Showing posts with label பெட்டகம். Show all posts
Showing posts with label பெட்டகம். Show all posts

Thursday, March 19, 2009

டாக்டர் அப்துல்கலாமின் அறிவு பெட்டகத்திலிருந்து

டாக்டர் அப்துல்கலாமின் அறிவு பெட்டகத்திலிருந்து


அறிவுதான் வெல்ல முடியாதது எனக் கருதப்படுவதை வெல்லக் கூடியது.இந்த அறிவு நான்கு அம்சங்களைக் கொண்டது.
1.கற்பனைத் திறன்
2.நேர்மை
3.துணிவு
4.வெல்ல முடியாத சக்தி.

இந்த நான்கும் ஒன்று சேர்ந்து குணங்களைக் கொண்டது.இவற்றைப் பெற்றவர்கள் அறிவில் சிறந்த குடிமகன்களாகத் திகழ்வார்கள்.

கற்பனைத் திறன் பற்றி கூறவேண்டுமானால்…

கற்றல் தருவது கற்பனைத்திறன்…
கற்பனைத்திறன் தூண்டுவது சிந்தனையை…
சிந்தனை அளிப்பது அறிவு…
அறிவு உங்களை மிகச் சிறந்தவராக்கும்….

நேர்மையின் தெய்வீக அம்சங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்…அவை…

நீதி நேர்மை குடியிருக்கும் இதயங்களின் நடத்தையில் அழகு மிளிர்கிறது.

நடத்தையில் அழகு மிளிர்கின்ற இல்லங்களில் நல்லிணக்கம் மலர்கிறது….

நல்லிணக்கம் மலர்கின்ற இல்லங்கள் நிறைந்த தேசத்தில் ஒழுங்கு நிலவுகிறது.

ஒழுங்கு நிலுவுகிற தேசங்கள் நிறைந்த உலகத்தில் அமைதி தவழ்கிறது.

இதயம் நடத்தை தேசம் மற்றும் உலகம் ஆகிய நான்குக்கும் ஓர் அழகான இணைப்பு தொடர்பு உள்ளது.ஒரு நாட்டில் உள்ள அனைவருக்கும் நேர்மை பொதுவானதாக இருக்கவேண்டும்.
குடும்பத்தில் கல்வியில் சேவையில் தொழிலில் மற்றும் வர்த்தகத்தில் நேர்மை இருக்கவேண்டும்.

நிர்வாகம் அரசியல் அரசு நீதித்துறை ஆகிய அனைத்திலும் நேர்மை நிலை கொண்டு இருக்கவேண்டும்.வெல்ல முடியாத ஒரு சக்தியை அளிக்கவல்ல இந்த நேர்மைதான் இந்தியா வளந்த நாடாக மாறுவதற்கான வல்லமை அளிக்கும்.

துணிவு பற்றியும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்

வித்தியாசமாக சிந்திக்கும் துணிவு கண்டுபிடிக்கும் துணிவு இதுவரை யாரும் செல்லாத பாதையில் செல்லும் துணிவு சிக்கல்ளைத் தீர்க்கும் துணிவு.

இவையே இளைஞர்களின் உயிர்மூச்சாக இருக்கவேண்டும்…அவர்கள் வெற்றிபெற வேண்டும்…மாணவர்களின் முதல் குறிக்கோள் அவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்குபவர்களாக இருக்கவேண்டும். நாட்டுக்கான அவர்களது முதல் சேவை இதுதான்.

படிக்கும் காலத்தில் கேள்விகேட்கும் தன்மை கற்பனைவளம் தொழில் நுட்பஅறிவு தொழில் முனையும் திறன் மற்றும் அறவழியிலான தலைமைப்பண்பு ஆகியன அவரிடத்தே உருவாகியிருக்க வேண்டும். இவை ஐந்தையும் பெற்ற மாணவர் தன்னிசையாக கற்றுக் கொள்ளக் கூடிய மாணவராக வளர்ந்து நிற்பார்..

தன்னைத் தானே இயக்கிக் கொள்ளக்கூடிய தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய கற்றுக் கொள்பவராக அவர் உருவாவார். அதிகாரம் பெற்றவரை மதிக்கத் தெரிந்தவராக அவரிடம் முறைப்படி கேள்வி கேட்கத் தெரிந்தவராக இருப்பார். இவர்களைப்போன்றவர்கள் சேர்ந்துதான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும்.

இளம் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்கள்தாம் சரியான பாதையில் அவர்களை இட்டுச் செல்லும். ஐன்ஸ்டின் வாழ்க்கையில் அவர் தந்தை வாங்கித்தந்த காம்பஸ்தான் அவரை சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. அவரது 12ஆவது வயதில் பரிசளிக்கப்பட்ட புத்தகம்தான் அவருக்கு இரண்டாவது அற்புதமாக விளங்கியது. பெரிய ஆய்வுக்கூடமோ அதிக செலவு பிடிக்கும் கருவிகளோ இன்றி இந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை தனது கணித அறிவால் கண்டறிந்தார்.

வெல்ல முடியாத சக்திபற்றி சர் சி.வி.ராமன் தனது 82ஆவது வயதில் உரை நிகழ்த்தினார்.
அது இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது. என் முன்னே உள்ள இளைஞர்களே பெண்களே…நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம்…எப்போதும் நம்பிக்கையையும் துணிவையும் இழந்து விடாதீர்கள்…

உங்கள் முன் உள்ள சவாலை துணிச்சலான ஈடுபாட்டின் மூலமாகத்தான் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதிபடச் சொல்ல முடியும். இந்தியர்களின் சிந்தனை ஜெர்மன் வட ஐரோப்பியர்களின் கொஞ்சமும் குறைந்தது அல்ல. நம்மிடம் இல்லாதது துணிச்சல் மட்டுதான்.

நம்மை இயக்கும் சக்தியைப் பெற நாம் தவறிவிடுகிறோம். அது இருந்தால் நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும். நமக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இப்போது இந்தியாவுக்கு தேவைப்படுவதெல்லாம் நம்மைத் தோற்கடிக்கும் இந்த சக்திகளை அழிப்பதுதான். நமக்கு வெற்றிக்கான சக்தி வேண்டும்.

நம்மை சரியான இடத்துக்கு எடுத்துச் செல்கின்ற பாதையை தேர்வு செய்கின்ற சக்தி வேண்டும்.இந்த பூமியில் மிகச் சிறந்த இடத்தைப் பெறக்கூடிய பெருமைமிகு நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அங்கீகரிக்கும் சக்தி தேவை. இந்த வெல்ல முடியாத சக்திகளே நம்மை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றார் ராமன். எனவே நண்பர்களே அறிவு என்பது அறிவு கற்பனைத்திறன் நேர்மை துணிச்சல் வெல்ல முடியாத சக்தி.

மாணவப் பருவத்திலேயே இந்த குணாதியசங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.ஆசிரியர்களும் கல்வியாளர்களும் உண்மையான அறிவு மாணவர்களிடம் சென்று சேர வேண்டும் என்று விரும்பவேண்டும்.

-மறைஞானப்பேழை மாத இதழ் சனவரி2009



--
3/17/2009 04:32:00 PM அன்று கவி(மதி)வனம் இல் கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI ஆல் இடுகையிடப்பட்டது