Showing posts with label மார்க்கம். Show all posts
Showing posts with label மார்க்கம். Show all posts

Wednesday, May 6, 2009

குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!

குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!

எங்கள் வாழ்வும், வளமும் செழித்திட
மறையாய் வந்த அல்புர்கானே!
திரு மறையாய் வந்த அல் குர் ஆனே!
உன்னை வாழ்த்திடும் மனதினில் நிறைந்தவன்
அருட் கொடை தந்த ரஹ்மானே
(வேறு)

உன்றன் உள்ளே முழுதும் எண்ணங்கள் கோடி
எங்கள் உள்ளம் முழுதும் கொண்டாடும் கூடி
(வேறு)

அள்ளித்தான் குறையாது; சொல்லித்தான் முடியாது
கல்விக்கும் கேள்விக்கும் தாயகமாய் உண்டானது!
(வேறு)

கலைஞானக் கதிரே உன் வரவாலேதான் – எங்கள்
கலை ஞானக் கதிரே உன் வரவாலேதான் – இந்த
உலகடைந்த மகிமைக்கு அளவு முண்டோ? – என்றும்
நிலையாக ஒளி வீசி இருளகற்றியே – நல்ல
நெறிமேவும் வாழ்க்கைக்கு வழியாகினாய்!
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – ஞானக்
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – உன்றன்
கருவூலம் ஆராய்வுக் கரிதானதே – எங்கும்
மடம் நீங்கி மதி ஓங்கச் சுடரேற்றவே – மனம்
குணத்தோடு மணம் வீசும் மலராகுமே!
(வேறு)
உன்னை இறைவன் அளித்தான் மறையாகத்தானே
நீயே உயர்ந்து நின்றாய் கதிராக வானில்!
(வேறு)
எண்ணத்தான் இயலாது எண்ணித்தான் முடியாது
விண்ணுக்கும், மண்ணுக்கும் விதியாக வந்ததிது
(வேறு)
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – உந்தன்
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – கசடை
உடைத்தெறிந்து தூய்வாக்கி அறங்காக்குமே – எந்தத்
துறையேனும் எப்பொருளும் எக்கேள்வியும் –இங்கு
அருளார்ந்து மெய்ப் பொருளில் தெளிவாகுமே

அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – உயர்
அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – நல்ல
அறிவார்ந்து நேர்மையுடன் ஒழுக்கந்தரும் – உன்றன்
ஹர்பு(க்)கள் ஒவ்வொன்றும் உலகளந்திடும் – அதன்
அர்த்தங்கள் புலனுக்கு வியப்பாகுமே
(வேறு)
உந்தன் வரவால் பாலையில் வீசியது தென்றல்;
காற்றில் சுகந்தம் மணந்தது; விலையுயர்ந்தது
அரபுமண் !
(வேறு)
அகக் கண்கள் திறந்து விட்டு அஞ்ஞானம் அறுத்தெறிந்து
சுக வாழ்வில் இசையாகப் பண்ணாக வந்தானது !
(வேறு)
ஒரு மறைவான இறை மீது ஈமான் கொண்டோம் – அந்த
இறையோனின் மறை மீதில் பற்றைக் கொண்டோம் – அரும்
மறையோதும் இன்பத்தில் மனநிம்மதி – அது
புரியாது படித்தாலும் பெரும் பாக்கியமே

பெரும்மறைபொருளை நிறைத்திருந்து பெயராகினாய் – அந்த
இறை தவிர்த்துன் புதை பொருளை யாரறிவது?
ஒரு குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே – உன்னால்
குவலயத்தில் நிமிர்ந்ததெங்கள் சமுதாயமே !
(வேறு)
உன்னை ஏந்திய ஜிப்ரயீல் பெரும் பாக்கியம் அடைந்தார்
தாங்கிய ஏந்தல் முஹம்மது அரும் புனிதம் அடைந்தார்
(வேறு)
பெற்றவனின் பரிசாகப் பார் மணக்கும் மலராகப்
பெற்றிட்டோம், பேறடைந்தோம், கற்றிற்றோம்,
களிப்படைந்தோம்
(எங்கள் வாழ்வும், வளமும்…)




ஓதுங்கள் ! ஓதுங்கள் !

