப்பினை கருத்தில் கொண்டு 10 மாணவர்களுக்கு இலவச சேர்க்கை வழங்குகிறது எனபதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் உயர்கல்விக்காக ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடித் தகுதித் தேர்வு நடத்தியும், மாணவர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த இலவச சேர்க்கையை வழங்கி வருகிறோம்.

இவ்வாண்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் தகுதித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்குண்டான படிவத்தினை அந்தந்த மாவட்டப் பள்ளிகளிலும் பள்ளிவாசல்களிலும் நாங்கள் நியமித்துள்ள முக்கிய நபர்களிடமும் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் நேரடியாகவும் கொடுக்கலாம். அல்லது எங்கள் கல்லூரி முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் விபரங்ளுக்கும் விதிமுறைகளுக்கும் உடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
தானிஷ் அஹ்மது பொறியியல் கல்லூரி
நெ 166 முடிச்சூர் ரோடு
( பதிவு அலுவலகம் எதிரில் )
மேற்கு தாம்பரம்
சென்னை 600 045
தொலைபேசி : 9382377788/044 32918452 / 9380586462

நன்றி : சமரசம் மாதமிருமுறை ஜனவரி 2008
www.samarasam.com

சிறு குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள எளிய நடைமுறை - பத்துக் கட்டளைகள்

சிறு குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள எளிய நடைமுறை - பத்துக் கட்டளைகள்

1) தயவுசெய்து சிறுகுழந்தைகளுக்கு ஏ,பி,சி,டி..என எழுத்துக்களை முதலில் சொல்லிக்கொடுக்காதீர்கள்.

2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா,பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள்.

3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும்.

4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே கற்றுக்கொண்டோம்.

5) சிறுவர்களுக்கு அம்மா என்றால் மம்மி யில் ஆரம்பித்து - அவர்களிடம் சின்னச்சின்ன வார்த்தைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையாகப் பேசமட்டும் கற்றுக்கொடுக்கவும்.

6) சிறார்கள் எப்போதும் இது என்ன - இந்தப் பொருளை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - என்று நச்சரித்தார்கள் - என்றால் அது குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தே தீரவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களுக்குத் தெரியாததை அவர்கள் விடாப்பிடியாகக் கேட்டார்கள் என்றாலும் அதற்கான ஆங்கிலப் பதத்தை அர்த்தத்தை நீங்கள் அகராதியில் - இணையத்தில் திரட்டி அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்லிக்கொடுங்கள்.

7) இளம்குழந்தைகள் அதுஎன்ன - அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் அழகே தனிதான். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நமது கடமை.

8) நாம் எப்படி எழுத்துக்களை அறிவதற்கு முன்னரே தமிழில் பேசக் கற்றுக்கொண்டோமோ - அதே மாதிரி நமது குழந்தைகளை ஆங்கில எழுத்துக்களை சொல்லித் தருவதற்கு முன்னால் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத்தந்தே ஆகவேண்டும்.

9) அவர்கள் சில நாட்களுக்குப் பிறகு - சிறிய சிறிய வாக்கியங்களாகப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதுவரைக்கும் கூட நாம் எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்கக் கூடாது.

10) ஏராளமான வார்த்தைகளையும், புதுப்புது வாக்கியங்களையும் பேச ஆரம்பித்தபிறகு மட்டுமே ஆங்கிலத்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். நாமும் முதலில் தமிழில் பேசிவிட்டு அதுவும் நன்றாக அரட்டை அடிக்கும் அளவுக்குத் தமிழ் தெரிந்த பிறகுதானே எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டோம்.

ஆனால் இந்த சமுதாயத்தில் ஆங்கிலம் மட்டும் எழுத்திலிருந்து ஆரம்பித்து கடைசி வரையில் பேசத்தெரியாமல் எத்துணை மக்கள் மனப்புழுக்கத்துடன் வாழ்கிறார்கள்.

Mujibur Rahman (Sr. Programmer)

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசு நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு பொது அலுவலகத்திலும் குடிமகன்கள் எந்தத் தகவலையும் கேட்டு அறியலாம்.

பொது மக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கும் செய்திக் கட்டுரை இது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் 11.05.2005ல் நிறைவேற்றப்பட்டது.
ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை.

எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டும் மறுக்கப்படலாம். உதாரணத்திற்கு நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவைப் பாதிப்பவை போன்றவை.

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அலுவலகம் முதல், மத்திய, மாநில அரசு அலுவலகங்ளில் ஒரு பொது தகவல் அதிகாரி உள்ளார்.

தகவல் பெற விரும்புவோர் அவருக்கு முகவரியிட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு கொடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம்.

இதற்காக தனியாக ஏதும் படிவம் இல்லை. ஒரு வெள்ளை தாளில் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை தெளிவாக தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழ்கண்ட தகவல் வேண்டுகிறேன் என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஒரு மனுவில் எத்தனை கேள்விள் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஒவ்வொரு மனுவுடன் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியோ, வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, அரசு கருவூலத்தில் சலான் மூலமாகவோ செலுத்தலாம்.

எந்த காரணம் கொண்டும் தபாலிலோ அல்லது மணியாடர் மூலமாகவோ கட்டண தொகையை அனுப்பக்கூடாது.

சரியான அலுவலகத்தில் மனுவை அளிக்க வேண்டும்.

இவ்வாறு தகவல் கேட்கும் உங்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும்.
தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

தவறான அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டால் அவ்வலுவலக தகவல் அதிகாரியே சரியான அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு 5 நாட்கள் கால தாமதம் ஆகும்.

தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:

தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375,
முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.

தொலைபேசி எண் 044-24357580

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:

மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன்
2 வது தளம், பி-பிரிவு.
நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056

தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137

-வடிவேல் (knvadivel@gmail.com)

www.thatstamil.com