Monday, September 15, 2008

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள்! டெல்லி செயற்குழுவில் ஒருமனதாகத் தேர்வு!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள்! டெல்லி செயற்குழுவில் ஒருமனதாகத் தேர்வு!!


http://www.muslimleaguetn.com/news.asp?

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவராக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹமது, பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் பணிகளை விரிவுபடுத்தவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தேசிய செயற்குழு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் புதுடெல்லியிலுள்ள ரஃபிமார்க் அரசியல் நிர்ணய மாடத்திலுள்ள சபாநாயகர் அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் எம்.பி. தலைமை தாங்கினார். டெல்லி இமாம் மௌலானா ஹாபிஸ் அபுல் காசிம் கிராஅத் ஓதினார்.

மத்திய இணை அமைச்சர் இ.அஹமது அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் துவக்க உரை நிகழ்த்தினார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் மற்றும் தலைவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் தேசிய அளவில் ஒரே மாதிரியாக செயல்படுவதற்கு ஏற்ற வகையில் கட்சியின் சட்ட திட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு புதிய தேசிய நிர்வாகிகள் பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டனர்:

தேசிய நிர்வாகிகள்:
தலைவர்:
இ. அஹமது (கேரளா)

பொதுச் செயலாளர்:
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. (தமிழ்நாடு)

பொருளாளர்:
தஸ்தகீர் ஐ.ஆகா (கர்நாடகா)

துணைத் தலைவர்கள்:
வழக்கறிஞர் அஹமது பக்ஷ் (ராஜஸ்தான்),
வழக்கறிஞர் இக்பால் அஹமது (உத்தர பிரதேசம்)

இணைச் செயலாளர்கள்:
நயீம் அக்தார் (பீகார்),
முஹம்மது இஸ்மாயில் பனாத்வாலா (மஹாராஷ்டிரா),
ஷாஹின்ஷா ஜஹாங்கீர் (மேற்கு வங்காளம்),
அப்துஸ் ஸமத் சமதானி (கேரளா),
குர்ரம் அனீஸ் உமர் (டெல்லி).

மேற்கண்டவாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நிர்வாகிகளை முஸ்லிம் லீகின் மூத்த தலைவர் பானக்காடு செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் முன்மொழிந்தார்.அகில இந்திய மாநாடு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய மாநாடு உத்தரபிரதேசத்தில் இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். இம்மாநாட்டில் அனைத்து மாநில நிர்வாகிகள் அந்தந்த மாநில அமைப்புப் பணிகள் பற்றி விளக்கும் வகையிலும், இளைஞர்கள் மாணவர்கள், தொழிலாளர்கள் பங்கேற்கும் வகையிலும் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்படும். அதற்குப் பின் ஒவ்வொரு மாநிலத்திலும் மண்டல மாநாடுகள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் தலைமையகம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய அலுவலகத்திற்கு புதுடெல்லியில் தனி இடம் வாங்கப்படும். அதுவரை அகில இந்திய அலுவலகமாக சென்னை மண்ணடி மரைக்கார் லெப்பைத் தெருவில் உள்ள தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஸிலே அகில இந்திய அலுவலகமாகவும் செயல்படும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தீர்மானங்கள்:
டெல்லி குண்டு வெடிப்பு, ஓரிஸ்ஸா கலவரம், பீகார் வெள்ளம், ரங்கனாத் மிஸ்ரா, கமிஷன் போன்ற தேசீய பிரச்சனைகள் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உரையாற்றியோர்:
செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙள், இ.அஹமது, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார், எச். அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், உத்தர பிரதேச தலைவர் கௌஸர் ஹயாத் கான். அஸ்ஸாம் தலைவர் முஹம்மது திலீர் கான், மேற்கு வங்க தலைவர் ஷஹீன் ஷா ஜஹாங்கீர், மகாராஷ்டிர தலைவர் ஷமீவுல்லா அன்ஸாரி, பொதுச் செயலாளர் ஹபீப் கான், கர்னாடக மூத்த தலைவர் முஹம்மது ஷம்ஷீர் இனாம்தார், ஆந்திரா தலைவர் ஷாஹித், பீகார் பொதுச்செயலாளர் செய்யது அய்னுல் ஆப்தீன், கேரள பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியில் புதிய தலைவர் இ. அஹமது நன்றி கூறினார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு தீர்மானங்கள்!


புதுடெல்லியில் 2008 செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:
டெல்லி குண்டு வெடிப்புக்கு கண்டனம்:
டெல்லியில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற தேசவிரோத சக்திகள் மறைமுகமாக நடத்திய காட்டுமிராண்டித்தனமான குண்டுவெடிப்புகளை இச்செயற்குழுக் கூட்டம் கடுமையாக கண்டிக்கிறது. சமூக கட்டுப்பாட்டை சீர்குலைத்து, நாட்டின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் அழிக்கும் பேய்த்தனமான கொடிய நடவடிக்கையை எந்த நாகரீக மக்களும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

இந்த கோழைத்தனமான செயலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், இந்த பயங்கரவாத செயல்களைத் தடுத்து நிறுத்த மேலும் எச்சரிக்கையாக இருக்கவும் மத்திய அரசை நாம் வற்புறுத்துகிறோம்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மனிதநேயத்திற்கு புறம்பான ஷைத்தானிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 2:
கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை:
சமீபத்தில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில், சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தின் உயிர்கள், உடைமைகள், மற்ற அந்தஸ்துகளைக் காப்பாற்றுவதில் மாநில அரசின் தோல்விக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த விரக்தியையும், ஏமாற்றத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

மாநில நிர்வாகத்தின் செயல்படாமை மற்றும் தாக்குதல் நோக்கம், பாசிச சக்திகள் சிறுபான்மையினருக்கு சொந்தமான வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தீ வைக்க இடமளித்துள்ளது.

சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநில அரசின் ஒருதலைபட்சமான உள் நோக்கம் மிகவும் கண்டனத்திற்குரியது.

ஒரிஸ்ஸாவில் மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும் அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இடம் பெயர்ந்தவர்கள் மீளக் குடியேற்றப்படவேண்டும் என்றும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

தீர்மானம் 3:
பீகார் வெள்ள நிலவரம்:
ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஏற்பட்ட எதிர்பாராத பிரளயத்தினால் 10 லட்சம் மக்கள் வீடிழந்தனர். பலர் உயிரையும், உடைமைகளையும் இழந்தனர். இந்த பேரழிவுக்கு செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

பாதிக்கப்பட்ட பீகார் மக்களுக்கு மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தகுந்த தருணத்தில் உதவி அளித்தமைக்காக நாங்கள் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.

30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 நிவாரண முகாம்களில் 3 லட்சம் மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்களது நிவாரணம் மற்றும் புணர்வாழ்வுப் பணிகளுக்கு இந்திய மக்கள் தாராளமாக பெரிய மனதுடன் உதவ வேண்டும் என்று செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மற்ற மனிதாபிமானிகளுடன் இணைந்து நிவாரண மற்றும் புனர்வாழ்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று இந்த கூட்டம் வற்புறுத்துகிறது.

இந்த நிவாரணப் பணிகளில் அனைவரும் தாராளமாக பங்கேற்க வேண்டும் என்று இந்த கூட்டம் அன்புடன் வேண்டுகிறது.

தீர்மானம் 4:
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு:
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்றும், நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் செயற்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவாறு, புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜி.எம்.பனாத்வாலா மற்றும் உமர் பாபகி தங்ஙள் மறைவுக்கு இரங்கல்!

புதுடெல்லியில் செப்டம்பர் 14ஆம் தேதி கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழுக் கூட்டத்தில் ஜி.எம்.பனாத்வாலா சாஹிப், சையத் உமர் பாபக்கி தங்ஙள் சாஹிப் மற்றும் சையத் உமர் ஷிஹாப் தங்ஙள் சாஹிப் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் தீர்மானம் 1:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் குலாம் மஹ்மூத் பனாத்வாலா சாஹிபின் திடீர் மறைவிற்கு செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

பனாத்வாலா சாஹிப் ஒருமைப்பாடு, நேர்மை மற்றும் எளிமைமிக்க அரிய தலைவராகவும், தனி குணாதிசயம், சிறப்பான தகுதி, சிந்தனை மற்றும் பேச்சில் திறமை பெற்றவராகவும், மனித நேய உறவுகளில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்.

முஸ்லிம் சமூகத்தில் உலகளாவிய சிறந்த நாடாளுமன்றவாதி@ ஒப்பற்ற அறிஞர் சிறப்பான ஆசிரியர்@ ஷரீஅத் சட்டம் மற்றும் முஸ்லிம் கலாச்சார அடையாளங்களை வெளிப்படுத்துவதில் சிறந்தவர்@ மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் பாதுகாவலர்@ சிறுபான்மை உரிமைகளுக்காக விட்டுக்கொடுக்காத போராளி@ அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் அறிந்தவர்@ இந்தியாவின் தலைசிறந்த குடிமகன்களில் ஒருவராக வாழ்ந்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள்.

செயல்மிக்க முயற்சியாலும், நோக்கத்தாலும் சமுதாயத்தின் பொதுச் சபைக்காகவும், நாட்டின் சேவைக்காகவும் அழகான முன்மாதிரியொன்றை பெருமளவில் நமக்கு வழங்கியுள்ளார்.

அல்லாஹ் - ரப்புல் - இஸ்ஸத் அவர்களை சுவனத்தில் உயர்பதவி அளிப்பானாக.

இரங்கல் தீர்மானம் 2:
சையத் உமர் பாபக்கி தங்ஙள் மறைவிற்கு செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களில் தலைசிறந்த மூத்த வழிகாட்டியாகவும், காப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். சமுதாயத்தின் தலைசிறந்த தலைவரான அவர் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்ய முன்வருவோருக்கு கண்ணியமிக்க தூண்டுகோலாக விளங்கினார்.

இதயப்பூர்வமான அனுதாபங்களை செயற்குழு கூட்டம் தெரிவித்துக் கொள்வதோடு அவருடைய மஃபிரத்திற்காக பிரார்த்திக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டது., எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான சுவனபதியை தந்தருள்வானாக.

இரங்கல் தீர்மானம் 3:
சையத் உமர் அலி ஷிஹாப் தங்ஙள் திடீர் மறைவுக்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

கேரள முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர் சிறந்த பாராட்டத்தக்க உந்துசக்தியாக விளங்கினார். அவருடைய மஃபிரத்திற்கு அனைவரும் பிரார்த்திப்போமாக.

மேற்கண்ட இரங்கல் தீர்மானங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுடெல்லி செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.