Friday, February 20, 2009

சிறைக்கோட்டம் - ஒரு திருப்புமுனை : Dr.முகமது அலி, IPS ( Retd ) Phd.,

சிறைக்கோட்டம் - ஒரு திருப்புமுனை : Dr.முகமது அலி, IPS ( Retd ) Phd.,

172 வருட சென்னை சென்ட்ரல் சிறைச்சாலை சென்னை புற நகர் புழலுக்கு மாற்றப்பட்டதால், அதனை இடிக்குமுன்பு பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது என்ற செய்தியும்-அதனைக் காண மக்கள் திரளாக செல்கின்றனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் கடந்த 8.2.2009-ம் தேதியிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. அதனைப் பார்க்க வந்த சில பெண்கள் தங்கள் குழைந்தைகளிடம் தவறுசெய்தால் இங்குதான் அடைப்பார்கள் என்று தெரிவித்ததாகவும் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. ஆனால் சிறைகளில் அடைக்கப்பட்ட பல பெரியவர்களால் பல நாடுகளில் அன்னிய ஆட்சி, சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் மலரச்செய்து, மாந்தர்களில் நிறத்தால், மொழியால், மதத்தால், இனத்தால், வேற்றுமை கலையப்பட்டு, மனித சமுதாயம் சம உரிமை பெற்ற சம்பவங்கள் ஏராளம், ஏராளம். அது போன்ற நல்ல செய்திகளையும் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது நமது கடமையாகும்.


ஆப்பிரிக்கா முஸ்லிம் நாடான லிபியாவில் பிரான்சு நாட்டின் ஆதிக்கம் நிலைநாட்டியிருந்தபோது ஒரு பள்ளிக்கூட வயதான ஆசிரியர் ‘உமர் முக்தார்’ மக்களை தன் வீர உரையால் தட்டி எழுப்பி பிரான்சு நாட்டின் பலமிகுந்த படையினரை சரிசமமாக நின்று போரிட்டு, பின்பு பிரான்சு படையினரால் சிறை பிடிக்கப் பட்டார். சங்கிலியால் பிணைக்கப் பட்டு நகரின் முச்சந்தியில் இழுத்து வந்து தூக்கிலிடப் படுமுன் தன் கையில் பிடித்திருந்த குர்ஆனை ஓதிவிட்டு பின் தன்னை தூக்குக் கயிறுக்கு இறையாக்கினார். அவரது மன உறுதி பிரான்சு நாட்டு அரசை கதிகலங்க வைத்து விட்டதோடு மட்டுமல்லாமல் லிபியா மக்களிடமே ஆட்சியினை ஒப்படைத்து விட்டு வெளியேறினர்.
ஆட்கொல்லி அணு ஆயுதம் இராக் அதிபர் சதாம் ஹுசைன் வைத்திருப்பதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டினைக் கூறி, ஐ.நா. அணு உலை கட்டுப்பாட்டு மைய அமைப்பின் தலைவர் அல் எர்டி அணு ஆயுதங்கள் இராக்கில் இல்லை என்று அறிவித்த பின்னரும், ஐ,நா. உலக நாடுகள் ஒப்புதல் எதும் பெறாது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அமெரிக்கா பக்க வாத்திய வித்வானான இங்கிலாந்தின் பிரதமர் டோனி பிளேயருடன் சேர்ந்து இராக்கின் மீது படை எடுத்து, செல்வக் கொழிப்பான நாட்டை நாசப்படுத்தி, அதிபரின் மகன்களை குண்டு வீசி அழித்து விட்டு, கருங்காழிகள் காட்டிக்கொடுத்ததின் விளைவாக சதாம் ஹுசைன் பிடிபட்டார். கைது செய்யப்பட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்ட போதும் தலை வணங்கா தலைவனாக ‘நான் இந்த நாட்டு ஜனாதிபதி என்னை விசாரணை செய்ய அமெரிக்காவின் கைக்கூலி உனக்கு அதிகாரமில்லை’ என்று சொல்லி தூக்குத்தண்டனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதிகார ஆணவம் கொண்ட ஜார்ஜ் புஷ்-ம், டோனி பிளேயரும் பதவி பறிபோகும் நிலையில் தாங்கள் தவறான தகவலின் பேரில் இராக் மீது போரிட்டதாக சொல்லி வருத்தம் தெரிவித்ததின் மூலம் கண்கள் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்தார்கள். சதாம் ஹுசைனின் கைது பின் விளைவாக அமெரிக்கா, இங்கிலாந்தின் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தது என்றால் மிகையாகாது.
ஆங்கிலேய ஆட்சியில் சூரியன் மறைவதில்லை என்ற கொக்கரிப்பிற்கு சவால் விட்டார் என்றதால் கடைசி முகலாய மன்னர் பகதூர் சா சபரின் இரண்டு மகன்களும் தலை துண்டிக்கப் பட்டு இறந்தாலும், ஆங்கிலேயனுக்கு அடிபணியேன் என்றதால் சிறை பிடிக்கப்பட்டு, பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்டு சொந்த மண்ணில் சாகாமல் பர்மாவில் மடிந்து அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் ஏற்றிய சுதந்திர ஜுவாலையில் இந்தியா சுதந்திரம் பெற்றது. சமீபத்தில் இந்திய துணை ஜனாதிபதி அவர் கல்லறையில் மரியாதை செலுத்தினார் என்ற செய்தியும் நாம் படித்தோம். சுதந்திரத்திற்காக போராடிய அத்துனை தலைவர்களும் சிறை சென்றவர்கள் தானே. அவ்வாறு சிறை சென்றவர்கள் சிறந்த இலக்கியப் படைப்புகளையும் தந்துள்ளார்கள். உதாரணத்திற், நேரு எழுதிய, டிஸ்கவரி ஆப் இந்தியா”, “இந்தியா வின் ஃப்ரிடம்” போன்றவை தான்.
தென் ஆப்பிரிக்காவில் மெஜாரிட்டி கறுப்பு இன மக்கள் மைனாரிட்டி வெள்ளை இனத்தவரால் அடிமையாக சம உரிமை இல்லாது நடத்தப்பட்டனர். அவர்களுக்காக குரல் எழுப்பிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்யப்பட்டார். ஆனால் வென்றது கறுப்பு இன மக்களின் போராட்டம். கிடைத்தது ஆப்பிரிக்க மக்கள் ஆட்சி. வென்றது நெல்சன் மண்டேலாவின் புகழ், கிடைத்தது நோபல் பரிசு.
பக்கத்து கடல் சூழ்ந்த நாடான மாலத்தீவில் ஒற்றை முறை ஜனாதிபதி கய்யூம் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து ஜனநாயக நிலைநாட்டப் போராட்டம் நடத்தி 15 வருடம் தனது இளம் வயதில் சிறையில் கழித்த நஜீத் இன்று மக்கள் ஆதரவை அமோகமாகப்பெற்று ஜனாதிபதியாக இருக்கிறார். தான் பதவிக்கு வந்ததும் நிருபர்கள் சந்திப்பில் ஒரு நிருபர், ‘உங்களை பல முறை சிறையில் அடைத்த முன்னாள் ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணம் உண்டா’ என்ற கேள்விக்கு ‘யாரையும் பழி வாங்கும் எண்ணம் எனக்கு இல்லை’ என்று சொல்லி இஸ்லாமிய ‘மன்னிக்கும்’ பண்பிற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்.
நான் சென்னையில் துணை கமிசனராக இருந்தபோது 1992-ஆம் வருடம் அந்தமானுக்கு குடும்பத்துடன் சென்றேன். அப்போது அங்குள்ள செல்லுலார் பிரிசன் சென்று ஒலி, ஒளி காட்சி கண்டேன். ஆங்கிலேயர் சுதந்திர போராட்ட வீரர்களை அடைத்ததின் மூலம் அவர் தப்பித்தால் கடல்மீன்கள், விலங்கினங்களிடமும், காட்டு மிருகங்கள், காட்டு மனிதர்களிடம் பலியாகி இறக்கட்டும் என்ற நோக்கத்துடன் அடைக்கப்பட்டனர். அதேபோன்று அமெரிக்காவிற்கு நான் சென்ற போது சான் பிரான்ஸிஸ்கோ நகரில் கோல்டன் கேட் அருகில் படகில் சவாரி சென்ற போது அங்கே ஒரு தீவில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக ஒரு பழம் ஜெயிலினைக் காட்டினார்கள். அதில் மிகக் கொடியக் குற்றம் செய்தவர்கள், கறுப்பு இன குற்றவாளிகள் தப்பிக்காமல் இருப்பதற்காக அடைத்து வைப்பாகளாம். ஆனால் நமது சென்னை சென்ட்ரல் ஜெயிலில் மதில் ஏறி தப்பித்த ஆட்டோ சங்கர், எல்.டி.டி.இ போராளிகளும் போன்றவர்களும் இருந்திருக்கின்றனர்.
நானும் 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி, டி.ஐ.ஜியாக பணியில் இருந்தபோது சதிகாரர்களின் சூழ்ச்சியால் சென்னை சென்ட்ரல் ஜெயிலில் இருந்த சூழ்நிலையும் அனைவரும் அறிவர். அங்கே நான் தீட்டிய கவிதையையும் உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்.