ஓதுவீராக ! ஓதுவீராக !

உம்மியான முஹம்மதிடம் உத்தமர்கோன் ஜிப்ரயீல்தாம்
ரம்மியமாய் எடுத்து வைத்த அடிப்படைக்கல் !

ஓதுவீராக ! ஓதுவீராக !

பேரிருளைக் கிழித்தெறிந்து உலகுயர அஹமதரைத்
தேர்ந்தெடுத்து அறிவித்த மணியோசை !

ஓதுவீராக ! ஓதுவீராக !

மணிமொழியில் வேதந்தனில் இனிய வாழ்வின் வழியாகச்
செப்பனிட்ட பாதைக்கிது ஆரம்பம் !

ஓதுங்கள் ! ஓதுங்கள் !
ஒவ்வொரு நாளும் ஓதுங்கள் !
ஒன்றிய மனத்தோடோதுங்கள் !

இத்தரை மீதில் சத்தியமென்று
முத்திரை பெற்ற மா மறையை (ஓதுங்கள்)

ஆதாரம் எவனோ அந்த ஆண்டவனே தந்த மறை
ஆதாரம் நமக்கேதென்று அறிவிப்பாய் வந்த மறை
ஆதாமும் ஹவ்வா முதலாய் வரலாற்றைச்சொல்லும் மறை
ஆதாயம் தேடித் தரவே அருட் கொடையாய் நின்ற மறை

அதன் மொழி பார்த்தால் அதன் ஒலி கேட்டால்
வறண்ட உள்ளமும் விளை நிலம் ஆகும் !

வித்தகர் நபியின் சித்தமும் வென்று
நித்தமும் பயின்ற மாமறையை ( ஓதுங்கள் )
அவகாசம் கிடைக்கும் போது அர்த்தம் பார்த்துக்
கொள்ளுங்கள்

அவகாசம் தேவையில்லை அவசியமாக ஓதுங்கள்
அர்த்தங்கள் புரியும் போது அறிவையும் பெருக்கிக்
கொள்ளுங்கள்

அறியாமல் ஓதும்போதும் அருள் மழை கிட்டும் அறியுங்கள்!
உலகினில் கேட்டால் இதற்கிணை இல்லை
தெளிவினில் பார்த்தால் முழுமையின் எல்லை

ரத்தினச் சுருக்கம்; முற்றிய விளக்கம்;
புத்தொளி வழங்கும் மாமறையை ( ஓதுங்கள் )
பிள்ளைக்குக் கல்வி முதலாய் குர்ஆன் ஓதச் செய்யுங்கள்
சொல்லுக்குச் சொல்லாய்ச் சொல்லி ஹர்பைத் திருந்தச்
செய்யுங்கள்
எல்லாமும் இறையே என்னும் கொள்கை நிலையைச்
சாற்றுங்கள்
எப்போதும் ஓதும் இன்பம் தப்பாதென்று போற்றுங்கள் !

ஒழுங்குற ஓதினால் பகுத்தறிவேறும்
நலிந்திட்ட உடலும் சுகமுடன் தேறும் !

எத்துணை சிறப்பும், எத்துணை புகழும்
பக்தியில் திளைக்கும் மாமறையை ( ஓதுங்கள் )




இகந்தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !

( மெட்டு - பீத்தே பீத்தே )

வான்வீதியில் வந்ததே இன்பராகம்
தேன்மொழியினில் பொழிந்தநல் அன்புவேதம் !

