Tuesday, January 5, 2010

ஈமானே-உன் விலையென்ன?

ஈமானே-உன் விலையென்ன?

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி. பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)

ஒரு மதம் மூன்று முக்கிய மாற்றங்களினை ஏற்படுத்த வேண்டும்:
மூடநம்பிக்கை என்ற திக்குத் தெரியாக்காட்டில் திண்டாடிக் கொண்டிருப்பவனை நேர் வழிகாட்டி நேர்மைப் படுத்த வேண்டும்.
சமுதாயத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்த வேண்டும்
தனி மனித அடையாளத்திலிருந்து சர்வதேசம் என்ற விசாலமான உலகத்தில் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும்.

அந்த மூன்று தகுதிகளும் இஸ்லாத்திற்கு இருக்கிறதா என்று பார்க்கலாம்.
அஞ்ஞான அரபு உலகமான ‘அய்யாமே ஜாகிலியா’ என்ற இருண்ட சூழ்நிலையில் ஒளியேற்றி வைத்த என்பெருமானார் முகம்மது நபி ஸல்லல்லாஹ_ அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட வஹி மூலம் மனிதனை புனிதமாக்க இறக்கப்பட்டது குர்ஆன் ஆகும். பல உருவங்களில் கடவுள் என்ற பெயரில் வழிபட்டும், நெறிகெட்டும் இருந்தவர்களை ஏக இறை தத்துவத்தினை ஆணித்தரமாக எடுத்துறைத்தது இஸ்லாம். வான‌ம்,பூமி,கடல்,அண்டத்திலுள்ள அத்தனை ரகசியங்களையும்-அவைகளின் மாற்றங்களையும் அறிந்தவன் எடுத்துரைத்து, அவனிடமே உங்கள் உதவியினை தேடுங்கள் என்று சொல்லி மூட நம்பிக்கைக்கு சாவு மணியடித்தது இஸ்லாம் என்பதை ஈமானுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.

இரண்டாவது தனி மனித சுதந்திரத்திற்கு வித்திட்டது இஸ்லாம். ஆண்டான்-அடிமை என்ற வித்தியாசத்தினை களைந்தெடுத்து, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளுக்கு உரிமை ஸாசனம் அளித்தது இஸ்லாம் தானே. கறுப்பினராக இருந்தாலும் தொழுனைக்கு அழைக்கும் முன்னுரிமையினை ஹஸரத் பிலாலுக்கு வழங்கி கவுரவித்த பெருமை ரஸுலுல்லாவினைச் சாரும். உலகத்தில் நாங்கள் தான் முதல் ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா கூட 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அடிமைகளுக்கு ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனால் சுதந்திரம் வழங்கப்பட்டது. பெண்சிசுக்களை பிறந்த உடனேயே உயிருடன் புதைக்கும் வழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பாலை-ஊமத்தழை சாரினை வாயில் ஊற்றி சாகடித்த பழக்கத்திற்கு பதிலாக பெண்குழந்தைகளை காப்பாற்றும் தொட்டில் குழந்தை திட்டம் 21ஆம் நூற்றாண்டில் தானே தமிழகத்தில் வந்தது. அத்தோடு இல்லாமல் ஒரு படி மேலாக பெண்களுக்கு சொத்தில் பங்கு என்றும் நிலைநாட்டியது.
திருமணம் சாட்சிகளோடு நடக்க வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் பதிவும் செய்து பெண்களுக்கு உத்திரவாதமும் அளித்தது. அந்தச் சட்டம் தற்போது தான் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் எவ்வளவு தொலை நோக்குப் பார்வை கொண்டுள்ளது என அறியலாம். இனப் படுகொலைகளை தடுத்து நிறுத்தி இன ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்தது.
மூன்றாவதாக தனி மனித நலனை விரட்டி பொது நலனுக்கும்-சர்வதேச நலனுக்கும் வித்திட்டது. ஈகைக்காகவே வறியவர்களுக்கு பொருளை ஜக்காத், சதக்கா என்று வாரி வழங்குவதிற்காக ஒரு ஈகைப் பெருநாளை ஏற்படுத்தித் தந்தது கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடமை தத்துவத்திற்கு முன்னோடி இஸ்லாம். ரஸ_லுல்லா மக்காவில் மதீனாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் வராமல் மாறாக புன்னகையுடன் வரும்போது குரைசியர்களுடன் செய்து கொண்ட ஹ_தைபியா அமைதி உடன்பாடு 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் ஏற்பட்ட ஐ.நா. உடண்படிக்கைக்கு முன்னோடி என்றால் மிகையாகுமா? ஆனால் அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஏதோ ஒரு பொய் காரணத்திற்காக இராக்கினை சின்னா பின்னமாக்கியது போல் அப்போது நடந்ததுண்டா? சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கூட இராக் மீது அமெரிக்காவுடன் கைகோர்த்து இங்கிலாந்து முன்னால் பிரதமர் டோனி பிளேயர் இங்கிலாந்தினை இராக் போருக்குள் நுழைத்தது தவறு என்றும், ஜார்ஜ் புஷ் இராக் ஜனாதிபதி சதாம் ஹுசேன் மீது ஏற்பட்ட பயத்தில் அவர் போர் தொடுத்து விட்டார் என்றும் கூறுகிறார். செய்த தவறுகள் மீண்டும் நிலை நிறுத்த முடியுமா? யாராலும். ஆகவே தான் குர்ஆனுடைய போதனைகளும் சர்வத்திற்கும் பொருத்தமானதாகும் என்பது வெள்ளிடைமலை.


