Thursday, March 27, 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008 ஏப்ரல் 2 முதல் 5 வரை
துபாய் இண்டர்னேஷனல் கன்வென்ஷன் அண்ட் எக்ஸிபிஷன் செண்டரில் நடைபெற
இருக்கிறது.

இதில் பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட 500 க்கும் மேற்பட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

மேலும் விபரங்களுக்கு
www.getexcareers.com
www.icedxb.com

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
February 2, 2008

1 பிப்ரவரி 08 'திண்ணை' இதழில் சில நீக்கங்களுடன் வெளியான கட்டுரை இது. தடித்த எழுத்தில் உள்ளவை நீக்கப்பட்ட பகுதிகள்.
***********
இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் மதச் சண்டைகள் எதுவும் நிகழவில்லை.
சிதிலமடைந்திருந்த சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக சிருங்கேரி சங்கராச்சாரியார் பண உதவி வேண்டி திப்புசுல்தானுக்கு கடிதம் எழுதியபோது அதற்கு உடனடியாக பதிலளித்த அவர், கோயில் மறுநிர்மாணத்திற்கு வேண்டிய பொருளுதவிகளை தாராளமாக செய்தார். இதன் தொடர்பாக சங்கராச்சாரியாருக்கு திப்பு கன்னடத்தில் எழுதிய சுமார் 30 கடிதங்களில் அவர் இந்து மதம் மீதும் அதன் ஆன்மீகத் தலைவர்கள் மீதும் கொண்டிருந்த மதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.
சாரதா கோயில் மட்டுமின்றி, நஞ்சுங்கோட் தாலுக்காவிலிருக்கும் லட்சுமிகாந்தர் கோயில், மெல்கோட்டிலிருக்கும் நாராயணஸ்வாமி கோயில், ஸ்ரீகண்டேஸ்வரா கோயில், நஞ்சுண்டேஸ்வரா கோயில், சிரீரங்கப்பட்டணத்திலிக்கும் ரங்கநாதர் கோயில், என திப்புவிடமிருந்து நிதியோ பொருட்களோ பரிசாகப் பெற்ற கோயில்கள் பல இருக்கின்றன. இதில் ரங்கநாதர் கோயில் திப்புவின் மாளிகையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் திப்புவின் மாளிகைக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தன. அவற்றில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளுக்கு திப்புவிடமிருந்து எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.
திப்புசுல்தானின் அரசவையில் இந்துக்கள் பலர் முக்கிய பதவிகளை பெற்றிருந்தனர். அவர்களை திப்பு மிக கண்ணியத்துடன் நடத்தினார். அவரிடம் அமைச்சராக இருந்த பூர்ணய்யா என்ற பார்ப்பனரை உதாரணம் காட்டி, 'பார்ப்பனர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்' என்று சிலர் திப்புவிடம் புகார் செய்தபோது, மிகுந்த கோபமடைந்த அவர், குர்ஆனின் வசனம் ஒன்றை சுட்டிக் காட்டி 'ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்கலாகாது' என்று கண்டித்தார்.
ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட வேண்டும் என்பதை தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த வீரரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். "ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'' என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதினார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை 'விலைக்கு வாங்கி', அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.
சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையை எப்படியாவது குலைக்க வேண்டும் என்ற 'அவசியம்' ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அதற்கு அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறைதான் வரலாற்று திரிபுவாதம்.
திப்புசுல்தான் இந்துக்களையும் கிருஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் பிரிட்டிஷ் நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan, Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டவர்கள். அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைத்தான் இன்றைய வரலாற்று திரிபுவாதிகளும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
"திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்" என்று எழுதுபவர் வேறு யாருமல்லர். முஸ்லிம்களை 'துருக்கர்' என்றும் 'முகமதியர்' என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார் பாருங்கள்!
திப்புசுல்தான் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களாக மாறும்படி திப்பு வற்புறுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது. தமது அரசவையில் பல பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகளை தந்து கவுரவித்தவரும் சங்கராச்சாரியாரின் வேண்டுகோளை ஏற்று கோயில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தவரும், பார்ப்பனர் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக எல்லா பார்ப்பனர்களையும் பழிக்கலாகாது என்று சொன்னவருமான திப்பு சுல்தானைத்தான் அவ்வாறு குற்றம் கூறுகின்றனர். கொஞ்சமேனும் காமன்சென்ஸ் உள்ளவர்கள் இவற்றிலுள்ள முரண்பாட்டை புரிந்து கொள்வார்கள். கல்கத்தா பல்கலைகழக சமஸ்கிருத பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பனர் இந்தச் 'சம்பவத்தை' தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஹபீப் என்பவர் அவரை தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். பேராசிரியர் ஹபீப் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு இந்த 'ஆதாரம்' பற்றி விசாரித்தபோது, 'கெசட்டில் அப்படி ஒரு சம்பவமே குறிப்பிடப் படவில்லை' என்று பதில் வந்தது. இதுதான் ஹரி பிரசாத் போன்றவர்கள் வரலாறு எழுதும் இலட்சணம்!
சில ஆண்டுகளுக்கு முன்பு இதையே பார்ப்பன எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு தமது ஜாதிப்பற்றை நிலைநாட்டிக் கொண்டார். அதற்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதினால் அது ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டாமா? அறிவியலிலிருந்து ஆபாச சினிமா வரை எல்லா துறைகளிலும் கால் வைக்கும் சுஜாதாவிற்கு இந்த அடிப்படை தெரியாமல் போனதேன்?
மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் 'அன்பே சிவம்' என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!


--
அன்புடன்
மீரான்
smeeran.tnj@gmail.com

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்