1.திருநாளிலே குகையிலே நபியின் காதில்
ஒளியாகவே ஜிப்ரயீல் வந்து ஊதினார்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
உருவானதே அறிவுக் கண்ணூற்றின் வேகம் !
( வான் வீதியில் )

2.இறைவார்த்தையில் இசைத்தது பக்திகீதம்
இகம் வாழவே அருளிய முக்திராகம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதத்தின் இறுதியாம் சக்திவேதம் !
( வான் வீதியில் )

3.கொடுநரகையும் அழித்திடும் இறையின்நாதம்
கடும்பாவங்கள் கரைத்திடும் கனிந்தராகம்
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
படர்ந்தேத்திடும் பாங்காகவே பண்புவேதம் !
( வான் வீதியில் )

4.குறைமேவினும் தெளிவுடன் மிகைத்தோதினும்
இறைவழங்கிடும் நன்மைக்கோர் எல்லையில்லை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
இகந் தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !
( வான் வீதியில் )



( க‌விஞ‌ர் ஆலிம் செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ம‌றையாத‌ காவிய‌மொன்று........... எனும் க‌விதை நூலிலிருந்து )

வெளியீடு : ம‌ணிமேக‌லைப் பிர‌சுர‌ம்

Friday, August 8, 2008

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு துபாய் தேரா அஸ்கான் சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்று வருகிறது.

06.08.2008 புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மௌலவி குதுப்புத்தீன் ஆலிம் அவர்கள் 'நபிகள் நாயகம் ( ஸல்)' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் தமிழகப் பெருமக்கள் பலர் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கென தனியிட வசதியும் செய்யப்பட்டிருந்தது.

கோட்டைப் பள்ளி

இதே போல் ஒவ்வொரு வாரமும் தேரா கோட்டைப் பள்ளியில் தமிழ் சொற்பொழிவு மற்றும் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரபி மொழியினை படிக்காதவர்கள் கூட திருக்குர்ஆனை சிறப்பான முறையில் ஓதுவதற்குப் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் தமிழ் மொழியில் சொற்பொழிவும், மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்வும் நடைபெற்று வருகின்றன.

இதனை ஆவூர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனி ஒருங்கிணைப்பு செய்து வருகிறார்.

Monday, April 7, 2008

துபாயில் மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் மார்க்கச் சொற்பொழிவு


துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ( டி பிளாக் ) சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க அறிஞர்களது சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வரும் புதன்கிழமை 09-04-2008 இஷா தொழுகைக்குப் பின்னர் இஸ்லாத்தில் இறைநேசச் செல்வர்கள் எனும் தலைப்பில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் நிகழ்த்த உள்ளார்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் 33 ஆண்டுகளாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமாக பணிபுரிந்து வருகிறார். மூன்றாவது தலைமுறை இமாம் இவர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஃரூப் செய்து வருகிறார். மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sunday, March 30, 2008

துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு


துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு

துபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது.


சிறப்புச் சொற்பொழிவாளர்

மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி


தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி
முன்னாள் முதல்வர், நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
முன்னாள் இமாம், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசல்

நிகழ்ச்சி ஏற்பாடு

விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

தொடர்புக்கு : 050 2533212 / 050 58 53 888


http://indianmuslimassociation.blogspot.com/
http://niduronline.com/?p=501
http://satrumun.com/localnews/
www.muduvaihidayath.blogspot.com

Wednesday, August 1, 2007

துபாய்-அஸ்கான் சமூக கூடத்தில் மார்க்க சொற்பொழிவு

துபாய்-அஸ்கான் சமூக கூடத்தில் மார்க்க சொற்பொழிவு

ஆகஸ்ட் 01, 2007

துபாய்: துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் வாரந்தோறும் இஸ்லாமிய மார்க்க தமிழ் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் வாரந்தோறும் மார்க்க சொற்பொழிவு நடந்து வருகிறது. வாரந்தோறும் புதன்கிழமை இரவுகளில் இஷா தொழுகைக்கு பின்னர் நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் நடைபெறும் சொற்பொழிவில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆலிம் மெளலவி ஏ. சீனி நைனார் முகம்மது தாவூதி சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.


இந்தக் கூட்டத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேல் விவரங்களுக்கு 050 4255256 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முகம்மது மரூப் தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/08/01/dubai.html