மேற்கூறிய மூன்று தாரகை மந்திரங்களையும்-அதனை வஹி மூலம் ரஸுலுல்லாவிற்கு குர் ஆனாக இறக்கிய அல்லாவையும்-கடைசி நபி ரஸுலுல்லா என்று ஏற்றுக் கொண்டவர்கள் தான் உண்மையான முஸ்லிம் என சொல்லலாம். ஆனால் 28.12.09 ஆம் அன்று முகரம் பத்தாம் நாள் என்று அனைவரும் அறிவர். அன்று மாலை டி.வியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒருவர் கொடுத்த பேட்டி அதிர்ச்சியாக இருந்தது. சென்னை வாசிகளுக்கும், மற்றும் சில ஊர்களிலும் துன்பமான முகரத்தினை பெரும் திருவிழா போன்று தீ மிதித்தும், கோசாப் பெண்கள் மார்களில் கைகளால் அடித்துக் கதரியும், ஆண்கள் கூரிய கத்திகளால் உடலில் குருதியினை ஏற்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அறிந்ததே. அதே போன்ற நிகழ்ச்சியினை முதன் முதலாக நான் 1966 ஆம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது தான் பார்த்தேன். அப்போது அது எனக்கு எங்களூரில் இல்லாத நிகழ்ச்சியாக இருந்ததால் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் இஸ்லாமியர்களா என்று கூட எனக்கு ஐயப்பாடு ஏற்பட்டது. ஆனால் 28.12.09 அன்று முகரம் விழாவினை திருவல்லிக்கேணியில் ஏற்பாடு செய்தவர் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, ‘அலி ரஸுலுல்லாஹ் அவர்கள் மகன்களான ஹசன் ‍ ஹுசைன் ஆகியோரை வழிபடுவதிற்காக கொண்டாடப்படும் பண்டிகை என சொன்னது என்னைத் தூக்கி வாரிப்போட்டது.
எல்லா முஸ்லிம்களுக்கும் ரஸுலுல்லா என்பது நபிமார்களை குறிக்கும் என்பதினையும், ரலியல்லாஹ் என்றால் நபித்தோழர்களைக் குறிக்கும் என்பதினையும் அறிவர். அலி ரலியல்லாஹ்அன்கு அவர்கள் பெருமானார் அவர்களின் அருமை மகள் பாத்திமாவை மணந்து மருமகனாகவும்-வெற்றிக்கு பெயரெடுத்த வீரத்தளபதியாகவும் திகழ்ந்தவர் என்பதினை அனைத்து முஸ்லிம்களுக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அவருடைய மகன்கள் ஹசன்,ஹுசைன் ஆகியோர் பெருமானார் நெஞ்சில் ஏறிதவழ்ந்தவர்கள் என்பதினையும் அனைவரும் அறிந்ததே. ரஸ_லல்லா உயிருடன் இருந்தபோது தலை தூக்காத இனபோர்கள் அவர்கள் மறைந்த பின்பு தலைதூக்கியது. முவாவியாவின் வழித்தோன்றல் யசீதால் ஹசனும், ஹ_சைனும் அவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர் என்பது நெஞ்சில் நீங்கா வடுவாக உள்ளது. அல்லாஹ் இபுறாகிம் நபி அவர்களுக்கு வயதான காலத்திலும் இஸ்மாயில் என்ற மகனைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய ஈமானைச் சோதிப்பதிற்காக இஸ்மாயில் என்ற பாலகனை அறுத்துப் பலியிட ஆணையிட்டு அதற்கும் இபுறாகிம் நபி அவர்களையும் அவருடைய அருமை மகனார் அவர்களையும் வழிகெடுக்க சாத்தான் முற்பட்ட போதும் கூட மனந்தளராது அது இறைவன் கட்டளையென அறுக்க முற்படும் போது இறைவன் தன் வஹி மூலம் அவர்கள் ஈமானை சோதிப்பதிற்காகவே அந்த ஆணை பிறப்பித்ததாகவும்-இறைவன் சதையையோ, குருதி சிந்துவதையோ விரும்புவதில்லை என்று கூறி தடுத்து நிறுத்தினான் என்பது அல் குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மை.