சென்ட்ரல் ஜெயில் சிறை வாசம்
எண்ணற்றோர் சென்ட்ரல் சிறையைக் கண்டார்
ஏழை பணக்காரன ஆண்டான் அடிமை
அத்தனை பேரும் அடியெடுத்து வைத்த
சென்ட்ரல் சிறையை நானும் கண்டேனே.
சுழலும் சென்ட்ரல் ஸ்டேசன் எதிரே
சுத்தம் செய்யா கூவம் ஆறு
பறக்கும் மாடி ரயில் போகுது பாரு
சுற்றி மதில் சுவரும்
மதில் மேலே கரண்டு வேலி
தப்பி ஓடும் சிறை வாசிக்கு தண்டனை என்னே என்று
லத்தி வைத்திருக்கும் வார்டரைக் கேளு!
அந்தி மயங்கி ஆறு மணியிலே
அடைத்திடுவார் கூட்டினிலே
கடித்திடுமாம் கடுங்கொசுவும்
காலை ஆறு மணிக்குத் திறந்திடுவார்
சிறைக் கதவை
மணியடித்தால் சாப்பாடு
போராட்டம் மறியல் என்று கிளம்புவாங்க
ஊரை அடித்து உலையில் போட்டு
ஊழல் செய்வாங்க
ஏறுங்க சென்ட்ரல் ஜெயிலுக்கென்றால்
ஏசிக் கார் ஏர் கூலர் வசதி
வீட்டு சாப்பாடு கேட்பாங்க

கண்துஞ்சா பசிநோக்கா உழைத்திருந்தேனே

குள்ளநரி பின்னிய வலையினாலே
கூண்டில் நானும் தள்ளப்பட்டேனே.
சின்ன சிறு வாசம் சென்ட்ரல் சிறையும் நல் வாசம்.


http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10722&Itemid=9&limit=1&limitstart=0

http://www.ilayangudikural.com/JBMohdalipage.php