Saturday, July 25, 2009

உயிரை குடிக்கும் ஃபாஸ்ட் புட் எமன்கள் !

உயிரை குடிக்கும் ஃபாஸ்ட் புட் எமன்கள் !

( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )

http://www.mudukulathur.com/katturai.asp?id=53


இறைவன் அருளிய இயற்கையான வாழ்க்கை நடை முறைகளை மறந்துவிட்டு அதற்கு நேர்மாற்றமான நடை முறைகளை அறிமுகப்படுத்தியும், நாகரீக கலாச்சாரம் என்ற போர்வைக்குள் நாசகார அழிவுப் பாதைகளை உருவாக்கி கொள்ளும் மனிதகுலத்தை நினைத்து அழுவதா? கோபப் படுவதா? எனத் தெரியவில்லை ! இறைவனால் படைக்கப் பட்டவைகளிலேயே மிகவும் அழகான, அறிவான, உயர்ந்த பண்புகளுக்குரிய ஒரே படைப்பு மனித இனம்தான் ! மனிதருக்கும் மற்ற படைப்பினங்களுக்கும் ஒரே வித்தியாசம் பகுத்தறிவு மட்டும்தான் !

இறைவனின் முதல் படைப்பு ஆண் என்றும் அதற்கு துணை படைப்பு பெண் என்றும் தான் இயற்கை அமைந்துள்ளது. ஆண்கள் வெளியே ஆளுமை கொண்டவர்களாகவும் பெண்கள் வீட்டிற்குள் ஆளுமை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எதார்த்தத்தை எப்போது மனிதர்கள் மாற்றத் துடித்தனரோ, அப்போதே பல்வேறான தீங்குகள் நம்மை சூழ்ந்து விட்டன.

ஆணுக்குப் பெண் சமமென்பது குடும்பவியலுக்கு வேண்டுமானால் ஒரு வகையில் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் உலகவியலுக்கு அதாவது வீட்டுக்கு வெளியேயும் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்ற ஆணவப்போக்கு தொடர்வது எவ்வகையிலும் நியாயமாகாது என்பது தான் நமது நிலைபாடு !

ஒரு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவது எதற்காக? பிள்ளைகள் பெற்றுக் கொள்வது எதற்காக? பெற்றெடுத்த பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்த் தெடுப்பது யாருடைய கடமை? குடும்பவியலின் தத்துவமென்ன? இப்படி பல்வேறான கேள்விகளுக்கு குறைந்தபட்ச சிந்தனையை கூட செலுத்த முடியாத ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவதால் மனித குலத்திற்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப்போகிறது?

ஒரு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவதின் முதல் நோக்கமே மனித சந்ததிகளின் அபிவிருத்தி தான் ! இரண்டாவது கணவன் மனைவி ஒருவருக்கொருவர் துணை என்பது தானே தவிர இணை என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

தன்னை நம்பி வந்த பெண்ணை மனநிறைவுடன் வாழ வைக்க வேண்டிய கடமை ஆணுக்கு உண்டு அதனால் தான் ஆண் உழைக்க சென்று விடுகிறான். கணவன் வெளியில் சென்றுவிடுவதால் வீட்டையும் அதில் உள்ள பொருட் களையும் பாதுகாப்பது ஒழுங்குபடுத்துவது போன்றவை மனைவியின் கடமையாகி விடுகிறது. இதில் பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைகளை பராமரிப்பதும், ஆரோக்கியமான சூழலில் பாதுகாத்து வளர்ப்பதும் மனைவியின் தலைசிறந்த பணியாகும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் உழைத்து பொருளீட்டுவது ஆண்களின் கடமை என்றும் வீட்டை நிர்வகிப்பது பெண்களின் கடமையென்றும் இருந்த எதார்த்தமான வாழ்க்கை நடைமுறையில் குடும்பவியலுக் கென்று ஒரு தனிச்சிறப்பு இருந்தது. கணவன் குழந்தைகளுக்கு தேவையான உணவு வகைகளை பார்த்து, ரசித்து, ருசித்து சமைத்து கொடுக்கும் பெண்களாகவும், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தும் தாயாகவும் இருந்ததால் தான் அன்றைய காலத்தில் (Health is Wealth) ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு உயிரோட்டமிருந்தது.