ஆனால் இன்று கூட ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தி இறந்தார் என்பதிற்கு அடையாளமாக மெக்சிகோ-தாய்லாந்து போன்ற நாடுகளில் மனிதர்களை சிலுவையில் அடித்தும், தீ மிதித்தும் வழிபாடுகள் நடக்கின்றன. அதுபோன்ற செயல்களால் இறைவன் திருப்திபடுகிறானா? என்பதினை ஏன் சிந்திக்க மறுக்கிறார் முகரத்தினை திருவிழாவாகக் கொண்டாடுபவரகள்? அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதால் மாற்று மதத்தினர் கேலிப்பேச்சுக்கு இடம் முஸ்லிம்கள் கொடுக்கலாமா?

அல்லாவிஹ்வின் இடைத்தரகர்கள் என்று சிலர் கிளம்பி அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை உங்களுடம் பகிர்ந்து கொண்டால் தவறில்லை. சில மாதங்களுக்கு முன்னர் ஐமான் இனைய தளத்தில் திண்டுக்கல்லைச் சார்ந்த சகோதரர் சபீயுல்லா எனபவர் ‘சிலோன் மவுலானா’ என்பவர் எப்படியெல்லாம் அவருடைய குடும்பத்தில் நுழைந்து குழப்பத்தினை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்-சகோதர யுத்தத்திற்கும் வழிவகுக்குகிறார் என்றும்- அவருடைய காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கவும் கொடுமை செய்திருக்கிறார் என்று அழாத குறையாக முறையிட்டு இருந்தார். அதபோன்ற என் நண்பர் சொன்ன இன்னொரு உண்மைச் சம்பவத்தினையும் உங்களுடன் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சென்னையில் குடியிருக்கும் கடற்கரையோர செல்வக் செழிப்பான முஸ்லிம் ஊரைச்சார்ந்த ஒரு குடும்பத்தில் பண்ருட்டியினைச்சார்ந்த வருங்காலத்தினை கணிக்கும் இமாம் என்ற போர்வையில் ஒரு மவுலான நுழைந்த தாயை வசியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் திருமணம் நடந்த சில நாட்களிலேயே தோசம் இருக்கிறது என்ற மகளையும் அவள் கணவனிடமிருந்து பிரித்ததோடு நில்லாமல்-அந்தப் புதுப்பெண்ணுக்கு ஆபாச செல்போன் எஸ்.எம்.எஸ் தொந்தரவும் கொடுப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

நான் 1983 ஆம் ஆண்டு மலேசியா சென்ற போது எங்க@ரைச்சார்ந்த ஒருவரை கோலாலம்பூர் மலேயா மேன்சனில் பார்க்கச் சென்றேன். அப்போது ஒரு வியாபாரி அறையில் கேரளாவினைச்சார்ந்த தங்கள் என்ற பெரியவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி அந்த வியாபாரி, ‘தங்கள் அருளால் தான் இந்த அளவு தொழில் முன்னேற்றம் அடைந்தேன் என்றும் அவரைக் கேட்காமல் காலையில் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்றும் அந்த தங்கள் மந்திரித்துக் கொடுத்த தாயத்தினை கையிலும், இடுப்பிலும் கட்டியிருப்பதாகவும’; சொல்லி அதனையும் காட்டினார். அந்த வியாபாரிக்கு தன்னுடைய உழைப்பில் நம்பிக்கையில்லாததும்-ஈமானில் பிடிப்பில்லாத பேச்சாக உங்களுக்கு தெரியவில்லையா?
நான் புனையப்பட்ட வழக்கு ஒன்றில் இழுக்கப் பட்டு சிறை சென்று வந்ததினை கேள்விப்பட்டு எங்க@ரைச்சார்ந்த ஒருவர் என்னை சந்திக்க வந்தார். அவர் என்னிடம் உங்களுக்கு நேர்ந்;த கொடுமைக்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் சென்னை ஐஸ்ஹவுசில் வந்துள்ள பைஜி என்ற இமாமைப் பார்த்து அவர் துவா செய்தால் எல்லாத் துன்பங்களும் விலகும் என்று வற்புறுத்தி அழைத்தார். இவ்வளவிற்கும் அவர் படித்தவர்-மேல்நாட்டில் வேலை பார்ப்பவர். அவரிடம் நான் அதில் எனக்கு நம்பிக்கையில்லை என மறுத்துவிட்டேன். அவருக்கு ஈமானில் ஊசலாடல் இருப்பதினை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். 2..1..2010 ஆம் தேதி தினத்தந்திப் பத்திரிக்கையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நாகூர் தர்காவிற்கு தொழுகை நடத்த வந்தவருக்கு டிரஸ்டி கலிபா பொன்னாடைப்போர்த்தி கவுரப்படுத்தினார் என்ற செய்தி படத்துடன் வெளியாகி இருந்தது. மாற்று மதத்தினர் நாகூர் தர்காவினையும் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் என்று நினைக்க மாட்டார்களா? ஆகவே ஏன் அவர்களுக்கு நாம் தவறான செய்திக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

