Monday, June 28, 2010

ஓ இஸ்லாமியமே !

ஓ இஸ்லாமியமே !

ஓ இஸ்லாமியமே !
எல்லா இயங்களையும் இயக்கத்தில் வென்று
இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமியமே !
உன்மீது என்ன, கண்பட்டு விட்டதா ?

மனிதனை ஏன் படைத்தோம் என்று
மறுபரிசீலனை செய்யுமுன்
மணிமகுடம் தங்கிய முஹம்மது ‘நூரை’
மண்ணில் ஒளிபாய்ச்சிட இறக்கினானே இறைவன் ;

இன்னொரு தடங்கலில்லை கியாமம் வரை
இனியதோர் ‘உம்மத்து’ வித்தானது
கனிந்திடும் இஸ்லாம் புதுப்பித்தானது !

களைகளைக் களைந்தெறிந்து கண்ணியம் தழைத்திடும்
பளிங்குப் பாதையில் நடத்திட
மெய்ஞ்ஞானக் குர்ஆனை இறக்கினானே இறைவன் ;
இறங்கிய போதெல்லாம் , மருவுடைய மனிதன்
இறங்கிடா வண்ணம் கிறங்கடா வண்ணம்
அறநெறிச் சிறகுகள் ; அறிவொளித் தூரிகை ;
பறைந்திடு மெய் பரந்திடப் பறந்திடும் பொய்ம்மை !
வாழ்வியலை வடித்தெடுத்து வகுத்தளித்து வழியமைத்த
வள்ளல் நபி வாய்வழியே இறக்கினானே அறிவுபோதம் !
இவை
உள்ளளவும் இஸ்லாத்தின் கொள்ளளவு வானளவு !
சிந்தனையைத் தூண்டியதும் சொல்லறிவைத் தாண்டியதும்
வந்தனையை வேண்டியதும் நிந்தனையை அடக்கியதும்
சந்தமும் தாளமும்போல், சமநிகராய்ச் செல்வமும் ஏழ்மையும்
பள்ளியில் பாங்குறப் பணிவதும், மாற்றார்
கொல்லையிலும் மணம்பரப்பிக் கொள்ளை கொண்டதே !
கள்ளமிலா மார்க்கமிது ; கசடறுக்கும் போர்க்கருவி !
தீர்க்கமான இஸ்லாத்தின் ‘பசிபிக்’ ஆழங்களில் முத்தெடுத்த
நேர்த்தி மிகு சான்றோர்கள் கண்டதுவோ இமயப் பிரம்மாண்டங்கள் !
அடைந்ததுவோ ‘பிரமிட்’ பிரமிப்புகள் !

அந்தத் தேடல்களில் வந்த குறிஞ்சிப்பூக்களை
மதம் பார்க்காமல் மணம் மட்டுமே பார்த்த மாண்பின் ஆன்றோர்
குதி போட்டுக் கூறினர் –
இகத்தோடிழைந்த இதமான மார்க்கம் இஸ்லாமே !
இந்நிலையில் மனம் குளிர்ந்தாய் இஸ்லாமியமே ! – இறை
சன்னதியில் பயகம்பர் வளர்த்த மார்க்கம்
பாராளும், பண்பாளும், பாவங்கள் வீழுமென்று !
ஆனால்,
நேரான பாதைக்குக் குறுக்கு வழியென் றொன்றுண்டல்லவா ?
கூரிய கத்தி கொலைக்கருவியாக மாறியதில்லையா ?
சீரறிவு சீரழிவுக் கேதுவாக அமைந்ததில்லையா ?
அவ்வாறே அமைந்த சிலர் அமைதி குலைக்கும் அட்டூழியர் !
ஒவ்வாமை ஒழுகாமை பொல்லாத கொள்கையின் மல்லர்கள் இவர்கள்!
இறைவன் இவர்கள் திருந்துவதற்கு அருட்கண் திறப்பானோ ; அல்லது மருளேதான் மறுவாழ்வில் நரகேதான் என்று மூடியிட்டு முடிப்பானோ?

பாங்கோசையும் பள்ளிவாயிலும் பண்பொழுகலும்
தாங்காத ஊனமனம் தருக்கடைந்து திரிவதினால்
ஆற்றாமையின் பொறாமையில் வேற்றுமை விதைத்து
வெறுப்பினை வளர்க்கின்றார் ; அப்பாவி மக்கட்கும் விற்கின்றார் !
இவர்களுக்கு,
ஐஸ்கீரிமின் சுவையை இனியொருமுறை
அமிழ்தமும் தருமா என்பதே ஐயம்தான் !
இஸ்லாத்தின் தாக்கம் இகமூளையைத் தாக்கியதில்
ஆக்கமூளை அகமிழந்து அழிவு மூலையானது !
ஏனிந்தச் சோக நிலை உனக்கு ? ஏனிந்த அந்தகாரச் சூழ்நிலை !
முள்ளில் போட்ட சேலையாக , கல்லில் குத்திய கையாக, நெருப்பில் விழுந்த பஞ்சாக இருமருங்கும் இன்னலுறும் நிலையேனோ?
கையேந்து, உன்னிறைவனிடம் கையேந்து !
“வையகத்தில் வானுயரப்புகழ்தந்தது என்னைச் சிலர் வெறுப்பதற்கோ ;
மெய்யகத்துத் தொடர்புடையோர் அச்சத்தில் வெருண்டிங்கே வாழ்வதற்கோ ;
பொய்யுறைந்து புரையோடிய உள்ளத்தார்
உய்யும் வழி உயர்ந்த வழி காட்டிடு அல்லாஹ் !
உன்னருளை உணர்வதற்கு உண்மைவழி காட்டிடுவாய் !
கண்ணேற்றில் துயரடைந்த கண்மணியாம் நாயகத்தைக்
காத்திறக்கிய ‘சூரா அந்நாஸின் கிருபையினால் நிறைவு செய்வாய் !”

- ஆலிம் செல்வன் .

முகவரி :
S.N.M. AHAMED SAMSUDEEN,
P.O.BOX NO : 1349,
DEIRA, DUBAI, U.A.E.
EMAIL :asdjf73@gmail.com