அன்றைய பெண்களின் பொழுதுபோக்கே தம் பிள்ளைகளை நல்ல முறையில் ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பதுதான். தாயின் அரவணைப்பிலும், நேரடி கண்காணிப்பிலும் வளர்ந்த குழந்தைகளின் காலம் வரைக்கும் நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்குமே முதியோர் இல்லம் உருவாகியதில்லை !

காரணம் பெற்றோர்கள் பிள்ளைகள் என்ற கூட்டுக் குடும்ப தத்துவத்தில் எவ்வித இடைவெளிகளும் ஏற்பட்டதில்லை. கணவன் – மனைவி குழந்தைகள் என்ற அற்புதமான வாழ்க்கை நடைமுறையில் பொழுது விடிந்து வெளியில் வேலைக்கு சென்று விட்டு அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்பும் கணவனின் வருகைக்காகவும், காலையில் பள்ளிக்கூடம் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் தன் பிள்ளையின் வருகைக்காகவும் ஆவலுடன் காத்திருக்கும் இல்லத்தரசியின் இனிய பாசத்திற்காக ஏங்கிய கணவன், பிள்ளைகள் என்ற அந்த உணர்வை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது !

கணவன், மனைவி, பிள்ளைகள் என எல்லோரும் அமர்ந்து தங்களது உணர்வுகளையும், அன்புகளையும் பரிமாறிக் கொண்டதால் தான் பாசமும், நேசமும், மனிதாபிமானமும் அன்றைய மனிதர்களிடம் மிகைத்திருந்தது. ஆனால் இன்றோ? ஆணுக்குப் பெண் சமம் என்ற மேலை நாட்டின் சீரழிந்த கலாச்சார அடையாளத்தை நாமும் ஏற்றுக் கொண்டதால் இன்று மூலை முடுக்கெல்லாம் முதியோர் இல்லங்கள் தோன்றி விட்டன.

ஆண்கள் உழைப்புக்காக வெளியேறும் அதே நேரத்தில் பெண்ணும் உழைப்புக்காக வெளியேறுகிறாள். அவர்களது பிள்ளைகளும் படிப்பிற்காக வெளியேறுகின்றனர். வீடு பூட்டப்பட்டு விடுகிறது. மாலையில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருத்தராய் வீடு திரும்புகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் தங்களது அலுவலக கூடுதல் பணி நிமித்தமாக நீண்ட நேரம் கழித்து அதாவது குழந்தைகள் உறங்கிய பின்னரும் கூட வீடு திரும்புவதுண்டு. பெற்றோர்களின் பாசம் கிடைக்காத ஏக்கத்திலேயே குழந்தைகளும் தூங்கி விடுகின்றனர்.

பிறகு காலையில் அவசர அவசரமாக எழுந்து அவரவர் பணியில் கவனம் செலுத்தி ஒவ்வொருத்தராய் பிரிந்து விடுகின்றனர். இது போன்ற வாழ்வியல் சூழ்நிலைகள் தான் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்தி பாசப்பிணைப்புகளை வேறருக்கச் செய்து விடுகின்றன !

இதன் எதிர்கால விளைவு இன்றைய பெற்றோர்கள் நாளைய முதியோர் இல்லத்தின் நிரந்தர உறுப்பினர்களாவர். அமைதியான வாழ்க்கை முறையை இயந்திரத்தனமாய் உருவாக்கி கொண்டது யார்? பெண்களே தான் ! வீடங்கி இருக்க வேண்டிய பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் முற்றிலும் பாதிக்கப்படுவது பிள்ளைகள் தான் !

பாவம், அந்தப்பிள்ளைகளுக்கு தாய்ப்பாசம் கலந்த பாதுகாப்பான உணவை தன் கைப்பட சமைத்துக் கொடுக்க நேரமில்லாதவளாக தன்னை மாற்றிக் கொண்டதால் தற்போது ஆங்காங்கே புற்றீசல் போல குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் ஃபாஸ்ட் புட் உணவு விடுதிகள் கிளம்பி விட்டன.