மறைந்த முன்னால் அமைச்சர் முகம்மது ஆசிப் அவர்கள் அமைச்சராக பதவியேற்றபோது அப்போதைய முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். நான் அந்த சமயத்தில் சென்னை சட்டம் ஒழுங்கு டி.சியாக பணியாற்றினேன். அவரிடம், ‘உங்களுக்கு 70 வயதிற்கு மேலாகிறது, வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள், அத்துடன் ஒரு முஸ்லிம் ஏன் காலில் விழுந்தீர்கள்’ என்ற வினவினேன். அதற்கு அவர், ‘மற்ற அமைச்சர்கள் எல்லாம் காலில் விழும்போது நான் மட்டும் காலில் விழாமல் இருந்தால் முதல்வர் கோபித்துக் கொள்வார்கள்’ என்றார். நான் சொன்னேன், “மற்றவர்களில் கண்டதையெல்லாம் கடவுள் என்று எண்ணி காலில் விழுவார்கள். ஆனால் முஸ்லிம் சஜ்தா செய்வது அல்லாஹ்வினைத் தொழும் போது தானே என்று நீங்கள் இருந்திருக்கலாமே’ என்றேன். நான் அதிகாரியாக இருந்ததால் அதற்குமேல் அவரிடம் வாதம் செய்யவும் அவர் பதில் கூறவும் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் அஹமது அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் குத்த விளக்கு ஏற்ற மறுத்து விட்டார்கள். அதற்காக வேற்று மதத்தினர் அவர் மீது ஏவுகணை தொடுத்தார்களா? இல்லையே! ஏனென்றால் படித்த மாற்று மதத்தினருக்கு அவருடைய இஸ்லாமிய மத வழிபாடுகளை தெரியாமலில்லை..

சமீபத்தில் சென்னை கலைவானர் அரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இப்போது ஒரு பெரிய பதவியில் இருக்கும் பெயரளவிற்கு முஸ்லிமாக இருக்கும் மேதாவி கவிஞர் ஒருவர் அந்த உயர்ந்த பதவியினைப் பெருவதிற்காக புகழ்க்சியில் முக்கிய பிரமுகரை திளைக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பேசும் போது, ‘பிறை பிச்சைப் பாத்திர வடிவில் உங்களிடம் பிச்சை’ கேட்பதாகச் சொன்னதாகவும் அதற்காக சமுதாயம் கண்டனக்குரல் எழுப்பியதினையும் அறியலாம்.

கவிஞர் அல்லாமா இக்பால் தன் கவிதையில், ‘இளம் பிறையே வருந்தாதே உன்னுடன் பூரணச்சந்திரன் மறைந்து இருக்கிறான்’ என்று அவர் கூறிய பூரணச்சந்திரன் வேறு யாருமில்லை. அகிலத்தினைப் படைத்து அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வதிற்கு வழிவகுக்கும் அல்லாஹ்வினைத்தானே அவ்வாறுக் குறிப்பிட்டார். பின் ஏன் ஆண்டவனிடம் படைப்புகளிடம் சில சலுகைகளை தட்டிக் கேட்பதிற்குப் பதிலாக ஏன் மண்டியிட வேண்டும்?