அந்த உணவு விடுதிகளில் தயார் செய்யப்படும் ஒவ்வொரு வகையும் வினிகர், அஜீர்ண்மோட்டா, மிஷினரி போன்ற மனித குலத்திற்கு விரோதமான பல்முனைக் கலவைகளால் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய உணவு முறைகள் தான் தற்போது ஏதுமறியாத பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்து வருகின்றன.

கடந்த இரண்டு மாதத்தில் அமீரகத்தில் மட்டும் ரிஸாப் ஃபிரனக் (வயது 2) ஷாஜியா ரஹ்மான் (4) மர்வா பைஸல் (4) நாதன் டிசவுசா (5) செல்சியா (7) ஆகிய ஐந்து குழந்தைகள் ஃபாஸ்ட் புட் உணவை உட்கொண்டதால் இறந்துள்ளனர். என்ற செய்தியை நாளிதழ்களில் படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது !

வினிகர், அஜீர்ணமோட்டா போன்றவை குழந்தைகளின் உணவு செறிமான சக்திக்கு எமனாகும். நமது ஊர்களில் கூட இப்போது பீப் பக்கோடா, சிக்கன் பக்கோடா போன்ற வினிகர், அஜீர்ணமோட்டா கலந்த ஃபாஸ்ட் புட் விஷ உணவுகள் சக்கைப் போடு போடுகின்றன. நல்லது கெட்டதை பிரித்தறிய முடியா பிஞ்சுக் குழந்தைகளுக்கு விஷம் என்று தெரிந்தே வாங்கி கொடுக்கும் ஈவு இரக்கமில்லா பெற்றோர்களை இறைவன் மன்னிக்க மாட்டான் !

அவரவர்தம் பிள்ளை களுக்கு தத்தமது வீட்டிலேயே தேவையான உணவு பண்டங்களை தயார் செய்து கொடுக்கலாமே, என சமூக அக்கறையுடன் நாம் கேட்டால் எங்களுக்கு அதற்கேது நேரம்? என எதிர் கேள்வி கேட்கத் துடிக்கும் பெண்களே ! உங்களின் இந்தக் கேள்வியை பிள்ளைகளை பெற்றெடுப்பதற்கு முன்பே யோசித்து இருக்க வேண்டும்.

“மலடி” என்ற சமூக அவப்பெயரிலிருந்து விடுபடவே குழந்தைப் பெறுகிறோம் என நினைத்தால் அதற்கு திருமணமே செய்யாமல் இருந்து விடலாமே ! குழந்தைப் பெற்றால் அதை நல்ல முறையில் பேணி பாதுகாத்து அதற்கு தேவையான அனைத்தையும் பெற்றவளே செய்யத் துடிக்க வேண்டும் ! அது தான் குழந்தைப் பெற்றலின் உண்மையான நோக்கமாயிருக்கும்.

ஆண், பெண் உழைப்பு சம உரிமையின் அடையாளம் என நினைத்துக் கொண்டு அப்பாவிக் குழந்தைகளின் உரிமைகளை குழி தோண்டி புதைப்பது மிகப் பெரிய பாவமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பரபரப்பான வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட ஃபாஸ்ட் புட் எமனுக்கு பழி கொடுத்துவிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஐயத்தோடு நின்று போகட்டும் ! இனியாவது விழிப்புணர்வுடன் நம்முடைய முன்னோர்கள் காட்டித் தந்த பாரம்பரிய குடும்பவியல் நடைமுறைகளை பின்பற்றி குழந்தைகளின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பை உருவாக்கும் வகையில் வீட்டிலேயே சமைத்து கொடுக்கும் பெற்றோர்களாய் மாறுவோம் !

பிள்ளைகளுடன் நெருக்கமாவோம் !

வேண்டாமே, ஃபாஸ்ட் புட் எமன் உறவு!!



தொடர்புக்கு : 050 795 99 60

தங்களது கருத்துக்களை muduvaihidayath@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

நிறைகுடம்

நிறைகுடம்

http://husba.blogspot.com


உலக அழகை காண வா


நீ மனித இனம் ஒன்றே என கூற வா


புதிய வரலாறு படைத்திட நீ


உலகை சுற்றி வா


-சுற்றுலா தினம் அன்று பாடிய பாடல்


kudanthaihussain.hussain@gmail.com