சிலர் தவறான தகவல்களையும் சென்னையில் பரப்பி வருகின்றனர். அது என்ன தெரியுமா? ஒவ்வொரு வசதியுள்ள முஸ்லிமும் ஹஜ் செல்வது கடமையாகும். அதனைத் தெரிந்த சில வேடதாரிகள், “திருமுல்லை-சப்பைப் பட்டணம் தர்காக்கலுக்கும் சென்றால் ஹஜ் செய்வது வேண்டியதில்லை” என்றும் தவறான செய்தியினை பரப்பி வருகிறார்கள். சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்குக் கூட பழனி சென்று முருகனை வழிபட்டு-நாடிஜோசியம் பார்க்கவும் செல்கின்றனர். இவர்களின் சோரம் போன ஈமானைக் கண்டுதான் சில இமாம்கள்-மவுலானாக்கள்-தங்கள் போன்ற வேடதாரிகள் முரீது கொடுக்கிறேன் என்று அனாச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.இந்த வேதனையினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் என் கட்டுரையின் தலைப்பினை ஈமானே உன் விலை என்ன என்றேன்?

மேலே சொன்ன செய்திகள் எல்லாம் புனையப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல. தினந்தோறும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் தானே. ஈமான் இழந்த சிலர் செய்யும் செயல்களால் படித்த இளைஞரகள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது. ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பும், ஜமாத்தும் இஸ்லாமிய மக்கள் அநாகரியங்கள், அநாச்சாரங்களில் தடம் புரளாது கண்ணை பாதுகாக்கும் இமையாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

காயல்பட்டணம் ஹாபிழ் சையீது அஹ்மத்

காயல்பட்டணம் ஹாபிழ் சையீது அஹ்மத்

ஹாபிழ் சையீது அஹ்மத் அவர்கள் 26.3.1915 இல் காயல்பட்டணத்தில் பிறந்தார். சிறு வயது முதலே அரசியல் - எழுத்து - கலை ஆகிய துறைகளில் ஈடுப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும், நெல்லை ஜில்லா போர்டிலும் உறுப்பினராக இருந்தக் காலத்தில் மூதறிஞர் ராஜாஜி, டாக்டர். சுப்பராயன் ஆகியோருடன் நெருங்கிப் பழகக் கூடியவராகவும், காந்தி மற்றும் நேரு போன்றவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றவாரகவும் இருந்தார். அவ்வப்பொழுது பலப் பத்திரிகைகளிலே கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார்.

விஞ்ஞானமும் தொழில்களும், தமிழ்கூறும் முஸ்லிம் நல்லுலகம், மார்கோ போலோவின் யாத்திரை, ஜனநாயகமும் அபேதவாதமும், பாத்திமா நாயகி பெற்ற சீதனம், சர் சையீது அஹ்மத் கான், சாந்தி மார்க்கம் கண்ட சமதர்ம தூதர், அல்லாஹ் முன் எல்லோரும் ஒன்றே ஆகிய இவரதுக் கட்டுரைகள் புகழ்பெற்றவை.

மாசில்லாமணி மகபூப் சுபுஹாணி, வள்ளல் சீதக்காதி ஆகிய இரண்டு நூல்களை இவர் எழுதி உள்ளார். வான்ப்புகழ் காயல்ப்பட்டணம் என்னும் இவரது மற்றொரு நூல் அறிய ஆய்வு நூலாகும். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் எழுதும் வன்மை உள்ளவாரகத் விளங்கினார். An Arab King of Pandya (பாண்டிய நாட்டின் அரபு வேந்தர்) என்ற இவரது ஆங்கில ஆராய்ச்சி கட்டுரையை பிரபல ஆங்கில நாளிதழான HINDU - ஹிந்து விரும்பி பிரசுரித்தது. Scientific Farming என்னும் பத்திரிகையை ஆங்கிலம் - சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும், விஞ்ஞானப் பண்ணை என்னும் தமிழ் பத்திரிகையையும் நடத்தி அதன் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

இவர் தொழில் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கினார். 1956 இல் இலங்கை அரசு நடத்திய கைத்தொழில் - விவசாயப் பொருட்காட்சியை நடத்தும் பொறுப்பில் செயற்குழு உறுப்பினாராக நியமிக்கப்பட்டு சிறப்புடன் பணியாற்றினார்.

எழுத்தாளரும் - ஆராய்ச்சியாளரும் - வர்த்தகருமான ஹாபிழ் சையீது அஹ்மத் அவர்கள் சிறந்த பேச்சாளர் ஆவார். இவர் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்தார். 1945 இல் காயல்ப்பட்டனத்தில் நடைப்பெற்ற வள்ளல் சீதக்காதி விழாவிற்கு தலைமை தாங்கினார். அவ்விழாவில் டாக்டர். ஹுசைன் நயினார், தமிழக முதல்வராக பின்னர் பதவி வகித்த சி.என் . அண்ணாதுரை ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

தகவல்: (தமிழ் வளர்த்த முஸ்லிம்கள் நூலிலிருந்து)

Rajaghiri Gazzali
www.rajaghiri.net
www.masjid-al-taqwa.blogspot.com